Thursday 22 January 2015

பாலியல் வன்கொடுமைகளைசட்டம் தடுத்துவிட்டதா?

S.பாக்கியம் 
செயலாளர்,
அனைத்திந்திய ஜனநாயக 
மாதர் சங்கம்



சமூக வளர்ச்சிப் பாதையில் பெண்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறார்கள் என்பது உண்மையே. கல்வியில், அனைத்துத் துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் பல சாதனைகளைப் படைத்துள்ளார்கள். பெண்கள் பாதுகாப்புக்காக, சமத்துவத்துக்காக பல சட்டங்கள் போடப்பட்டுள்ளன. ஆனால், அந்தச் சட்டங்கள் பெண்கள் மீதான வன்கொடுமைகளை, பாலியல் பலாத்காரங்களை, கௌரவக் கொலைகளை தடுத்து விட்டனவா என்றால் இல்லை என்பதே அனுபவமாக உள்ளது.

டில்லி மருத்துவ மாணவி 2012 டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் ஆறு கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தியால் நாடே அதிர்ந்து போனது. தூத்துக்குடியில் 9வயது சிறுமி புனிதா; உபியில் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து மரத்தில்; பொள்ளாச்சி விடுதியில் இரண்டு மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது; திருவொற்றியூரில் 6 வயது சிறுமி 54 வயது முதியவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது என பட்டியல் நீண்டு கொண்டே போகும் நிலை இன்றுள்ளது.

வர்மா கமிஷன் பெண்களுக்குப் பாதுகாப்பாக ஏராளமாக சட்டங்கள் இருப்பதாகக் கூறுகிறது. ஆனால், அவை நடைமுறைப்படுத்தப்படுன்றனவா என்றால் அது கேள்விக்குறியே. பெண்கள் காவல்நிலையத்தில் புகார் செய்தால் தங்கள் மானம் போய்விடும் என்று புகார் கொடுப்பதில்லை. அப்படியே துணிந்து சில பெண்கள் புகார் செய்தாலும் அது வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதில்லை.

குழந்தை வன்முறை சட்டத்தில் பெண் காவலர்கள் குழந்தைகளைக் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கக் கூடாது என்றும், சீருடை அணியாமல் பொதுவான இடத்திற்கு அழைத்து நட்பாக விசாரிக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், எந்தக் காவல் அதிகாரிகளும் இதைப் பின்பற்றுவதில்லை. அதிகாரிகள் மட்டுமல்ல, ஆட்சியில் இருப்பவர்களும் பாலியல் பலாத்காரத்திற்குக் காரணம் பெண்கள் அணியும் ஆடை அணிகளே என்கின்றனர். 6 வயது குழந்தையும், 60 வயது பாட்டியும் ஆபாச ஆடை அணிந்தா பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்பட்டார்கள்?

நுகர்வோர் கலாச்சாரத்தில் பெண்களை போகப் பொருட்களாகப் பார்க்கும் நிலை மாற வேண்டும். சட்டங்களைப் போடுவதாலோ, தண்டனைகள் கொடுப்பதாலோ பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, பலாத்கார வன்புணர்ச்சி நிகழ்வுகளுக்கு முடிவு கட்ட முடியாது. ஆண் ஆதிக்க சமுதாயத்தில் பெண் சமத்துவம் என்பது மேடைப் பேச்சாக மட்டும் இருப்பதில் மாற்றம் கொண்டுவர வேண்டும். பெண்ணும் உயிருள்ள, உணர்வுள்ள ஒரு மனுஷிதான் என்கிற கருத்தியல் மாற்றத்தைச் சமுதாயத்தில் உருவாக்க வேண்டும். இதைப் பெண்கள் மட்டும் போராடி சாதிக்க முடியாது. முற்போக்கு சமத்துவ எண்ணம் கொண்ட ஆண்களும் பெண்களும் ஒன்றுபட்ட போராட்டத்தினால்தான் இந்த சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா