Wednesday 20 August 2014

ஈரம் தொடர்கிறது

தன.சம்பத்
255\J144

ஈரைந்து மாதங்கள்
இருட்டறையில் சுமந்தவளை
தொடர்ந்து வந்த காலத்தில்
தோளிலே சுமந்தவரை

காத்திட மனமிருந்தும்
தலையணை மந்திரத்திற்கு
தட்டாமல் தலைவணங்கி
காப்பகத்தில் சேர்த்து விட்டு

தானீன்ற தவப் புதல்வனை
தாலாட்டி வளர்த்திட்டான்!
கண்ணான தன் மகனை
கல்லூரியில் சேர்த்துவிட
விண்ணப்பம் வாங்கிவர
பெற்றோரை நாடி வந்தான் _ மறுக்காமல்
கால்கடுத்தாலும் _ கண் கலங்காது
கருணையுடன் காத்திருந்தனர்!


வேலைக்குப் புறப்பட்ட நேரம்
வெளியில் சென்ற மகன்
வேகமாய் எதிர்கொண்டான்
விளக்கம் கேட்குமுன்னே _ தந்தையே...
தாத்தா பாட்டியைத் தாங்கள்
காப்பகத்தில் சேர்த்தது போல்
தங்களைச் சேர்ப்பதெந்தன்
தலையாயக் கடமையென்று
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய்
முன்பதிவு செய்து வந்தேன்
தவறொன்றுமில்லையே? என்றான்!

இடைப்பட்ட இருவருக்கும்
கண்ணின் ஓரத்தில் கசிந்தது ஈரமா _ இல்லை
தன் மகன் தனக்குரைத்த பாடமா? இல்லை
தன் எதிர்கால நிலையை எண்ணி
நெஞ்சிலே உண்டான பாரமா?
அம்மா அப்பாவை ஆசையாய் காக்காமல்
அமாவாசையன்று காக்கைக்கு உணவிடுதலும்
அவர்களுக்கு தன்னை அர்ப்பணம் செய்யாமல்
அவர்களை வேண்டி தர்ப்பணம் செய்தலும்
எதிர்கால சந்ததிக்கு ஏற்புடைய பாடமாகா!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா