Sunday, 27 April 2014

உயர்கல்வி வாய்ப்புகளும், வழிமுறைகளும்

சு.சக்கீர்
240\J030


தமிழகத்தில் பள்ளி இறுதியாண்டு தேர்வுகள் முடிவடைந்துள்ளன. தேர்வு எழுதிய மாணவர்கள் தமக்குக் கிடைக்கக்கூடிய மதிப்பெண்களின் அடிப்படையில், உயர்கல்வியைத் தேர்வு செய்யும் நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளனர். பெற்ற மதிப்பெண்கள், பொருளாதார நிலைமைகள், சமூக நீதி அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் பொறியியல், மருத்துவம், துணை மருத்துவம், இந்திய மாற்று மருத்துவம் போன்ற பல்வேறு விதமான உயர் படிப்புகளுக்கு மாணவர்களைத் தேர்வு செய்யும் முறை தமிழகத்தில் உள்ளது. பிற மாநில கல்வி முறைகளுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறை சாமானிய மக்களின் உயர்கல்வி கனவுகளை ஓரளவு நிறைவு செய்யும் விதமாகவே அமைந்துள்ளது.


பொறியியல் படிப்புக்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர்கள் தேர்வு கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூன் மாதத்தில் நடைபெறும். அதற்கான சேர்க்கை படிவத்தை அண்ணா பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்படும் கல்லூரிகளிலிருந்து ரூ.500\_ செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பொது மாணவர்களுக்கு 31%, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 26.5%, பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் 3.5%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 20% எஸ்சி 15%, அருந்ததியர் 3% எஸ்டி1% அடிப்படையில் இட ஒதுக்கீடு அமைந்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொது பிரிவில் 50% மாணவர்களை சேர்ப்பதற்காக கூடுதல் மாணவர்களை பொதுப்பிரிவில் இணைத்துக் கொள்வார்கள். பொதுப்பிரிவில் 1% மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் வாரிசுகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும், சுமார் 20 இடங்கள் அரசு கல்லூரிகளில் தனியாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைய முகவரி http://www.annauniv.edu/tnea2014.

மருத்துவம், மருத்துவம் சார்ந்த மற்ற மேல்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை கீழ்ப்பாக்கத்திலுள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் தேர்வுக்குழுவால் நடத்தப்படுகிறது. 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பல் மருத்துவக் கல்லூரி மற்றும் 14 தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், 18 பல் மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை ஒற்றைச்சாளர முறையில் 69% சமுதாய இட ஒதுக்கீடு அடிப்படையில் நடைபெறுகிறது. இணைய முகவரி www.tnhealth.org/, www.tn.gov.in விண்ணப்பக் கட்டணம் ரூ.500\_ <டிமான்ட் டிராப்ட்>

எந்தத் துறையைத் தேர்வு செய்யலாம் என்பதில் மாணவர்களும், பெற்றோர்களும் மிகவும் சிந்தித்து முடிவெடுப்பது அவசியம். மாணவர்கள் விருப்பத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். 95%ற்கு மேல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு பல்வேறு தன்னார்வ அறக்கட்டளைகள், அமைப்புகள் மூலமாக கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை நமது தொழிலாளர்களும் அறிந்து கொள்ள வேண்டும்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா