கி.சுரேஷ் 261/38313
சேசிஸ் அசெம்பிளி
இழப்பதற்கு ஏதுமற்ற நிலையில் இருப்பவர்கள் தொழிலாளர்கள்.
8 மணி நேர வேலைக்காக போராடி பின்பு ஒவ்வொரு போராட்டத்திற்கும் தொழிலாளியின் ஆயுதமாக
இருப்பது ஒற்றுமையும், போராட்டமும்தான். தொழிலாளியின் உண்மையான பலத்தை நிரூபிக்கவும்,
வலிமையான ஆயுதமாக நேற்று மட்டும் அல்ல இன்றும் என்றும் தொழிலாளர்களுக்கு துணையாய் நிற்பது
இரண்டே வடிவங்கள்தான். ஒன்று ஒற்றுமை, மற்றொன்று ஒற்றுமையின் அடிப்படையில் அணிதிரட்டப்படும்
போராட்டங்கள்.
தொழிலாளர்களுக்கு இந்த ஒற்றுமையையும், போராட்டத்திற்கு
அணிதிரளவும் வடிவம் கொடுப்பது சங்கம் என்ற கட்டமைப்பு. சங்கம் என்பது தொழிலாளர்களின்
எண்ணங்களையும். உணர்வுகளையும் பிரதிபலிக்கின்ற ஒரு வர்க்க ஸ்தாபனம். தொழிலாளிகளின்
ஒட்டுமொத்த எண்ண ஓட்டத்திற்கும், அக, புற சூழ்நிலைகளை ஆராய்ந்து ஒரு பொருளாதார போராட்டத்திற்கு
தயார் செய்வது சங்கத்தின் முக்கிய பணி.
மேலும், பொருளாதாரக் கோரிக்கைகளை வென்று எடுப்பது,
தற்காலிகப் பணியே என்பதையும், தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு அரசியல் போராட்டம்தான்
தீர்வு என்பதையும் தொழிலாளர்களுக்குப் புரிய வைத்து அவர்களை அரசியல் போராட்டத்திற்கு
உந்தித் தள்ளுவது சங்கத்தின் உண்மையான வர்க்கக் கடமை. காரல் மார்க்ஸ் இதை மிக எளிமையாக
``8 மணி நேர வேலைக்காக போராடுவது `பொருளாதாரப் போராட்டம்' ஆகும். 8 மணிநேரத்தைச் சட்டமாக்கப்
போராடுவது `அரசியல் போராட்டம்' ஆகும்'' என்பார்.
தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும்,
பிரச்சனைகளுக்கும் இறுதி வடிவம் கொடுப்பது சங்கத்தின் வேலை. பெரும்பான்மை தொழிலாளர்களின் உணர்வுகளை உள்ளடக்கிய
சங்கத்தின் முடிவிற்கு தொழிலாளர்கள் கட்டுப்பட வேண்டும். ஏனெனில் சங்கம்தான் தொழிலாளர்களை
வழிநடத்த வேண்டும். தொழிலாளர்களின் எண்ணங்கள் பலவாக, பல்வேறு கோணங்களில் வெளிப்படும்
அவற்றை ஒருங்கே இணைத்து முடிவுக்கு வருவது சங்கத்தின் முதன்மைப் பணியாகும்.
குறைந்தபட்சம் 7 பேர் இருந்தால் சங்கம் அமைக்கலாம்
என்றும், 200 பேருக்கு மேல் வேலை செய்தால் உணவுச்சாலை அமைக்கப்பட வேண்டும் என்பதும்,
நிரந்தர வேலைக்கு நிரந்தரத் தொழிலாளியோ அல்லது நிரந்தர வேலைக்குக் கொடுக்கக்கூடிய ஊதியமோ
வழங்க வேண்டும் என்பதும், போனஸ் பெற, குறைந்தபட்ச ஊதியம் பெற எழுத்து வடிவில் இன்று
உள்ள எல்லாச் சட்டங்களும் ஒரே நாளில் மேசையின் மீது பேசி முடிக்கப்பட்டது அல்ல. இதற்குப்
பின்னால் பல தொழிலாளிகளின் உயிர்கள் விலையாக கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் அரசியல் மாற்றம், அரசியல் சுதந்திரம்
பெற ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதந்திர போராட்டம் பல்வேறு வடிவங்களில் நடைபெற்றது. அதேபோல,
அரசியலுக்கு அடித்தளமாக உள்ள பொருளாதாரம் மக்களுக்கான பொருளாதாரமாக மேன்மையடைந்தால்
மட்டுமே சமூகத்தில் பொருளாதார மாற்றம் ஏற்படும். இதற்குத் துணையாக பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களை வரலாறு நெடுகிலும்
தொழிலாளர்கள் நடத்தியுள்ளனர். இன்றும் பொருளாதாரப் போராட்டங்கள் தொடர்கின்றன.
அடுத்து அரசியல் - பொருளாதாரம்.... தொடரும்.....
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா