Thursday, 26 December 2013

தோழர் கருமலையான் அவர்களுடன் ஒரு சந்திப்பு

சிஐடியுவின் தமிழ்மாநில உதவிப் பொதுச்செயலாளர்
தோழர். ஆர்.கருமலையான் அவர்களுடன் ஒரு சந்திப்பு

கருமலையான்
சிஐடியுவின் தமிழ் மாநில
துணைப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம்
(மாநில பொதுச்செயலாளர்)
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு
(மாநில துணைத்தலைவர்)



ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் பற்றிய சிஐடியு-வின் நிலைப்பாடு?
      இது ஒரு நல்ல கான்செப்ட். காரணம் இதில் காணப்படும் ஜீவனுள்ள அம்சம். அதாவது ஒரு ஆலையில் பணியாற்றும் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் ஒற்றுமை இதில் அடங்கியுள்ளது. ஒரு ஆலையில் ``பல்வேறு'' தொழிற்சங்கங்கள் (Multiplicity of Union) உள்ள ஒரு சூழலில், ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என்பது பொருத்தமானது; அவசியமும் கூட.
      அதே போல வர்க்க ஒற்றுமை என்பது ஒரு அமைப்புக்கு சொந்தமானது அல்ல. அது தொழிலாளி வர்க்கத்திற்கு சொந்தமானது. அந்த அடிப்படையில் பார்த்தால் ஒரு சங்க அமைப்பு முறை நமக்குத் தேவைப்படுகிறது. வெற்றி, தோல்வி எது நேரிடினும் தொழிலாளர்கள் தீர்ப்பை மதிக்க வேண்டிய மாண்பு அதில் உள்ளது. இது ஒரு நல்ல ஜனநாயக செயல்முறை. அசோக்லேலண்ட் தொழிற்சங்கம் இதில் முதன்மையாக உள்ளதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

இன்றைய தொழிலாளர்களின், தொழிற்சங்கங்களின் நிலை எவ்வாறு உள்ளது?
      உலக அளவிலா அல்லது நமது தேச அளவிலா?
இரண்டுமே...
      உலக அளவில், சமீப காலங்களில் மிகப் பலமான வர்க்கப் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சிட்னி முதல் நியூயார்க் வரை மூலதனத்தின் எல்லா இடங்களிலும் தொழிலாளர்கள் இப்போது தெருக்களில் இறங்கி போராடி வருகிறார்கள். வால்ஸ்டிரீட் போராட்டத்தை நாம் பார்த்தோம். இதைப் பார்த்து, புரிந்த யாரும் சமகாலத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் எழுச்சியை கேள்விக்குறியாக்கத் துணிய மாட்டார்கள்.
      இந்தியாவில், நம் நாட்டு விடுதலைக்குப் பின்பாக இந்த தேசம் முதல் ``2 நாள் பொது வேலை நிறுத்தம்''  கண்டது. இதில் வலதுசாரிகள் முதல் இடதுசாரிகள் வரை எல்லாத் தொழிற்சங்கங்களும் பங்கேற்றன. இதைப் பார்த்த
பின்பும், இந்தியாவில் தொழிற்சங்க இயக்கம் மங்கிவிட்டது என்று யாராவது கூற முடியுமா?

தொழிற்சங்கங்களை ஒன்றுபடுத்த சிஐடியுவின் முயற்சிகள் என்ன?
      1990களில் நவீன தாராளமயத்தை இந்தியாவில் அமுல்படுத்த முனைந்த போதே சிஐடியு அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்தது. ஆனால் கடந்த 2013 பிப்ரவரி 20, 21 தேதிகளில் நடந்த பொது வேலை நிறுத்தத்தில்தான் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டன. மூலதனம் தொடுத்த தாக்குதலை எதிர்த்த போரில் இதற்கு இலக்கான நமது உழைப்பாளி மக்களைப் பாதுகாக்க, ஒரு ஒன்றுபட்ட இயக்கத்தை உருவாக்க, சிஐடியு முயற்சி எடுத்தது. அந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியை பிப்ரவரி 20, 21 பொது வேலை நிறுத்தத்தில் நிதர்சனமாகக் கண்டோம்.
      1970களில் இந்திய தொழிலாளி வர்க்கம் சிதறுண்டு இருந்தது. 1970 மே 31ல் சிஐடியு ஜீவனித்த போது, `ஒன்றுபடு! போராடு!!' என்ற முழக்கத்துடன் தான் பிறந்தது. சிஐடியு அதற்கு விசுவாசமாக இருக்கிறது.

பன்னாட்டு முதலாளிகள் தொழிற்சங்கங்கள் மீது தொடுக்கும் தாக்குதலை முறியடிக்க தாங்கள் கூறும் ஆலோசனை...
      உலகத் தொழிற்சங்க இயக்கமும், ஐ.க.ஞ.வும், இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் ஏற்றுக்கொண்ட ஒரு உண்மை என்னவென்றால் `MNC-யில் (Multi National Company) உள்ள தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் சிஐடியு, குறிப்பாக, அதன் தமிழ்நாட்டு கிளை முன்னணியில் நிற்கிறது என்பதே!
      இன்றைக்கு பன்னாட்டுத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் இளம் தொழிலாளர்கள், தொழிற்சங்கப் பரிச்சயமில்லாத, அரசியல் குறைவான தொழிலாளர்கள். அவர்களை வர்க்க பாசத்தோடு அணுகி, தொழிற்சங்கங்கள் அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதுதான் முக்கியம். தொழிற்சங்கங்கள் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டால், அவர்களுக்கு அரசியல் புரிதலை ஏற்படுத்திவிட்டால், எந்த ஆளும் வர்க்கத்தின் தாக்குதலையும் எதிர்கொள்ள முடியும். இதுமட்டுமல்ல, மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்ட சகோதர ஆதரவு இயக்கங்களை (நர்ப்ண்க்ஹழ்ண்ற்ஹ் ஹஸ்ரீற்ண்ர்ய்) உருவாக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக, நவீன தாராளமயத்தை எதிர்த்த போராட்டமாக இதை மாற்றாமல், பன்னாட்டு கம்பெனிகளின் பகற் கொள்ளைகளை, உழைப்புச் சுரண்டலைத் தடுக்க முடியாது.

அசோக் லேலண்ட் தொழிலாளர்களுக்கு தாங்கள் விடுக்கும் செய்தி...
      ``வர்க்க ஒற்றுமையைக் காப்பாற்று!'' - தொழிலாளர்களின் ஜீவ மரண கோஷம் இது. பொத்தாம் பொதுவாக நாம் போதிக்கும் விஷயமல்ல! ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், பல அம்சங்கள் அது சாதியாக, மதமாக வேறு சில அடையாளங்களாக வந்து கொண்டிருக்கின்றன. அசோக் லேலண்ட் தொழிலாளர்களே... வர்க்க ஒற்றுமை ஒன்றே நம்மைக் காப்பாற்றும் மார்க்கம்! இதற்கு எதிரான அனைத்தையும் நிராகரிப்போம்!!
ஒற்றுமை ஒன்றே நம்மைக் காப்பாற்றும் மார்க்கம்! இதற்கு எதிரான அனைத்தையும் நிராகரிப்போம்!!
      இதில் நான் வர்க்க ஒற்றுமை என்று குறிப்பிட்டதை நிரந்தரத் தொழிலாளர்களின் ஒற்றுமை மட்டுமே என்று புரிந்து கொள்ளக்கூடாது. காண்ட்ராக்ட், கேசுவல், பயிற்சியாளர்கள் மற்றும் சீனியர் ஜுனியர் வித்தியாசமில்லாத ஒற்றுமையை நீங்கள் கட்ட வேண்டும்! அது காலத்தின் அவசியம்! அதுவே அசோக் லேலண்ட் தொழிலாளர்கள் நலனைப் பாதுகாக்கும்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா