Tuesday 25 December 2012

காளான்... பேல்பூரி... பானிபூரி... உஷார்



அற்புதம் ஜேசுராஜ்
எவரெடி தொழிலகம்

      சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காளான், பேல்பூரி, பானிபூரி விற்கும் தள்ளுவண்டிக் கடைகள் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கில் முளைத்திருக்கின்றன. ஒரு பிளேட் ரூ.10\- என்பதால் மாலை நேரத்தில் இக்கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் மொய்க்கின்றன. மாணவர்கள், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் தினமும் விரும்பி காளான் உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

      பெரும்பாலும் கடைகளில் `காளான்' என்ற பெயரில் விற்கப்படும் `அயிட்டம்' காளான் இல்லை என்பதே உண்மை. முட்டைகோஸ், மைதாமாவுடன் உப்பு சேர்த்து பிசைந்து எண்ணெயில் வடை போல பொறித்து வைத்துக்கொள்கின்றனர். பின்னர் சிவப்பு நிறமேற்றுவதற்காக ஜிலேபி பவுடர், காரத்துக்கு மிளகாய்த் தூளை தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி, அவற்றுடன் ஏற்கனவே பொறித்த முட்டைகோஸ் மைதாமாவு கலவை `வடை'களைப் போட்டு வேக வைத்து வாடிக்கையாளர்களுக்கு பிளேட்டில் பரிமாறுகின்றனர். இவற்றில் காரமும், உப்பும் அதிகம் சேர்த்திருப்பதால் சுவை கூடி நாவைச் சுண்டியிழுக்கிறது. இதுவே, காளான் என்ற பெயரில் விற்கப்படுகிறது.
      காரம், ஜிலேபி பவுடர், அதிக உப்பு கலந்த முட்டைகோஸ், மைதாமாவு கலவை தீனியைத் தொடர்ச்சியாக தினமும் வாங்கி உட்கொள்வது, உடல் ஆரோக்கியத்திற்கு கேடு வைக்கும் என்கின்றனர் சுகாதாரத்துறையினர். மேலும், ஒருமுறை உணவை வேக வைக்கப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதால் அவற்றில் நச்சுத் தன்மை கலந்து, ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கிறது. எனினும், வாடிக்கையாளர் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், தள்ளு வண்டிக்காரர்களின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.
      உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் இதுபோன்ற போலி `காளான்' விற்பனை தள்ளுவண்டிக் கடைகள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் இட்லி, தோசை விற்கும் தள்ளுவண்டிக் கடைகள், சிறு ஓட்டல்களை சுகாரத்துறையினர் கண்டு கொள்வதில்லை. இந்தத் துறையின் அலட்சியப் போக்கு, மக்களின் ஆரோக்கியம், மற்றும் பொது சுகாதாரம் மீது அக்கறை காட்டாததையே காட்டுகிறது. இதை உட்கொண்டோர் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிறு, குடல் சம்பந்தமான நோய்களினால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களிடம் செல்வது அதிகமாகி வருகிறது. மசாலா, ஜிலேபி பவுடர் அதிகம் பயன்படுத்தி சமைக்கப்படும் உணவு உட்கொண்டால் கேன்சர் ஆபத்து அதிகம். ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி சமைக்கப்படும் உணவால் ரத்தக்குழாய் அடைப்பு, மாரடைப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். ஆகவே, விழிப்போடு இருப்போம். உடல்நலம் பாதுகாப்போம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா