Wednesday 13 February 2013

காசிருந்தால் மருத்துவம்

க.ராமையன்
221\36038

      ஒரு அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று சுகாதாரமும், ஆரோக்கியமும். ஒரு நாட்டின் செல்வம் அம்மக்களின் மனிதவளம்தான். அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற ஐக்கிய நாடுகள் சபை முன் வைத்த உறுதிமொழியில் நம் நாடு கையெழுத்திட்டு 35 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால் இன்றைய நிலை என்ன?


      சாதாரண ஜூரம், தலைவலி என்றாலே குறைந்தபட்சம் மருத்துவரைப் பார்த்து ஊசி போட்டு, மருந்து வாங்க ரூ.300\-க்கு மேல் செலவாகிறது. நமது தனிநபர் வருமானத்தைவிட அதிகமாக மருத்துவத்துக்கு செலவிட வேண்டியுள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகள் கார்ப்பரேட் கைகளில் சிக்கியுள்ளன. விலை பேசிய பிறகுதான் மருத்துவம் தொடங்குகிறது. வருமானம் கொழிக்கும் தொழிலாக மருத்துவம் மாறிவிட்டது. உயிர்களைத் துச்சமென மதிக்கும் நிலை உள்ளது. படித்த மருத்துவர்களும் தொழிலாளியாக பெரிய மருத்துவமனைகளில் வேலை செய்கிற நிலைதான் தொடர்கிறது. நகரங்களில் இந்நிலை என்றால் கிராமங்களில் சொல்ல வேண்டியதே இல்லை. நாய்க்கடி பாம்புக்கடிக்குக் கூட அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை என்ற அவலம் உள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்பி விடுகிற நிலை நீடிக்கிறது.      

வசூல் வேட்டைக்காக புதிய புதிய பன்னாட்டு நிறுவனங்களை சுண்டி இழுக்கிற அரசு, வருமானத்துக்காக புதிய புதிய டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் அரசு, மக்களைக் காப்பாற்றுவதில் சிறிதும் அக்கறை கொள்வதில்லை. நகராட்சி, மாநகராட்சி அரசு மருத்துவமனைகளின் லட்சணம் போய்ப் பார்த்தால் தான் தெரியும். ஊழியர்கள் பற்றாக்குறை, போதிய படுக்கை இல்லை என்று ஏகப்பட்ட `இல்லை'கள்! இறந்துபோன குழந்தையைக் கூட பாதுகாக்க முடியாமல் எலி கடித்து குதறுகிற நிலையில்தான் அரசு மருத்துவமனைகள் உள்ளன. ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள், இரத்தச் சோகையான கருவுற்றத் தாய்மார்கள், காசநோய், தொழுநோய், மலேரியா, காலரா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களில் உலக அளவில் முன்னிலையில் உள்ளது நமது நாடு. அரசு கவனிக்க வேண்டிய அம்சங்கள்:

மக்களுக்குத் தேவையான சுத்தமான குடிநீர், குடியிருக்க வீடு, சத்தான உணவு மற்றும் பொது சுகாதாரத்தைப் பராமரிப்பதில் கவனம் வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் 15 லிட்டர் சுத்தமான குடிநீர் தருவதாகச் சொன்ன அரசு அறிவிப்போடு நிறுத்திக் கொண்டது சரியல்ல.

அகற்றப்படாத குப்பை, சாலைகளில் வழிந்தோடும் சாக்கடை, குடிநீரில் கழிவுநீர் கலந்திடும் அவலம், 45% மக்களுக்கு கழிப்பறை வசதியின்மை என துயரங்கள் முற்று பெறாமல் தொடர்கின்றன.

விபத்து, மாரடைப்பு போன்ற நேரங்களில் உரிய நேரத்தில் கொண்டு செல்லும் 108 ஆம்புலன்ஸ் மட்டும் போதாது. உரிய மருத்துவ வசதி தேவை.

கூடுதலான நிதி ஆதாரங்களை ஒதுக்கி அரசு மாநகராட்சி, நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களை இயக்கி மக்களைக் காப்பாற்ற முன்வர வேண்டும். மருத்துவமனைகளை விரிவுபடுத்தி போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை நியமித்து, பரிசோதனைக்கூடங்கள் மற்றும் மருந்துகளுடன் தன்னிறைவாகச் செயல்பட அரசு முன்வர வேண்டும்.

      மருத்துவம் சேவையாகக் கருதப்பட்டு செயல்பட வேண்டுமேயொழிய மருத்துவம் வியாபாரமயமாக்கப்படக்கூடாது. ஆயுத விற்பனைக்கு அடுத்தபடியாக இலாபம் கொழிக்கும் தொழிலாக மருத்துவம் மாறிவிட்டது. இந்நிலை அகற்றுவோம்! அனைவரும் கைகோர்ப்போம்! மருத்துவம் நமது உரிமை... மக்கள் நலமுடன், சுகாதாரத்துடன் வாழ அரசை நிர்பந்திப்போம்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா