Thursday 22 January 2015

இன்னிக்கு நைட் வெயில் காயுமா?

S.கெஜராஜ் 
375/K700
Mechatronics


பிள்ளைகளை வெளியூரில் கட்டிக் கொடுத்துவிட்ட திருநாவுக்கரசு பணியிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். அவ்வப்போது தனது அன்பு மனைவி மீனாட்சிக்கு உடல்நலமில்லாமல் போனாலும், மனைவியுடன் வாழ்க்கை மகிழ்ச்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது!

ஒரு நாள் திருநாவுக்கரசுவின் இளம் வயது நண்பன் சண்முகம் வீடுதேடி வந்து தன் மகள் திருமணத்திற்காக அவசியம் குடும்பத்துடன் வந்துவிட வேண்டுமென்று பத்திரிகை கொடுத்துவிட்டுச் சென்றான். ``ஒரே ஊர்க்காரன் என்பதாலும், இளவயதிலிருந்தே பழக்கம் என்பதாலும் இந்தக் கல்யாணத்திற்கு நாம போயே ஆகணும், உனக்கு உடம்பு சரியில்லாததால நீ வீட்டுல இரு. நான் மட்டுமாவது போயிட்டு வந்துடுறேன். நான் கூட போகலன்னா நல்லா இருக்காது. தேவைப்பட்டா உன் தங்கச்சி சாந்தா வீட்டுக்கு போறதா இருந்தாலும் போய்க்கோ. இல்லன்னா அவளை இங்க கூப்டுக்கோ'' என்று கூறி அன்று இரவு ரயிலுக்குப் புறப்பட்டுவிட்டார் திருநாவுக்கரசு.

பிரிய மனமில்லாமல் கனத்த இதயத்துடன் கணவனை வழியனுப்பி வைத்தாள் மீனாட்சி.

``இன்னா மச்சான் இன்னிக்கி நைட் வெயில் காயுமா?'' புலி என்கிற புலித்தேவனைப் பார்த்து துரைசிங்கம் கேட்டான். ``மாமு, விஷயமே தெரியாதா? இனிமே நமக்கு எல்லா நைட்டும் வெயில் காயும்'' என்று அவர்களுக்கு மட்டுமே தெரிந்த சங்கேத வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டனர். ``இன்னா சொல்றே? கொஞ்சம் புரியும்படியா சொல்லு'' என்றான் துரை. ``மாமு... எந்தெந்த ஏரியாவுல  வயசானவங்க தனியா இருக்காங்கன்னு தினசரியிலேயே  போட்டிருக்கான். இது எப்படி இருக்குதுன்னா நம்பள மாதிரி ஆளுங்களுக்காகவே லிஸ்ட் போட்டு கொடுத்தாப்புல இல்ல? இது போதாதா மாமு நம்ம வருமானத்திற்கு.'' ``டேய் மச்சான் புலி, நீ உண்மையிலேயே நல்ல விஷயத்தை சொன்ன. நம்ம பொழப்புக்கு எந்த பிரச்சனையும் இல்ல. இனிமே நம்ம காட்டுல மழைதான் போ'' என்றான் சந்தோஷம் பொங்க துரைசிங்கம்.

இரவு வெகுநேரம் பேசிக் கொண்டிருந்த மீனாட்சியும், அவளது தங்கை சாந்தாவும் அயர்ந்து தூங்கினார்கள். திடீரென சலசலப்பு சத்தம் கேட்டு விழித்த சாந்தாவின் முகத்துக்கு நேரே கத்தியைக் காட்டியபடி ``சத்தம் போட்டா சொருகிடுவேன்'' என்று கூறி அருகிலிருந்த நாற்காலியில் உட்கார வைத்து கயிற்றால் கட்டினான் புலி. திடுக்கிட்டு விழித்த மீனாட்சி தங்கை கயிற்றால் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு ``டேய் யார்ரா நீங்க?'' என்று கூச்சலிட்டார்! துரை உடனே அவளைக் கத்தியால் குத்தப் போனான். அருகில் நெருங்கி வந்த புலி கூர்ந்து பார்த்தான். ``மாமு இவங்க எங்க அம்மாடா... அவங்கள ஒன்னும் செஞ்சிடாதேடா. விட்டுடு'' என்று கெஞ்சினான். நகையும், பணமும் ஒன்றே குறிக்கோளாக இருந்த துரை காதில் அவன் குரல் விழவே இல்லை. ஓங்கிக் குத்தும்போது இடைமறித்து குறுக்கே பாய்ந்த புலியின் வயிற்றில் சொருகியது துரையின் கத்தி. ``அம்மா'' என்று அலறியபடி கீழே சாய்ந்தான் புலி.

செய்வதறியாது திகைத்தனர் மீனாட்சியும், சாந்தாவும். இதற்கிடையில் அக்கம்பக்கத்தினர் கூடிவிட்டனர் துரைசிங்கம் பிடிப்பட்டான். ``அம்மா நான்தான் உன் பிள்ளை மணி. ஊர் திருவிழாவில் தொலைந்து போன பின் சேராதவர்களுடன் சேர்ந்து இன்று கொலை, கொள்ளைனு பாவம் செய்ற பாவி ஆயிட்டேன்'' என்று கூறியவாறே தன் பர்சிலிருந்த தாய், தந்தை போட்டோவை காண்பித்தவாறே உயிர் பிரிந்தது புலிக்கு.

பல வருடங்களுக்கு முன் காணாமல் போன மகனைப் பிணமாக மீனாட்சி தன் மடியில் கிடத்தி, அழுத நிலை சுற்றியிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது. கூடா நட்பு கேடாய் முடியும்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா