Thursday 26 December 2013

மனிதன் மாறிவிட்டான்!

V.திலகர், திருவொற்றியூர்

      ஒரு நாள் இரவு தொலைக்காட்சியில் ஒரு அரசியல் பிரச்சனையின் விவாதம் கண்டேன். பிரச்சனையை உணர முடிந்தது. விடையை மனம் ஏற்கவில்லை. என் இல்லத்தில் இன்னொரு தொலைக்காட்சியில் பழைய பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தார் என் தாயார். ஒரு மணி நேர அரசியல் விவாதம் கண்ட பின்பும் என்னால் உணர முடியாத உண்மை ஒரு பாடல் வரி என்னை வருடிய போது விடை கிட்டியது. பாடல் வரிகள் இவைதான் : வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை, வான் மதியும், நீரும், கடல் காற்றும், மலரும், மண்ணும், கொடியும், சோலையும், நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான். மதத்தில் ஏறிவிட்டான்!

      ஊடகத்தில் விவாதிக்கப்பட்ட பிரச்சனை: தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது! மத்திய அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கத் தவறுகிறது? பாடல் கேட்டுவிட்ட பின்பு எனக்கு சட்டென்று தோன்றியது இதுதான். இது மீனவர்களின் பிரச்சனையில்லை. மீன்களின் பிரச்சனை!
      இயற்கையே, மீன்களுக்கு பேசும் ஆற்றல் தந்திருந்தால் அது எழுப்பியிருக்கும் `உரிமைக்குரல்' இது எங்கள் பிரச்சனையென்று. எங்களை இலங்கை மீன் என்றும், இந்திய மீன் என்றும் பிரித்துப் பார்க்கும் உரிமையை மனிதா உனக்கு யார் தந்தது என்று? கடல் உங்கள் உரிமையில்லை. அது எங்கள் பூமி என்றும், இங்கு வந்து எங்களைப் பிடித்து உண்ண யார் தந்தது உரிமை என்று வாதிட்டிருக்கும்.

      இது மட்டுமா? மரம் பேசினால்? மண் பேசினால்? நீர் பேசினால்? மனிதா கூனிக்குறுகு! இவைகள் பேசினால் நீ சிதைந்து விடுவாய். இவை சீறினால் நாம் இருந்தத் தடம் மறைந்து போகும் என்பது மறந்து வாழும் மனிதா; இயற்கையைப் புரிந்து வாழ்! உன் எல்லையைத் தாண்டாமல், இயற்கை வளங்களை அழிக்காமல் வாழப் பழகு மனிதா, வழியிருக்கிறது.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா