எஸ்.உமாகாந்தன்
221/L210
221/L210
வெற்றி என்பது, எது பலன் தராது என்பதைக்
கண்டுபிடிப்பது மட்டுமல்ல, எது பலன் தரும் என்பதைக் கண்டறிவதும்தான். வெற்றிப்
படிக்கட்டுகளில் வீறுநடைபோடத் தேவை தன்னம்பிக்கை. தன்னைப் பற்றியும், தனது
திறமையைப் பற்றியும், தனது பலம், பலவீனம் பற்றியும் சரியாக மதிப்பீடு செய்வதால்
உருவாகும் நம்பிக்கை இது.
தன்னம்பிக்கை உள்ளவர்கள் தங்களையே
குறைகூறிக் கொண்டிருக்க மாட்டார்கள். அதைப் போலவே தங்களைப் பற்றி சுயபுராணம்
பாடுவதை ஒரு கலையாகக் கொண்டிருக்க மாட்டார்கள். தன்னம்பிக்கையை குழந்தை
பருவத்திலேயே வளர்க்க முடியும். குழந்தைகளை சுதந்திரமாக வளரவிட்டு அவர்களுக்கு
இளம் பருவத்திலேயே தன்னம்பிக்கையூட்டி அவர்களை வளர்க்க முடியும். குழந்தைகளைச்
சுயமாக எதையும் செய்ய விடாமல், யாருடனும் பழகவிடாமல் கட்டுக்குள்ளேயே வளர்ப்பது
நாளடைவில் அந்தக் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை இல்லாமல் தாழ்வு மனப்பான்மை
உருவாக வழி ஏற்பட்டுவிடும்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்து
கிடக்கும் திறமைகளை வெளியே கொண்டுவரத் தன்னம்பிக்கை அவசியம். நம்மால் முடியும்
என்ற தன்னம்பிக்கை ஒரு செயலை வெற்றிகரமாக செயல்படுத்த உற்சாகத்தை அளிக்கிறது.
இந்தக் காரியம் வெற்றிபெறாது, பிறகேன் முயற்சிகள் வேண்டும் என்று நினைத்துக்
கொண்டு காரியங்களை அணுகினால் அந்தக் காரியம் வெற்றி பெறாது. நினைக்கிற எந்த
முயற்சியும் நடந்தே தீரும். முயற்சி தோற்காது என்ற எண்ணங்களும் சிந்தனைகளும்
எப்போதும் தேவை. தன்னம்பிக்கையின்
மிகப்பெரிய எதிரி பயம்தான். எந்தக் காரியத்தையும் செய்யவிடாமல் தடுக்கக்கூடிய
மிகப் பெரிய சக்தி இது. பயத்தை வெல்ல நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
முடிவு எடுக்கத் தயங்குபவர்கள், எடுத்த
முடிவை அமுல்படுத்தத் தயங்குபவர்கள், மற்றவர்கள் சொல்படி முடிவெடுப்பவர்கள்
பெரும்பாலும் தன்னம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பார்கள். தெரிந்தவர்களிடம் ஆலோசனை
கேட்பது தவறு கிடையாது. எந்தக் கருத்தையும் பரிசீலிப்பதும் தவறல்ல. ஆனால் முடிவு
நாம் சிந்தித்து எடுக்க வேண்டும். சிறிய சிறிய விஷயங்களில் சுய சிந்தனையுடன்
முடிவெடுக்கும் பழக்கம் வந்தால், பெரிய விஷயங்களில் முடிவு காண்பது எளிது.
தன்னம்பிக்கை மனதில் இருந்தால் மட்டும் போதாது. செயலிலும் பிரதிபலிக்க வேண்டும்.
மற்றவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டு அவர்களுக்கு யோசனைகளைக் கூறி உதவுவது
நம்மிடம் படிப்படியாக தன்னம்பிக்கையை வளர்க்கும். அது போன்ற பிரச்சனைகள் நமக்கு
வரும் போது அவற்றை எளிதாக எதிர்கொள்ள முடியும். யதார்த்த
அறிவு, தெளிவான குறிக்கோள், அதை நோக்கியச் செயல்பாடு, தோல்வியைக் கண்டு தடுமாறாத
மனம், எந்த இடையூறு வந்தாலும் பாதையிலிருந்து விலகிவிடாத மன உறுதி, கடும் உழைப்பு,
தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் எந்தக் காரியத்தில் இறங்கினாலும் வெற்றி நம் கையில்!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா