Thursday 22 January 2015

கோவில்கள் வேண்டாம் என்பதல்ல!

சு.சக்கீர்
240\K030



இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்டத்தில் உலகம் முழுவதும் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. சமூக அடுக்குமுறைகளில் இருந்தும், அடிமைத்தனத்தில் இருந்தும் விடுதலை கிடைக்க வேண்டும் என்ற ஒரு பெரும் சமூக எழுச்சி ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் புயலாக வீசியது. தந்தை பெரியார், இரட்டைமலை சீனிவாசன், அய்யங்காளி, ஸ்ரீ நாராயண குரு போன்ற பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகள் சமூக எழுச்சிக்கான கருத்துகளை மிக வீரியமாக எடுத்துரைத்தனர். இந்தியா முழுவதும் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்துடன், சமூக விடுதலைக்கான இயக்கங்களும் வலுவாக நடைபெற்றன.

கோவில் நுழைவுப் போராட்டங்கள், ரவிக்கை அணிய, செருப்பு அணிய, சாதீய அடக்குமுறைக்கு எதிரான இயக்கங்கள் என அன்றைய நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளை நாம் மறக்க முடியாது. இந்த காலக்கட்டத்தில் சமூக சீர்திருத்தப் பணியில் முன்னணியில் செயல்பட்டவர் ஸ்ரீ நாராயண குரு. அடிமைப்பட்டுக் கிடந்த ஈழவ சமுதாயத்தின் உரிமைகளுக்காகப் போராடவும், அம்மக்கள் சமுதாய அந்தஸ்து பெறவும் பாடுபட்டவர் ஸ்ரீ நாராயண குரு. 1912ல் கேரள மாநிலம் சிவகிரியில் மூன்று நாள் மாநாட்டை நடத்தி, அதுவரை இருந்து வந்த பிராமண ஆதிக்கத்தைத் தீர்த்துக் கட்ட ஒரு புதிய வழிபாட்டு முறையை அறிமுகம் செய்தார். பாரம்பரிய பூஜை முறைகளை நிராகரித்து, அவர் உருவாக்கிய மடங்களில், முகம் பார்க்கும் கண்ணாடியை நிறுவச் செய்தார். ``ஞானத்தால் எழுச்சி பெறுங்கள்'' என்ற புரட்சிகர தத்துவத்தை எழுப்பினார் நாராயண குரு. அவர்கள் உருவாக்கிய கோவில்களில் பூஜை முறை எவ்வாறு இருக்க வேண்டும் என்று கேட்ட போது, வெள்ளை பூசியுள்ள சுவர்களில் கறை படியாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். தோழர் ஏ.கே.ஜி., நாராயண குரு, அய்யங்காளி போன்றவர்களின் முயற்சிகள் மூலமாக 1936ல் சித்திரைத் திருநாளில் திருவிதாங்கூர் மகாராஜா, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கோவில் நுழைவுச் சட்டம் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விஞ்ஞானமும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. எனினும் பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் இன்னும் வருணாசிரம கோட்பாடுகளின் புகலிடங்களாகவே இருந்து வருகின்றன. மூடநம்பிக்கைகள் ஒழிந்தபாடில்லை. சாதிகள் இரண்டொழிய வேறில்லை என்ற புரட்சிகர சிந்தனைகள் நாடெங்கும் பரவ வேண்டும். கௌரவ கொலைகளுக்கும், சாதிய அடக்குமுறைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வழிபாட்டுத் தலங்களை கலாச்சார மையங்களாக மாற்ற வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் கோவில்கள் வேண்டாம் என்பதல்ல. அவை மதவெறியர்களின் கூடாரங்களாக மாறிவிடக்கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மதம் எதுவாக இருந்தாலும் மனிதன் மேன்மையடைந்தால் போதும் என்ற நாராயண குருவின் கருத்தினைச் சரியாக, முழுமையாகப் புரிந்து கொள்வோம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா