Saturday 13 October 2012

திரைப்படத்துறையின் மாறும் முகம்



சு.சக்கீர் 240\K030

      உலகமயம் எந்தத் துறையையுமே விட்டு வைக்கவில்லை. திரைப்படத்துறை மட்டும் தப்புமா.. என்ன? திரைத்துறையின் முகத்தை உலகமயம் முற்றிலும் மாற்றிவிட்டது. கொலம்பியா பிக்சர்ஸ், டிஸ்னி, ஃபாக்ஸ் ஸ்டூடியோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களும் திரைத்துறையில் நுழைந்தது. மக்கள் ரசனையை மேம்படுத்த அல்ல என்பது நாடறிந்த உண்மை. முதலாளித்துவ சிந்தனையையும்,
சீரழிவு கலாச்சார வக்கிரங்களையும் விற்று லாபம் பார்ப்பதற்கு மட்டுமே இவைகள் வருகின்றன. தனிமனித சாகசங்களையும் விஞ்ஞான முன்னேற்றங்கள் மூலம் உருவாக்கும் கிராஃபிக்ஸ் தந்திரங்களையும் மூலதனமாக்கி, மனித மூளையை மழுப்புகின்ற வேலைகளை இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்றாகவே செய்து வருகின்றன.

      ஆட்சி அதிகாரம் மூலமாக குவியும் கறுப்புப் பணத்தை, பாதுகாப்பதற்காகவே திரைப்படத்துறையில் நுழைபவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்தன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திரைப்படத் துறையில் அன்றைய ஆளும் கட்சிக்கு இருந்த செல்வாக்கு படிப்படியாக குறைந்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது. மூலதனம் பாதாளம் வரை மட்டுமல்ல, மனித உள்ளங்களிலும் பாய்ந்து கருத்துச் சிதைவை ஏற்படுத்த வலிமை பெற்றவை என்பதாகும். திரையரங்குகள் கிடைக்காமல் சிரமப்பட்ட சிறிய முதலீட்டு திரைப்படங்கள் வழக்கு எண் 18\9, மெரினா, அரவான் போன்ற படங்கள் வெளியிட தமிழகத்தின் ஆட்சி மாற்றம் உதவியது.

      திரையரங்குகள் திருமண மண்டபங்களாக, அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறிவரும் சூழலில், திரையரங்கத்திற்குள் சென்று, குடும்பமாகப் படம் பார்ப்பது ஏழை எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகவே மாறிவிட்டது. இன்றைய திரைப்படங்கள் பெரும்பாலும் குறிவைப்பது விடலைப் பருவம் கடந்து, குடும்பச் சுமைகளை ஏற்பதற்கு முன்பு சுதந்திரமாகத் திரியும் இளைய தலைமுறையைத்தான். அதாவது, சமூக சிந்தனை மேலோங்க வேண்டிய வாலிபப் பருவத்தை திசைதிருப்பும் வேலையைத் தான் பெரும்பாலான திரைப்படங்கள் செய்கின்றன. திரையரங்கில் இருந்து கிடைக்கும் வருவாயை விட பல மடங்கு வருமானம் சாட்டிலைட் உரிமை, சமூக வலைத்தளங்கள், பாடல்களின் அலைபேசி அழைப்பு உரிமை போன்றவைகள் மூலமாக தயாரிப்பு நிறுவனங்கள் பெற்று விடுகின்றன.

      வர்த்தக ரீதியாகவும், விஞ்ஞான வளர்ச்சியின் வாயிலாகவும் பணம் போட்டு திறமையாகப் பணம் பண்ணும் யுடிவி, மோசர்பேர் போன்ற பன்னாட்டு முதலைகளுடன் மோதுவது சாதாரணமானவர்களுக்கு மிகவும் சிரமமான காரியம். இவ்வளவு தடைகளையும் தகர்த்து பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி, சசிக்குமார், அமீர் போன்ற இயக்குனர்கள் வெற்றிப் படங்களுடன் முன் வரிசையில் நிற்கிறார்கள் என்பதே ஆறுதலான விஷயம்.

      உலகமயத்தில் மாறும் திரைப்படத் துறையின் உள்நோக்கம் குறித்து அறிவும், அதன் பின்னால் உள்ள அரசியலைப் புரிந்து கொள்ளவும் சரியான உதாரணம் சமீபத்தில் வெளியான ``இன்னோசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ்'' என்ற திரைப்படம். இஸ்லாமிய சமூகத்தின் மீதும், அவர்கள் நேசிக்கும் நபிகள் நாயகம் மீதும் அவதூறைப் பரப்பி இன்று அரபு உலகமே கொந்தளித்துள்ளது.

      இன்றைக்குப் பெரும்பாலான திரைப்படங்கள் நிஜவாழ்க்கையில் சாதாரணமாய் இருந்து பெரிய அளவில் வெற்றிபெற்ற மனிதர்களைப் பற்றிச் சொல்வதற்கு காரணம், யதார்த்த வாழ்க்கையில் தோல்விக்கு மேல் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் அப்பாவி மக்களின் மீதுள்ள கரிசனமல்ல. வாழ்க்கைச் சுமைகளின் மீது வெறுப்படைந்தவர்களை திசைத்திருப்பி நிமிஷ நேரத்துக்கான ஆத்ம திருப்தியை அடைந்து கொள்ளட்டும் என்ற தந்திரம் மட்டுமே ஆகும். அட்டைக்கத்திகள் வெள்ளித் திரையில் தோன்றும் போது, பார்வையாளர்களும் சுயபரிசோதனைக்குத் தயாராக வேண்டிய சூழல் இது!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா