முன்னாள் நீதியரசர் சந்துரு
தொழிற்சங்கங்களுக்கு பணியில் இல்லாத வெளி நபர்கள் நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்படுவதைத்
தடுக்கும் வகையில் தொழிற்சங்கச் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும் என சென்னை
உயர்நீதி மன்றம் பரிந்துரை செய்துள்ளது. இது தவறானது என்று முன்னாள் நீதிபதி கே.சந்துரு
அவர்கள் கூறியுள்ளார். அதன் விபரம்: ``நாட்டிலேயே முதல் தொழிற்சங்கமான
மெட்ராஸ் லேபர் யூனியன் உருவானது சுவையான வரலாறு. பின்னி மில் நிர்வாகம் அதன் தொழிலாளர்களைக்
கடுமையாகச் சுரண்டியது. சூரிய உதயத்திற்கு முன்பு மில்லுக்குச் சென்று அஸ்தமனத்திற்கு
பிறகே வீடு திரும்பும் அவல நிலை இருந்தது. சன்மார்க்க சங்க போதனைகளை இரவு நேரங்களில்
அவர்களுக்கு அளித்த தமிழ்த்தென்றல் திரு.வி.க. தொழிலாளர்களின் அவல நிலை கேட்டு அதிர்ச்சியடைந்து, வழக்கறிஞர்
பி.பி.வாடியாவையும், அன்னிபெசன்ட் அம்மையாரையும் அழைத்து வர, அவர்களது
முயற்சியில் உருவானதே மெட்ராஸ் லேபர் யூனியன்.
தொழிற்சங்கத் தலைமையின் கீழ் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு எதிராக, சென்னை
சிட்டி சிவில் கோர்ட்டில் மில் நிர்வாகம் வழக்கு தொடுத்தது. மிகப்பெரும் தொகையை நஷ்ட
ஈடாகத் தொழிற்சங்கம் தர வேண்டும் என்று கோர்ட் தீர்ப்பளித்தது. அந்தத் தொகையை கட்ட
முடியாத சங்கத் தலைவர் சக்கரை செட்டியார் உயர்நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் அனைவரையும்
நெகிழச் செய்தது. ``நான் போட்டுள்ள உடைகளும், சில மாற்றுடைகளுமே
எனது சொத்து. அதை வேண்டுமானால் ஏலம் விட்டு வரும் பணத்தை மில் நிர்வாகத்திற்கு நீதிமன்றம்
கொடுத்துக் கொள்ளலாம். அப்படிச் செய்தாலும் கூட கட்டியிருக்கும் கோவணத்தோடு தொடர்ந்து
போராடுவேன்' எனச் சக்கரை செட்டியார் கூறினார்.
பின்னி மில் போராட்டத்திற்கு பின்னர்தான், 1926-ம் ஆண்டு
தொழிற்சங்க சட்டம் இயற்றப்பட்டு வெளி நபர் தலைமை அனுமதிக்கப்பட்டது. நாம் சுதந்திரம்
அடைந்த பிறகு இயற்றப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்திலும் சங்கம் அமைக்கும் உரிமை அடிப்படை
உரிமையாக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களுக்கு
வெளியாள் தலைமை இன்றியமையாதது. புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் வி.ஜி.ராவ், மோகன்
குமாரமங்கலம்,
எம்.ஆர்வெங்கட்ராமன், ஆர்.குசேலன், கே.எஸ்.ஜானகிராமன், பென்
வால்டர் இவர்களெல்லாம் தொழிற்சங்கத் தலைவர்களாக சிறப்பாகச் செயல்பட்டு தொழிலாளர்கள்
உரிமைகளை மீட்டெடுத்தனர். தொழிலாளர் சட்டங்களைச்
சீரமைக்க, நீதிபதி கஜேந்திர கட்கர் தலைமையேற்ற தேசிய லேபர் கமிஷனும் (1969), ரவீந்திர வர்மா தலைமையேற்ற இரண்டாவது லேபர் கமிஷனும் )1989), தொழிற்சங்கத்தில் வெளியாள் தலைமை
கூடாது என்ற கருத்தை நிராகரித்தனர். இன்றைய
சூழலில், தொழிற்சங்கப் பிரச்சனைகளைத் தீர்க்க வெளியாள் தலைமை காலத்தின் கட்டாயம். இதில்
சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
(முன்னாள் நீதியரசர் கே.சந்துரு அவர்கள் தி இந்து தமிழ் பத்திரிகையில் எழுதிய கட்டுரை)
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா