Saturday, 13 October 2012

விடியும் பொழுதிலே (முதல் பரிசு பெற்ற சிறுகதை)



L. வெங்கடசுப்பு 450\L595

      சரியாக அதிகாலை 2 மணி, விடியும் பொழுது தூக்கில் தொங்கியே ஆக வேண்டும். ரெண்டுபட்ட அவன் மனம், நெஞ்சுக்குள் போராடிக் கொண்டிருக்கிற மேசை மீது ஓசை படாமல் முகம் புதைத்து அழுதான் செல்லப்பா.

      40 வயது தாண்டியும் பட்டதாரியாய் இருந்து வேலையில்லாமல் போய் கல்யாணம் முடிந்து 2 குழந்தைகளுக்குத் தகப்பனாகி கடன் சுமை அதிகமாகி வீடு ஏலம் போகும் நிலையில் இனி வாழ்வதற்கு அர்த்தம் இல்லை என முடிவெடுத்தவனாய்...

      ``என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. மன உளைச்சலும், மன அழுத்தமும் தான்'' என கடிதத்தை எழுதி முடித்தான். கொல்லைப்புறம் நின்றிருந்த பசு பிரசவ வலியால் துடிக்க ஆரம்பித்தது. மாடியை விட்டு கீழே இறங்கினான். வயதான தாய் நின்று கொண்டிருந்தாள். ``இனி, பாலுக்கு கவலையில்லை. நான் ஒரு கடனை அடச்சிடுவேன் தம்பி'' எனக் கூறி முடித்தாள். ``பழையபடி நானே இறங்கி கலப்பையைப் பிடிச்சாத்தான் கடனை அடைக்க முடியும்...'' எலும்புக்கூடாய் நின்றிருந்த வயதான அப்பா கூறி முடித்தார். ``நான் நாளையிலிருந்து கூலி வேலைக்குப் போறேன்... வீட்டு செலவுக்கு உதவும் மாமா...'' என வறுமையின் பிடியில் இருந்த மனைவி சொல்லக் கேட்டான்.

      அவள் தோளில் படுத்திருந்த ஒன்றரை வயது குழந்தை செல்லப்பாவின் முகத்தைப் பார்த்து புன்னகை உதிர்த்து விட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தது. செல்லப்பாவின் மூத்த மகன் அருகில் வந்து நின்றான். காயத்துக்காக காலில் கட்டப்பட்டிருந்த கட்டை அவிழ்த்து கீழே போட்டான். ``ஏண்டா... கட்டை அவிழ்த்து கீழே போட்ட'' செல்லப்பா கேட்டான். ``கட்டிருந்தா காயம் ஆறாது மவனே.. அவுத்துப் போட்டா தானா ஆறிடும்...'' தாய் சொல்லி முடிக்க, அந்த வார்த்தைகள் அவன் நெஞ்சைப் பதம் பார்த்தன.

      வேகமாக மாடிக்கு விரைந்தான். கதவைத் தாளிட்டான். போராடிக் கொண்டிருக்கும் அவன் மனம் தாய் சொன்ன வார்த்தையால் சிந்திக்கத் தொடங்கியதை உணர்ந்தான். ஜன்னலைத் திறந்து வானத்தைப் பார்த்தான். விடியும் பொழுது நெருங்குவதாக உணர்ந்தான். ``தற்கொலை முயற்சி என்னவாயிற்று'' இரண்டுபட்ட மனம் அவனைக் கேட்டது. மன உளைச்சலும், மன அழுத்தமும் குறைந்து விட்டதாக அவன் உணர்ந்திருந்தான். `ஆம் உண்மைதான். தாயும், தந்தையும், மனைவியும் சொன்ன வார்த்தைகள் தான் அவனைச் சிந்திக்க வைத்தன. கடனை அடைப்பதற்கு அவர்கள் எவ்வளவு உறுதியாய் இருக்கிறார்கள். வலி இருந்தும் வலியைக் குறைக்க வழியைக் கண்டுபிடித்து வாழத்துடிக்கும் அந்த ஜீவன்கள் உண்மையிலேயே என்னால் நேசிக்கப்பட வேண்டியவர்கள்.'

      `உனக்கு மட்டும் வலி இல்லை. நடக்க முடியாததால்தான் நான் தாயின் தோளில் சுமையாக இருக்கிறேன். நடக்க முடிந்த நீ நடக்க முடியாமல் ஏன் தவிக்கிறாய்.. வழியைக் கண்டுபிடி. வாழ வழி கிடைக்கும்.' புன்னகைத்த அந்த குழந்தை பேசியிருந்தால் இப்படித்தானே பேசியிருக்கும். உண்மையிலேயே அந்தப் புன்னகையும் என் வலியை குறைத்து விட்டது.''

      `கட்டிருந்தா காயம் ஆறாது மவனே... அவுத்துப் போட்டா தானா ஆறிடும். தாய் சொன்ன அந்த வார்த்தைகள் உண்மைதான். மொத்த வலியையும் நானே சுமப்பதாக இதுவரை நினைத்திருந்தேன்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வலியைச் சுமக்கும்போது நான் மட்டும் ஏன் இந்த மொத்த வலியைச் சுமந்து அதைக் கட்டிப்போட்டு வேதனைப் பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது இந்த கட்டை அவிழ்த்து விட்டதால் மனம் லேசானது. மனம் நிம்மதி பெற்றது. தற்கொலை முயற்சியில் இருந்து முழுவதும் விடுபட்டு விட்டதாக உணர்ந்தான் செல்லப்பா. வானத்தை வெறித்துப் பார்த்தான். மனசுக்குள் பேசிக் கொண்டான்.

      தற்கொலை செய்யும் முடிவுக்கு வருபவர்களே... நீங்கள் அனுமானமாய் நேசிக்கும் ஜீவன்களை உங்கள் மனதுக்குள் கொண்டு வாருங்கள். அவர்கள் சொன்ன வார்த்தைகளை நெஞ்சுக்குள் நிறுத்திப் பாருங்கள். நீங்கள் நேசிக்கும் அன்பானவர்களின் புன்னகையை கண்முன் கொண்டு வாருங்கள்... அந்தக் கனமே மரணப் பிடியில் இருந்து நீங்கள் தப்பித்துவிடுவீர்கள். வலி என்பது எல்லோருக்கும் பொதுவானது. தற்கொலை என்பது கேவலமானது. கிறுக்குத்தனமானது, முட்டாள்தனமானது.

      உங்கள் மறைவால், உங்களை நேசிப்பவர்களும் தற்கொலைக்கு முயன்றால் வாழ்க்கை வாழ்வதற்கு என்னதான் அர்த்தம் இருக்கிறது. வாழ்ந்து பாருங்கள். தாயின் கர்ப்பப்பையில் கிடைத்த சுகம் மீண்டும் நமக்குள் உறுதிப்படும். மன உளைச்சலும், மன அழுத்தமும் நம்மை அழிக்கத்தான் உதவும். நம்மைக் காக்க அல்ல. மனதை ஒன்றுபடுத்துங்கள். வாழ பிடிப்பு கிடைக்கும்.

      சிறகொடிந்த பறவை அழுவதில்லை. நடந்துதான் வாழ்க்கையை நகர்த்துகிறது. சிறகு முளைத்தவுடன் வாழ்க்கையில் பயணிக்கிறது. அப்படித்தான் நம் வாழ்க்கையும். தற்கொலைக்கு முயற்சிக்கிறவர்களே... வேண்டாம் இந்த விபரீத முடிவு... உங்களை திருத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் திருப்புமுனை நிச்சயம் உண்டாகும்.

      செல்லப்பா, வானத்தைப் பார்த்தான். விடியும் பொழுது, வானம் வெளுத்திருந்ததைவிட அவன் மனம் அதிகமாய் வெளுத்திருந்ததை உணர்ந்தான். மாடியை விட்டு கீழே இறங்கினான். கன்று ஈன்ற பசுவைச் சுற்றி சொந்த பந்தங்கள், ஊர் ஜனங்கள் கூடியிருந்தார்கள். அவர்களின் மொத்த புன்னகையை, மொத்தமாய் வாங்கி மனதிற்குள் நிரப்பிக் கொண்டான். உயிரைக் காப்பாற்றிக் கொண்ட செல்லப்பா... தேசத்தைக் காப்பாற்ற ஒரு தொலைநோக்கு பார்வை தேவை என உணர்ந்து, வேலையும் வேண்டாம், வெட்டியும் வேண்டாம் என கலப்பையைத் தோளில் தூக்கிப் பிடித்து சொந்த நிலத்தை நோக்கி மின்னலாய் நடந்து போனான் செல்லப்பா...

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா