Tuesday 25 December 2012

நவீன அறிவியலின் சிற்பி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்



C.தவமணி 268\36971

      நவீன அறிவியலின் சிற்பியான ஐன்ஸ்டீன் அவர்கள் ஒரு தடவை நிருபர்களிடம் காலம் சம்பந்தமான உங்களின் கோட்பாடு புரியவில்லை என்றார்களாம். அதற்கு அவர் நகைச்சுவையோடு, நீங்கள் ஒரு அழகான பெண்ணிடம் ஒரு நாள் முழுக்கப் பேசினாலும், நேரம் போவதே தெரியாமல் ஒரு மணி நேரமே கழிந்தது போல் தெரியுமல்லவா? அதே போல் கனகனக்கும் அடுப்பின் மேல் ஒரு நிமிடமே இருந்தாலும் ஒரு நாள் போல் தோன்றுமல்லவா! அது போலத்தான் காலமும் என்றாராம்.

      அதே போல் நிருபர்கள் ஐன்ஸ்டீன் அவர்களின் ஆய்வுக்கூடத்தைப் பார்க்க வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். ஐன்ஸ்டீன் அவர்களை அழைத்துச் சென்ற போது, அங்கே ஒரு மேசை, மேசை மேல் நோட்டு புத்தகங்களும், பேனாவும் மட்டுமே இருந்ததாம்! பெரிய ஆய்வுக் கூடமோ கருவிகளோ இல்லையாம்!
      ஐன்ஸ்டீன் தொலைதூர நட்சத்திரத்திலிருந்து ஒளிக்கற்றைகள் நிறை அதிகம் உள்ள நம் சூரியனைக் கடக்கும்போது பார்வை நிலையில் இருந்து விலகல் அடையும் என்றார். இந்த அனுமானத்தை சூரிய கிரகணத்தின் போது 1915-ம் ஆண்டு பரிசோதித்ததில், ஐன்ஸ்டீன் அனுமானம் உண்மையானது என்று தெரிந்தது.
      இன்று நாம் விண்ணில் பார்க்கும் விண்மீன்களின் நிலை கடந்த காலத்தவையே. நம் அருகில் உள்ள பிராகசிமா என்ற நட்சத்திரம் 4.3 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. அது தற்சமயம் அழியுமானால் 4.3 ஒளி ஆண்டு கழித்தே நமக்குத் தெரியும்.
      ஐன்ஸ்டீன் அறிவியல் மேதை மட்டுமல்ல. சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை போக்க சமூக மாற்றம் தேவை என்றார். அவர் ஒரு சோசலிச சமூகத்தை விரும்பினார். ஆனால் சோசலிசக் கட்சியிலோ, கம்யூனிஸ்ட் கட்சியிலோ உறுப்பினராக இல்லை. உலக சமாதானத்திற்காக, மக்கள் நலனுக்காக அறிவியல் கண்டுபிடிப்புகள் பயன்பட வேண்டும், அழிவிற்காக பயன்படக் கூடாது எனக் கடைசிவரை வாதாடினார். விஞ்ஞானிகளை அணிதிரட்டினார்.
      ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி கட்சி யூதர்களை வேட்டையாடிய போது நல்ல வேளையாக ஐன்ஸ்டீன் நாடு கடந்திருந்தார். இல்லையேல் 60 இலட்சம் யூதர்களோடு மாண்டு போயிருப்பார். ஐன்ஸ்டீன் அமெரிக்காவில் குடிபெயர்ந்தாலும் முதலாளித்துவத்திற்கு சோசலிசமே மாற்று என்று கூறினார். மக்களின் ஏற்றத்தாழ்வுகளை அதுவே தீர்க்கவல்லது என்று கூறினார். அதனாலேயே அமெரிக்க சிஐஏவின் கழுகு பார்வைக்கு உள்ளானார். கடைசி வரை கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார். அமெரிக்கா அவர் சோவியத் யூனியன் ஆதரவாளரோ என கடைசி வரை வேவு பார்த்தது. 1952ல் இஸ்ரேல் அந்நாட்டின் கௌரவத் தலைவராக ஏற்க அழைப்பு விடுத்தது. அது போன்ற பெரிய பதவிக்குத் தகுதியானவர் நான் இல்லை என மறுத்தார் ஐன்ஸ்டீன்!
      பதவிகளைத் தேடி ஓடும் இக்காலத்தில் பதவி வேண்டாம்  என மறுத்த மிகப் பெரிய அறிவியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீனை எவ்வளவு போற்றினாலும் தகும்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா