Friday 20 June 2014

ஒரு ஊதிய ஒப்பந்தத்தின் வர்க்க வாசிப்பு

தோழர்.கருமலையான்
சிஐடியுவின் தமிழ் மாநில
துணைப் பொதுச்செயலாளர்

      ATC டயர்ஸ் நிறுவனம் என்பது சாலையில்லா காடுகள், கழனிகள், சுரங்கங்கள் ஆகியவற்றில் பயன்படும் கனரக வாகனங்களின் இராட்சத டயர்கள் உற்பத்தி செய்வதில் உலகிலேயே பிரசித்தி பெற்றது. 100% ஏற்றுமதி சார்ந்த நிறுவனம் என்பதால் மத்திய - மாநில அரசுகள் வரிச்சலுகைகளை வாரி வழங்கின. 2009-ல் ATC டயர்ஸ் செயல்படத் துவங்கியது ரூ.400 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டது. ஆரம்பத்தில் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் (அனைவரும் ஒப்பந்தத் தொழிலாளர்) பெரும்பாலும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். சம்பளம் நாளொன்றுக்கு ரூ.85\- முதல் ரூ.100\- வரை 12 மணி நேரத்திற்கு மேல் உழைப்பு; ரசாயன மூலப் பொருட்களின் நெடி; இதற்கு மத்தியில்தான் இந்த நவீன கொத்தடிமைகள் உழைக்க வேண்டும்.
      மார்ச் 2010ல் ஒரு வட மாநில அதிகாரி ஒரு தொழிலாளியை கொச்சையான வார்த்தைகளால் திட்டினார். ஆலை முழுவதும் தொழிலாளர்கள் வெதும்பிக் கொண்டிருந்த வேளையில், 1000 பேர் தன்னெழுச்சியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.    உடனே லோக்கல் கரைவேட்டிகள் வருகின்றன; காவல்துறை வருகிறது. ஆனால், போராட்டம் தீவிரமடைகிறது. சிஐடியுவுக்கு சில தொழிலாளர்கள் தகவல் தருகிறார்கள். அடுத்த அரைமணி நேரத்தில் சிஐடியு அங்கு செல்கிறது. சிஐடியு தலைவர்களை கண்டவுடன் கரைவேட்டிகள் பின்வாங்குகின்றன. தொழிலாளர்கள் அனைவரும் அந்த பொட்டல்காட்டு பொதுக்குழுவில் சிஐடியு-வில் சேர தீர்மானித்து விட்டனர். நிலைமையைப் பார்த்த காவல்துறை பின்வாங்கியது.
      8 மணி நேர வேலை, சம்பள உயர்வு, பணி நிரந்தரம், குடிநீர், கழிப்பறை வசதி, அடையாள அட்டை, இஎஸ்ஐ, பிஎப் போன்ற கோரிக்கை பட்டியல் உருவானது. 53 நாள் வேலை நிறுத்தம் . வேலை நிறுத்தத்தை உடைக்க உள்ளூர் கைக்கூலிகள் உதவியை நாடியது நிர்வாகம். மேலும் சிறப்பு பொருளாதார மண்டல அதிகாரியையும் அணுகியது. ஒன்றும் பலிக்கவில்லை. நிர்வாகம் காலவரையின்றி கதவடைப்பு செய்தது. இரண்டு மாதம் போராட்டம் நடந்தது. வீடு வீடாக சந்திப்புகள் நடத்தி தொழிலாளர்கள் ஆசுவாசப்படுத்தப்பட்டனர். இறுதியாகப் போராட்டம் வெற்றி பெற்றது.
      தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேறியது. கான்டிராக்ட் தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டனர். முதன் முதலாக 158 பேர் நிரந்தரப்படுத்தப்பட்டனர். ரூ.85\- ஊதியம் ரூ.280\-, ரூ.300 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.6800\- முதல் ரூ.7000\- வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.
      தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையின் பலனை தற்போது ருசிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த ஒற்றுமையை உழைப்பிற்கும் மூலதனத்துக்கும் இடையிலான கூலி உயர்வுப் போராட்டம் தான் உருவாக்கியுள்ளது. அதை அப்படித்தான் உருவாக்க முடியும்.

      அதோடு நின்றுவிடாமல் மூலதனத்தோடு மோதித் தீர்க்க வேண்டிய முழுப் போருக்கு இவர்களின் `உணர்வு'' நிலையை உயர்த்த வேண்டிய பொறுப்பும், கடமையும் நம்முன் உள்ளது.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா