Wednesday 20 August 2014

புதிய பானை... பழைய சோறு

K.N.சஜீவ்குமார்
217\37918

தவறான கொள்கைகளால் வரக்கூடிய பிரச்சனைகளை முன்கூட்டியே கணித்துச் சொல்பவர்கள் இடதுசாரிகள். 1991ல் இந்தியா பொருளாதார மந்த நிலையில் இருந்த போது, மன்மோகன் சிங்கை இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கவல்ல பொருளாதார நிபுணர் என்று ஊடகங்கள் முன்னிறுத்தியது. அவர் கொண்டு வந்த நவீன தாராளமயம் உள்நாட்டு உற்பத்தியைப் பாதிக்கும் என்றும், இறக்குமதியை ஊக்குவிக்கும் என்றும், அதனால் பொருளாதாரம் அடிபடும் என்றும் இடதுசாரிகள் கூறினார்கள். இன்று அதை அனுபவிக்கிறோம்.


2014ல் பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போது, பொருளாதாரக் கொள்கைகளில் காங்கிரஸ், பிஜேபி இடையே வித்தியாசம் கிடையாது என்று இடதுசாரிகள் கூறினார்கள். அதையும் இப்போது கண்கூடாகப் பார்க்கிறோம். வளர்ச்சி நாயகனாக முன்னிறுத்தப்பட்ட மோடி வந்த ஒரு சில வாரங்களிலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இரயில் கட்டண உயர்வு, போதாக்குறைக்கு பட்ஜெட்டில் கசப்பு மருந்து காத்திருக்கிறது என்ற அறிவிப்பு செய்தார்.

காங்கிரஸ் கஜானாவைக் காலி செய்துவிட்டது என்று விளக்கம் சொல்லக்கூடும். கஜானாவை நிரப்ப பெரும் பணக்காரர்கள் வரி பாக்கியாக வைத்துள்ள 5,73,000 கோடி ரூபாயை வசூலிக்கலாமே! முதலாளிகள் எதிர்த்தால், அவர்களது சொத்துக்களை நாட்டுடமை ஆக்கலாமே! இங்கே ஒரு கேள்வி எழுகிறது... ரூ.5000 கோடியை ஊடகங்களுக்கு மட்டும் செலவு செய்து வெற்றி பெற்ற மோடிக்கு இந்தப் பணம் எங்கிருந்து வந்தது? அதற்கு அவர் செய்யப்போகும் கைம்மாறு என்ன? செலவு செய்தவர்களுக்கு பதிலுதவி செய்வாரா..? அல்லது ஏழை மக்களுக்குத் திட்டங்கள் வகுப்பாரா?

நான் டீக்கடை வைத்து கஷ்டப்பட்டு முன்னேறியவன் என்று சொன்ன மோடி, ஏழைகளின் வயிற்றில் அடிக்காமல் இருக்கலாமே? யார் அவரது கைகளைக் கட்டினார்கள்? பெட்ரோல், டீசல் விலை உயர்வு யாரை காவு வாங்கப் போகிறது? ஏழை, நடுத்தர மக்களையா? பெரும் பணக்காரர்களையா?

தேர்தல் அறிக்கையை மோடி, ஒரு கட்டத் தேர்தல் முடிந்த பின்புதான் வெளியிட்டார். அது வந்தவுடன் அபிஷேக் சிங்வி இது காங்கிரஸ் அறிக்கையைக் காப்பியடித்து எழுதப்பட்டது என்றார். பொருளாதாரக் கொள்கைகளில் காங்கிரஸ், பிஜேபி கட்சிகளுக்கிடையே வித்தியாசம் இல்லை என்பதற்கு இதுவே சான்று.

அவசரச் சட்டங்கள் மூலம் காங்கிரஸ் உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றை விவாதமில்லாமல் கொண்டு வந்தது. பார்லிமெண்ட் படிகளில் விழுந்து வணங்கிய மோடி, பாராளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாரா? கங்கா_மா என்று நதியை வணங்கிய மோடி, பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு செய்வாரா?

வாஜ்பாய் அரசில் பொதுத்துறையின் சொத்துக்களை விற்பதற்கு அருண் சோரி தலைமையில் ஒரு அமைச்சகமே இருந்தது. அதே வழியில், புல்லட் டிரெய்ன் என்றெல்லாம் ஆசை காட்டி ரயில்வேயை அரசு தனியார் மயமாக்க முடிவு செய்துள்ளது. பிரதமர் மாறியுள்ளார். கொள்கை மாறவில்லை.

மோடி அரசின் இரயில்வே பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டும் நெருக்கடியை நீடிக்கவே செய்யப் போகின்றன. பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றைக் குறைக்க எந்தத் திட்டமும் இல்லை. 2008ல் நெருக்கடியில் இந்தியா சிக்காததற்குக் காரணம் அன்று அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வலுவாக இருந்ததே.

4வருடத்தில் காங்கிரஸ் ஆட்சி பொதுத்துறைச் சொத்தைத் தனியார் மயமாக்கியது ரூ.56,900 கோடி. ஆனால் பிஜேபி வந்த ஒரே மாதத்திற்குள் ரூ.80,000 கோடி பொதுத்துறைச் சொத்துகளை விற்க திட்டமிட்டுள்ளது. எனவே, காங்கிரஸ் சென்ற தவறான பாதையில் பிஜேபி அதைவிட வேகமாக செல்கிறது என்பதே உண்மை. வகுப்புவாதக் கறையைத் தாங்கி நிற்கும் மோடி மாறி விட்டார் என்கிறார்கள். மோடி மாறவில்லை என்பதே சமீபகால நடவடிக்கைகள் நமக்குப் பட்டவர்த்தனமாகக் காட்டுகின்றன.

எங்கோ படித்தது...

பல்லைக் கழற்றாத பாம்பு
வாலைக் கழற்றி என்ன?
தோலைக் கழற்றி என்ன???

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா