Saturday, 13 October 2012

மனிதம் (முதல் பரிசு பெற்ற கவிதையில் இருந்து)



தன சம்பத், 265/J144

மனிதம் என்பது மண்ணுக்குள்
      புதைந்திருக்கும் புதையல் அல்ல!
மனதிற்குள் மறைந்திருக்கும்
      மகத்தான புனிதமது!

வழிபட வந்தவரிடம்
      வழிப்பறி செய்துவிட்டு
இருகரம் கூப்பி இறைவனை வணங்கி
      மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு
உண்டியல் நிரப்புவது மனிதமல்ல!


சட்டவிரோத கதவடைப்பு பட்டினிச்சாவு என
      விதியை எண்ணி வீதியோரம் வந்தார்க்கு
ஆதரவளித்து போராட்ட நிதிதிரட்ட
      உண்டியை உள்ளங்கையில் ஏந்தி
பரிவை உள்ளங்களில் தாங்கி
      தோழர் துயர்துடைக்க துணை நின்றால்
அதுவன்றோ அருமனிதம்!

போராட்டம் என்பது பாட்டாளி வர்க்கத்தின்
      பரம்பரை சொத்து! அதிகார வர்க்கத்தின்
அடக்குமுறைக்கு அடிமைப்பட்டு
      துரோகச் செயலுக்கு
துணை போவதல்ல நல்மனிதம்!

கடந்து செல்லும் பாதையிலே
      விபத்தொன்றைக் கண்டுவிட்டால்
பதறித் துடிப்பது போல்
      பாசாங்கு செய்துவிட்டு
சிதறிக் கிடப்பவற்றைப்
      பதுக்கிடுவோர் மத்தியிலே
உயிர் காக்க துடிப்புடனே
      உதவிடும் மனிதருள்
உலவிடும் உயர் மனிதம்!

புறப்படும் வேளையிலே
      எதிர்கொண்டாள் விதவை என
சகுனம் பார்த்திட்டாள் அந்த
      குணம் கெட்ட தாய்! தன்
தாயின் செயல் எண்ணி
      தனக்குள்ளே நொந்து கொண்டான்
தந்தையை இழந்த மகன்!
      தடுமாறவில்லை தரமான மனிதம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா