Saturday 28 June 2014

மனிதன் மகத்தானவன்

J.ஜேசுதாஸ்,
மாநிலச் செயற்குழு
தமுஎகச

இரண்டாயிரம் ஆண்டின் உலகின் மாபெரும் தத்துவ ஆசான் காரல் மார்க்ஸ் தத்துவம் குறித்துக் கூறும்போது `ஆகப்பெரும் தத்துவஞானத் தேடலில் மதங்கள் குறித்தான ஞானம் ஒரு முன் தேவையாக இருக்கிறது' என்கிறார். நாம் புரிந்து கொள்ளும்படி சொல்ல வேண்டுமெனில் மதங்கள் பற்றிய அறிவு அதன் தோற்றம் வளர்ச்சி நவீன காலத்தில் அது எப்படி பரிணாமம் பெற்றிருக்கிறது என்பதை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். காரணம் அது வரலாற்று காலத்துக்கும் முந்தையது, மிகவும் பழைமையானது. எளிதில் புரிந்து கொள்ளவும் இயலாதது.

இந்த உலகில் வாழ்ந்தாக வேண்டிய அவசியத்தில் மனிதர்கள் இயற்கையை எதிர்த்து வாழ்க்கையை நடத்திய காலத்தில் தோன்றியது மதம். இக்காரணத்தாலேயே உலகின் அனைத்து மூலைகளிலும் வாழ்ந்த மனிதக் கூட்டங்கள் தங்களுக்கான இறைவனை, அவரவர்கள் புரிந்து கொண்ட வகை வகையான கடவுளர்களை அதன் கொள்கைகளை வரையறுத்துக் கொண்டனர். ஆதி மனிதர்கள் தாய்வழி சமூக மக்கள், தன்னைப் பெற்றெடுத்த தாயைத் தான் அவர்களுக்குத் தெரியும். தனது தந்தை யார் என்பதை அறியாதவர்கள். ஒரு குலக்குழுவைச் சார்ந்த அவர்கள் இன்னோர் குலக்குழுவின் பெண்களுக்கு கணவன்மார்கள். வரைமுறையற்ற புணர்வு கலாச்சாரம் கொண்ட சமூகம் அது. எனவே, ஒரு பெண்ணுக்கு ஒருவன் மட்டுமே கணவன் அல்ல, அதே போல ஒரு ஆணுக்கு ஒருத்தி மட்டுமே மனைவியுமல்ல. அச்சமூகத்தின் வயது முதிர்ந்த அன்றைய வேட்டை சமூகத்தில் பெண்ணே, சமூகத்தை வழிநடத்தியவள். இது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.


உலகில் அனைத்து மக்கள் குழுக்களின் ஆதி தெய்வமும் பெண்ணே. இன்றைக்கும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. நம் தமிழ்ச் சமூகம் அதற்கு விதிவிலக்கல்ல. சங்க இலக்கியப் பதிவுகளில் அப்பெண் தெய்வம் கொற்றவை என்று அழைக்கப்பட்டாள். இன்றைய நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பும் உலகின் ஆதித்தாய் இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவைச் சார்ந்தவள்தான் என நிரூபணமாக்கிவிட்டது. டி.என்.ஏ. ஆய்வுகளும் அதை உறுதிப்படுத்திவிட்டன. அன்றைய சமூகத்திற்கு தலைமை தாங்கியவனின் சொற்படியே அச்சமூகம் இயங்கியதென்றால், அச்சமூகம் அவருக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும். அவரை மீறி எக்காரியங்களும் அன்று நடந்திருக்க வாய்ப்பில்லை. வேட்டையின் போதோ, மற்றொரு குலக்குழுவை போரிலே வென்ற போதோ, அதில் கைப்பற்றப்பட்ட வெகுமதிகளோ, உணவோ, அத்தாயிடம் தான் கொண்டு போய் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவளே, அவைகளை அச்சமூகத்தின் அங்கத்தினர்களுக்கு சமமாக பகிர்ந்தளிப்பவளாகவும் இருந்திருப்பாள். இனக்குழு கொண்டு வந்த பொருட்களில் அல்லது உணவில் மிகச் சிறப்பான பாகங்கள் முதலில் தாய்க்குத்தான் தரப்பட்டிருக்கும். இப்பழக்கம் ஆப்பிரிக்காவின் பழங்குடிகள், அந்தமான் நிக்கோபார், மத்திய பிரதேசத்தின் காடுகளில் வாழும் கோண்டு இன பழங்குடிகளிடம் இன்றும் அப்படியே பின்பற்றப்படுகிறது. இன்றும் கூட இப்பழக்கம் இந்து கூட்டுக் குடும்பங்களில் சர்வ சாதாரணம். அக்கிழவியால் அந்தப் பொருட்களை உண்ண முடியுமா? என்பதல்ல பிரச்சனை. அவளிடம் அவைகள் முதலில் சேர்க்கப்பட வேண்டும் என்பதுதான் பிரச்சனை.

மகாபாரதத்தில் அர்ச்சுனன் வில்வித்தையில் வெற்றி பெற்று, தனக்கு மாலையிட்டவளை, தன் தாய் குந்தியிடம் நான் ஒரு கனியை உங்களுக்காகக் கொண்டு வந்துள்ளேன் எனக் கூறிய போது, அவன் தாய் ஐவரும் பங்கு போட்டுக் கொள்ளுங்கள் என்றாள். விளைவு ஐந்து பேருக்கும் பத்தினியானாள் திரௌபதி.

இன்றைய விவசாய சமூகங்களிடம், காட்டு, அரவி மக்களிடம் தங்கள் மந்தையில் பிறந்த மூத்த ஒட்டகத்தையோ, ஆட்டையோ தங்கள் பெண் தெய்வங்களுக்காக வெட்டி பலியிடும் வழக்கம் இருந்தது. ஆதி கிருத்துவர்கள் மத்தியிலும் பலியிடும் வழக்கம் இருந்தது என பைபிள் கூறுகிறது. அப்படியானால் ஆதிக் கடவுள் பெண்ணா? ஆம், பெண்ணே!

2 comments:

  1. //இரண்டாயிரம் ஆண்டின் உலகின் மாபெரும் தத்துவ ஆசான் காரல் மார்க்ஸ்//

    1818 முதல் 1883 வரை வாழ்ந்தவர்தான் 2000 ஆண்டின் தத்துவ ஆசானா?

    //ஆதி மனிதர்கள் தாய்வழி சமூக மக்கள், தன்னைப் பெற்றெடுத்த தாயைத் தான் அவர்களுக்குத் தெரியும்.//

    இவ்வரிகள் எந்த ஆய்விலிருந்து பெறப்பட்டன?

    //அச்சமூகத்தின் வயது முதிர்ந்த அன்றைய வேட்டை சமூகத்தில் பெண்ணே, சமூகத்தை வழிநடத்தியவள். இது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.//

    இவ்வரிகள் எந்த ஆய்விலிருந்து பெறப்பட்டன? அறிவியல் அடிப்படை இதற்கு இருக்கிறதா?

    //மகாபாரதத்தில் அர்ச்சுனன் வில்வித்தையில் வெற்றி பெற்று, தனக்கு மாலையிட்டவளை, தன் தாய் குந்தியிடம் நான் ஒரு கனியை உங்களுக்காகக் கொண்டு வந்துள்ளேன் எனக் கூறிய போது, அவன் தாய் ஐவரும் பங்கு போட்டுக் கொள்ளுங்கள் என்றாள். விளைவு ஐந்து பேருக்கும் பத்தினியானாள் திரௌபதி.//

    இதற்காக மகாபாரதத்திலேயே அவர்கள் நிந்திக்கப்படுவது எதைக் காட்டுகிறது என்றால், அது ஒரு அறநெறி விதிமீறல் என்பதையே. அது அன்றைய சமூகத்தின் பொது நடத்தையாக இல்லை. இச்சம்பவம் விதிவிலக்காகவே மகாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    ReplyDelete
  2. திரௌபதி எப்படி ஐவருக்குப் பொது மனைவியானாள் என்பதை கீழ்க்கண்ட முழு மஹாபாரத லிங்குகளில் சென்று படித்து அறியலாம்....

    http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section193.html

    http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section194.html

    http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section195.html

    http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section196.html

    http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section197.html

    http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section198.html

    குறிப்பாக ஆதிபர்வத்தின் 198வது பகுதி ஒரு பெண்ணும் எப்படி ஐந்து கணவர்கள் அமையலாம் என்று விவாதிக்கிறது. ஆக ஒரு பெண்ணை ஐவர் திருமணம் புரிவதென்பது பொது வழக்கம் கிடையாத விதிவிலக்கே!

    ReplyDelete

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா