Saturday, 13 October 2012

அடுத்த தலைமுறைக்கான சூழலியல் கல்வி - அவசிய தேவை



R.பத்மநாபன்  261\L054 தலைவர், உழைப்போர் உரிமைக் கழகம்

குழந்தைகளை நல்ல மானிடராய் ஆக்குவது கல்வி. கல்வியின் உள்ளடக்கம், பயிற்றுமுறை குறித்து விவாதித்து சிந்தனையாளர்கள் குழந்தைகளுக்கு சூழலியல் கல்வி இன்றையத் தேவை என முன் மொழிந்துள்ளனர்.

      சூழலியல் என்பது உயிரினங்களுக்கும், அவற்றைச் சார்ந்துள்ள மற்ற காரணிகளுக்கும் இடையிலான உறவுமுறை குறித்து உணர்த்துவது. சூழலியல் பற்றி அறிவதற்கு முன்பு குழந்தைகளுக்கு இயற்கையைக் கற்றுத் தர வேண்டும். சூழலியல் கல்வியை கரும்பலகையில் மட்டும் கற்றுத்தர முடியாது. வகுப்பறைக்கு வெளியே உள்ள உலகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளதுதான் சூழலியல் கல்வி.

      குழந்தைகளின் மூளையின் உயிரணுக்குள் மிகவும் மென்மையானவை. குழந்தைகள் கண்ணால் காணும், காதால் கேட்கும், உடலால் உணரும் பொருட்களில் இருந்து தொடங்கும் கல்வியைத் தான் உள்வாங்கும். குழந்தைகளை இயற்கையிடமிருந்து பிரித்து கற்றலின் ஆரம்ப நாட்களில், எந்திர கதியில் கல்வியைத் திணிப்பதால் அவர்களின் மூளை விரைவில் களைப்படைந்து எதையும் புரிந்து கொள்ள முடியாமல் தனிமையடைகிறார்கள்.

      மகிழ்ச்சி தரும் பாடங்களால் மட்டுமே குழந்தைகளின் மன ஆற்றலை வளர்க்க முடியும். அதைவிடுத்து கீழ் படிதல் மட்டுமே நல்ல ஒழுக்கம் என்று ஆசிரியர்களும், குழந்தைகளின் மதிப்பெண்களைக் கொண்டு அவர்களை அளவிடும் பெற்றோர்களும் குழந்தைகளின் நுண்ணறிவு சார்ந்து சிந்திக்கும் ஆற்றல் அடைபட்டுப் போனதை உணரவே இல்லை என்பது இன்றைய கல்வி முறையின் அவலம்.

      குழந்தைகளின் உலகம் எந்திரத் தனமானது அல்ல. ஒவ்வொரு குழந்தையும், தன்னைச் சுற்றியுள்ள உலகத்தில் இருந்து ஏதேனும் ஒன்றை உள்வாங்கிக் கொள்கிறது. இயற்கை சூழலில் சுதந்திரமாய் உணரும் ஆற்றலில் இருந்து குழந்தைகள் புதிய விஷயங்களையும், ஞானங்களையும் கற்று உணர்கிறார்கள்.

      உழைப்பின் மகத்துவத்தை, மனிதனை மனிதனாகப் புரிந்து கொள்ளும் ஆற்றலை, இயற்கையை விரும்பும் சுரண்டலற்ற சமத்துவ வாழ்க்கை நெறிமுறையை குழந்தைகளுக்குப் புரியும் இயற்கை மொழியில் பயிற்றுவித்தால் அவர்களின் இதயங்களில் கனிவும், இரக்கமும் அரும்பும். அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பினோர் வெள்ளம் என்பார் மகா கவி பாரதி. உள்ளத்தாலும், உடலாலும் வலிமையான குழந்தைகளை எதிர்கால வகுப்பறையில் உருவாக்க, சூழலியல் கல்வியை அடித்தளமாக்குவோம்!

      அடுத்த தலைமுறைக்கு சூழலியல் கல்வி. அவசியத் தேவை!

      தேவையை உணர்வோம்! குழந்தைகளை சிந்தனையாளர்களாக்குவோம்! மனிதனை மனிதன் ஒடுக்கும் வன்மத்தை எதிர்க்கும் திண்மையைத் தருவோம்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா