Thursday, 26 December 2013

ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பாதுகாப்போம்!

K.R.முத்துசாமி
பொதுச்செயலாளர்
பொதுத்தொழிலாளர் சங்கம்
திருவொற்றியூர்-எண்ணூர்-மணலி

      இன்று நாட்டில் நிலவும் வறுமையும், வேலையின்மையும் யாரையும் விட்டு வைக்கவில்லை. ``கையில வாங்கினேன்... பையில போடல... காசு போன இடம் தெரியல'' என்று மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன்பே பாடியுள்ளார். எதிர்காலம் மிகவும் இருண்ட காலமாக இருக்கும் என நம்மை எச்சரிப்பதற்காகத்தான் தான் அப்படி பாடி இருக்கிறான்.

      பல்லாயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களைக் கூட பாதியிலே கணக்கை முடித்து வீட்டுக்கு அனுப்பும் அவலம் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அடுத்த நாளே, அதே ஆலையிலேயே அதே தொழிலாளி ஒப்பந்த தொழிலாளியாக பணிக்கு வருவதும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் அடிப்படை, ஆளக்கூடிய அரசும், அதற்கு அஸ்திவாரம் போட்ட உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைதான்!
      இன்று பல்வேறு தொழில்கள் அழிந்துவிட்டன; அல்லது நலிந்து விட்டன. இதன் காரணமாகவும் வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது. இன்று எந்த ஆலையை எடுத்துக் கொண்டாலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இல்லாத ஆலையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. காலை நேரங்களில் ஆலை வாயில்களில் நின்றால் டிரெய்னி என்றும் அப்ரண்டீஸ் என்றும் எழுதிய சட்டையைப் போட்டுக்கொண்ட சிலரோடுஒப்பந்தத் தொழிலாளி என்று எழுதப்படாத சட்டையைப் போட்டுக்கொண்டு அணி சேர்ந்து செல்வதை நம்மால் காண முடியும்.
      240 நாட்கள் பணியாற்றினால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், அதே போல் நிரந்தரத் தன்மையுள்ள வேலைகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் தொழிலாளர்
 சொல்கிறது. அதாவது அப்படிப்பட்ட பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றினால் அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது சட்டம். ஆனால் இதை ஆலை நிர்வாகமும் மதிப்பதில்லை. அரசும் கண்டு கொள்வதில்லை. இதே போலத்தான் ஒவ்வொரு தொழிலாளிக்கும் P.F., E.S.I. பிடிக்கப்பட வேண்டும், விடுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் இருந்தாலும், பல ஆலைகளில் ஒப்பந்தத் தொழிலாளிக்கு இதை அமுல்படுத்துவதில்லை. இதற்கெல்லாம் மேலாக, ஒரு சாண் வயிற்றையும், உடம்பையும் மறைத்து தன் குடும்பத்தோடு மானத்தோடு வாழ வேண்டும் என்ற வேட்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் போது உயிரை விடும் நிகழ்ச்சியும் ஏராளமாக நடந்து கொண்டிருக்கிறது.
      எங்கெல்லாம் ஒப்பந்தத் தொழிலாளிகள் ஒன்றிணைந்து சங்கம் வைத்துள்ளார்களோ, அங்கெல்லாம் P.F., E.S.I. விடுப்பு சலுகைகளைப் பெற முடிந்துள்ளது. எங்கெல்லாம் நாம் சங்கம் சேர்ந்தால் தண்டிக்கப்படுவோம், பழிவாங்கப்படுவோம் என்று அஞ்சி ஒதுங்கி நிற்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் எதையும் பெற முடியாதது மட்டுமல்ல, இருப்பதையும் இழந்து நிற்கிறார்கள்.

      ஆகவே, ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும், ``நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமைச் சங்கிலியைத் தவிர - பெறுவதற்கு ஒரு பொன்னுலகம் உண்டு'' என்ற நம் முன்னோர்களின்அறிவியலை உள்வாங்கிக் கொண்டு ஒன்று சேர்வது மட்டுமே விடியலுக்கான வழி. ஆகவே, நிரந்தரத் தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் கரம் கோர்த்து செயல்படுவோம்! உரிமைகளை வென்றெடுப்போம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா