தன.சம்பத்
255\J144
97102 97427
மண்ணுக்கு விடைகொடுத்து
கண்ணுக்குத் தெரியாமல்
விண்ணுக்குச் சென்று
பிறந்த இடம் தேடி மீண்டு(ம்) வந்த
எனைக் கருங்குடை கொண்டு மறைத்தீர் - ஆனால்
பெரும் மடை கொண்டு மறைத்தீரா - அன்று
கோட்டை கட்டிய மன்னன் கிழித்த
கோட்டை நான் தாண்டியதில்லை
அக் கறையில்லா மன்னன் கொண்ட
அக்கரையை நான் மதித்தேன்!
ஆம்! நாட்டைக் காக்க காட்டைப் பெருக்கினான்!
அணை கட்டி எனை அணைத்துக் கொண்டான்!
ஆறாப் பசி தீர்க்க ஆறும் வெட்டினான் -ஆற்றோரம்
மரம் வளர்த்த மன்னன் வளம் தரும் குளம் அமைத்தான்!
சாலையோரம் சோலையாக்கினான் - அதனால்
செல்லுமிடமெல்லாம் செல்லப் பிள்ளையாய் நானிருந்தேன். - இன்று
காட்டை வீடாக்கினீர்
ஓசோனை ஓட்டையாக்கினீர்! - மன்னன்
வெட்டிய குளத்தைக் காக்க மறந்தீர்!
தூர்வாரி எனைத் தேக்க மறந்தீர்!
கெடுப்பதூஉம் - எடுப்பதூஉம் என என் மீது பழிபோட்ட
வள்ளுவனை நான் வன்மையாய் கண்டிக்கிறேன்! ஆற்றிலே
மணற்கொள்ளை - அதனால் ஊற்றுக்கோ வாய்ப்பில்லை - எனை
அணை கொண்டு தடுக்காமல் - பண்பட்ட பாதையும் வகுக்காமல்
எனை வேண்டி ராகம் இசைப்பதும் - யாகம் வளர்ப்பதும் வீணே!
கள்ளமிலா உள்ளமாய் அவனியிலே பவனிவரும் எனை
கரைபுரண்ட வெள்ளமாய் மாற்றுவது யார் குற்றம்?
அன்றாடம் தாகம் தீர்த்த அழகான ஏரியை
அடுக்குமாடிக்கு பலி கொடுத்தது யார் குற்றம்?
நான் விழுவதே நீங்கள் வாழத்தானே! - எனைப்போல்
பொதுநோக்குடன் பொறுமையாய் சிந்திப்பீர்!
வீட்டுக்கொரு மரம் வளர்ப்பீர்! - அந்த மரத்துக்குள்
மறைந்திருந்து மழையாய் நான் உருவெடுப்பேன்!
எனை அணைகட்டி அணைத்துப் பாருங்கள்!
அனைத்தும் பலனளிக்கும்!
வறட்சியை விரட்டிடுவேன்!
பசுமைப் புரட்சிக்கு வித்திடுவேன்!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா