தலையங்கம்
சாதிவெறிக்கெதிராக களம் பல கண்ட தமிழகம்...
இன்று கலவர பூமியாவதோ?
மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும், சாதிய கொடுமைகளுக்கு எதிராகவும் தந்தை பெரியாரின் சீர்திருத்த கருத்துக்களோடு கம்யூனிஸ்டுகளும் இணைந்து கைகோர்த்து களம் பல கண்டதால், மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்டு தலைநிமிர்ந்து நின்றது தமிழகம். இன்று சாதியின் பெயரால் கலவரம் ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் அவலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் காட்டுமிராண்டித் தனமான அரக்கத்தனமான செயல்கள் தமிழகத்திற்கே தலைகுனிவாகும்.
அறிவியலும் நாகரீகமும் வளர்ந்து வரும் இன்றைய சமூகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பிக் காதலித்து திருமணம் செய்து கொள்வதைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாமல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் நம்மை பெரும் கவலை கொள்ளச் செய்கிறது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உடனடியாக பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டியதை மனதாரப் பாராட்டுகிறோம். தமிழக அரசு, கலவரத்தால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் துயர் துடைக்க, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோரிக்கைகளான பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல முறையில் வீடுகள் கட்டிக் கொடுப்பது, அவர்களுக்கான பாதுகாப்பை உத்திரவாதப் படுத்துவது, தீயில் அழிந்து போன அம்மக்களின் ஆவணங்கள் திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்வது. குழந்தைகளின் கல்வி தொடர்வதில் கவனம் செலுத்துவது ஆகியவற்றை நிறைவேற்றிட வேண்டும். பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு இவை உதவும் என்பதால், இக்கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற நாமும் தமிழக அரசை வலியுறுத்துவோம்!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா