Thursday 22 January 2015

என்ன செய்வார்கள்? இனி...

அற்புதம் ஜேசுராஜ்
எவரெடி தொழிலகம்



அசிங்கமாக இருப்பதாகச் சொல்லி
ஆற்றங்கரையில் இருந்து
அப்புறப்படுத்தினார்கள்
எங்கள் வீடுகளை...

அழகூட்டுவதாகச் சொல்லி
அங்கேயே
கட்டிக் கொண்டார்கள்
அவர்களின் மாடிகளை!

கடலுக்குள் போய்விடும்
கவலை வேண்டாமென
கழிவுகளைக் கொட்டினார்கள்...
குளிர்பான ஆலைக்கு வேண்டுமென
குழாய் பதித்து
நீரை உறிஞ்சினார்கள்!

அப்போதெல்லாம் ஆற்றுமணலில்
அழுதுபுரண்டபடி
மாரியாத்தா கேட்பாள் என்று
மண்ணை வாரித் தூற்றுவாள் அம்மா!

இன்று...!

அவள் வாரித் தூற்றிய மண்ணையும்
வாரிக் கொண்டு போகிறார்கள்
லாரிகளில்...!
என்ன செய்வார்கள்... இனி...
அம்மாவும்...
மாரியாத்தாவும்...?

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா