சு.சக்கீர்
240\J030
240\J030
சுதந்திரப் போராட்ட காலத்தில், சமூக நல இயக்கங்கள் தங்கள் எண்ணங்களைப் பரப்புவதற்கும், அரசாங்க அடக்குமுறைகளுக்கு எதிராக மக்களை அணி திரட்டுவதற்கும், பத்திரிக்கைகளை நடத்தியுள்ளன. திலகர் கேசரி இதழை நடத்தினார். மகாத்மா காந்தி யங் இந்தியா, ஹரிஜன் போன்ற பத்திரிகைகள் வாயிலாக பல்வேறு கருத்துப் போராட்டங்களுக்கு விதை விதைத்தார். சுதேசாபிமானி என்ற பத்திரிக்கை நடத்தியதற்காக ராமகிருஷ்ணன் என்ற தேச பக்தர், அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டு செல்லுலார் சிறையிலேயே மாண்டு போனார். லாலா லஜபதி ராய் நடத்திய தி பீப்பிள், நேருவின் முன்முயற்சியால் லக்னோவிலிருந்து வெளியான தி நேஷனல் ஹெரால்டு ஆகிய ஆங்கில பத்திரிகைகள் வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தைக் கூர்மை பெறச் செய்ததில் பெரும் பங்கு ஆற்றின. டாக்டர் அம்பேத்கர் மூகநாயக், பகிழ்க்ரித் பாரத், சமதா போன்ற பத்திரிகைகளின் வாயிலாக தமது சமூக சிந்தனைகளைப் பதிவு செய்தார்.
``மக்களிடம் நீ ஓர் அடிமை என்பதை உணர்ந்து கொள். புரட்சி செய்ய வேண்டியவன் நீ'' என்பதை உணர்த்திட 1930ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற ஒடுக்கப்பட்டோரின் மாநாட்டில் ஜனதா என்கிற ஒரு இதழை வெளியிட்டு, டாக்டர் அம்பேத்கர் அழைப்பு விடுத்தார். இந்திய மக்கள் விழிப்புணர்வு அடைய பிரபுத்த பாரத் என்ற பெயரில் ஓர் பத்திரிக்கையை ஆரம்பித்தார் அம்பேத்கர். சுதேசமித்ரன், யங் இந்தியா ஆகிய பத்திரிகைகள் வாயிலாக பாரதியார் கருத்துப் பிரச்சாரம் செய்தார்.
ஒரு காலத்தில் சமூக சீர்திருத்தத்திற்கான கருவியாக இருந்த பத்திரிகைத்துறை பிற்காலத்தில் வர்த்தகமாக மாறிவிட்டது. இதன் காரணமாக செய்திகளில் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கிடைத்தது. நியாயமான கருத்துக்களை சீர்திருத்தப் பார்வையோடு ஆய்வு செய்வது அடியோடு நின்றுவிட்டது. சாதாரண மக்களில் பாதிப் பேரை முட்டாளாக்குவதிலும், மீதிப் பேரை சுயநலவாதிகளாக்குவதிலும் வர்த்தக ஊடகங்கள் வெற்றி கண்டுள்ளன. உலகமயத்திற்கு துதிபாடுவதும், சுரண்டப்படுபவர்களின் வேதனைக் குரல்களை இருட்டடிப்பு செய்வதும் முதலாளித்துவ அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்குத் தான் என்பதை ஏனோ பெருவாரியான உழைப்பாளி மக்கள் உணர்வதே இல்லை. பத்திரிகைத்துறை ஏகபோக மூலதனத்தின் தலையாட்டி பொம்மைகளாக மாறி நீண்ட காலமாகிவிட்டது. தற்போது பரவியுள்ள கார்ப்பரேட் கலாச்சாரமானது, நாட்டு வளங்களை கண்மூடித்தனமாக கொள்ளையடிப்பதிலும், பொதுத்துறை நிதி ஆதாரங்களை சூரையாடுவதிலும் குறியாக இருப்பதோடு, ஏழைகளை மூளைச் சலவை செய்வதிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கண்டுள்ளது என்பதை அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன.
உலகம் முழுவதும் தற்போது 6 கார்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் 1500 நாளிதழ்கள், 1100 வார இதழ்கள், 9000 வானொலி நிலையங்கள், 1500 தொலைக்காட்சி நிலையங்கள், 2400 பதிப்பகங்கள் இயங்குகின்றன. ஜி.இ. டிஸ்னி, நியூஸ் கார்ப்பரேட்ஸ், வியாகான், டைம் வார்னர், சி.பி.எஸ். ஆகிய ஆறு பகாசுர நிறுவனங்கள்தான் இன்று, உலகம் எந்தத் திசையில் இயங்க வேண்டும் என்று தீர்மானிக்க வல்லமை படைத்த கார்ப்பரேட் பூதங்கள் ஆகும். நாம் எவ்வளவு பெரிய சதிவலையில் சிக்கியுள்ளோம் என்பதை உணர்ந்து, எச்சரிக்கையாகச் செயல்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் நமது தொழிலாளர் வர்க்கக் குரலை எழுப்பக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்பதை மறவாதீர்கள்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா