Wednesday 21 January 2015

அறிவியலும்! அரசியலும்!!

K.N.சஜீவ்குமார்
217\37918

நீயா நானா என்ற நிகழ்ச்சியை நம்மில் பலர் விரும்பிப் பார்ப்பதுண்டு. இத்தகைய விவாதங்களில் மிகவும் பழையது, கடவுள் உண்டா இல்லையா என்பது. இந்த விவாதத்தில், ``உலகம் இவ்வாறு இயங்குவதற்கு கடவுள் தேவையில்லை என்று கடவுளை மறுப்பதோடு நின்றுவிடாமல், கடவுளை மனிதன் படைப்பதற்கான சூழலையும் கண்டறிவதில் பொருள் முதல்வாதிகள் ஆர்வம் காட்டினர்.
மனிதன் விவசாயத்தைக் கண்டுபிடித்து நிலத்தை சொத்தாக்கிய போது, அதைக் காப்பாற்ற படைபலம் மட்டும் போதவில்லை. மனிதர்களைக் கட்டுப்படுத்த மதம் பயன்பட்டது.
அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலேயே ``குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான்'' என்ற அறிவியல் உண்மையை ஏற்காத மனிதர்கள் எல்லா மதங்களிலும் உண்டு. எனவே, கம்ப்யூட்டர், செல்போன் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்துதல் வேறு, அறிவியல் பார்வை என்பது வேறு!
அறிவியல் பார்வை ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்வி கேட்கும். ஆனால், மதம் கேள்வி கேட்காமல் நம்பச் சொல்லும். அறிவியல், தகுந்த ஆதாரத்தைக் காட்டி நிரூபித்தால் அதை ஏற்கும். ஆனால், மதம், அறிவியல் உண்மைகளை சொன்னவர்களைத் தண்டிக்கும் <உ_ம்> புரூனோ, கலீலியோ.
நியூட்டன், ஐன்ஸ்டின் போன்ற விஞ்ஞானிகள் சொன்னது தவறு என்று நீங்கள் நிரூபித்தால் உங்களுக்கு நோபல் பரிசு நிச்சயம். ஆனால், மதம் சொல்லும் மூட நம்பிக்கைகளைத் தவறு என்று நிரூபித்தால், இன்றைய காலத்திலும் நீங்கள் கொல்லப்படலாம் <உ_ம்> நரேந்திர தபோல்கர்.

ஆனால், அறிவியலின் தாக்கத்தை மறுக்க முடியாமல், பலர் தங்களது பிற்போக்குத்தனத்துக்கு அறிவியலை ஊன்றுகோலாக பயன்படுத்துகின்றனர். தன் வாழ்நாள் முழுவதையும் அறிவியல் ஆராய்ச்சிக்காக தியாகம் செய்து கண்டுபிடித்த ஒன்றை, இது இந்தியாவில் 6000 வருடம் முன்னரே சொல்லப்பட்டது என்று சர்வசாதாரணமாகக் கூறுவோரிடம் ஒரு கேள்வி, ``6000 வருடமாக இருந்ததை நீங்கள் ஏன் வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை? ஏன் இந்தியாவைத் தலைநிமிரச் செய்யவில்லை?``

வான சாஸ்திரத்தில் எந்த நவீன கருவிகளும் இல்லாமல் ஆரியபட்டரும், வராகமிரரும் செய்த சாதனைகள் நம்மை பெருமை கொள்ளச் செய்யும். ஆனால் புஷ்பகவிமானம் இராமாயண காலத்திலேயே இருந்தது; நற்ங்ம் இங்ப்ப் பங்ஸ்ரீட்ய்ர்ப்ர்ஞ்ஹ் மூலமாகத்தான் கௌரவர்கள் பிறந்தார்கள் என்று சரடுவிடுவதுதான் ஏற்க முடியாதது.

நமது இதிகாசங்களில் காணப்படும் கற்பனை வளத்துக்காக வேண்டுமானால் ஒரு சபாஷ் போடலாம். கற்பனைகளை கண்டுபிடிப்புகளாக அறிவியல் ஏற்காது. ஹெலிகாப்டர் போன்ற வடிவத்தை வரைந்து வைத்தார் என்பதற்காக, அவர்தான் அதை வடிவமைத்தார் என்று சொல்ல முடியாது. அது கற்பனை அவ்வளவே.

தொழில் புரட்சிக்குப் பின் மதத்தையும், அறிவியலையும் பிரித்துப் பார்த்த ஐரோப்பா முன்னேறியது. சாதி மத அடையாளங்களில் மாட்டிக் கொண்ட இந்தியா அடிமையானது. அறிவியல் கண்ணோட்டம் மதத்தின் அஸ்திவாரத்தை அசைத்துவிடும் என்பதால் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.

முற்போக்கு கருத்துகளைப் பேசியவர்கள் ``பேய் பிடித்தவர்கள்'' என்று கழுவிலேற்றப்பட்டனர். இதைச் சரி செய்யாமல் தங்கள் அரசியலுக்காக அறிவியலைத் திரித்து வெற்றுப் பெருமை பேசுவது உலக அரங்கில் நம்மைக் கோமாளிகளாக்கும்.

ஆனால், விண்வெளி ஆராய்ச்சியில் இருந்த சிரமங்களுக்கு இடையிலும் நமது விஞ்ஞானிகளின் ``மங்கள்யான்'' சாதனை நம்மை பிரம்மிப்படைய வைக்கிறது. அவர்களுக்கு நமது வாழ்த்துகள்! அறிவியல் வளர்ச்சியில்தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா