Wednesday, 13 February 2013

கையில காசு - வாயில தோசை

எஸ்.சுகுமார் - 266/சி858

      வெளியில் விளையாடிவிட்டு வீட்டுக்குள் ஓடிவந்த வித்யா ``அம்மா பசிக்குதும்மா எப்பம்மா சோறு செய்வே? ரொம்ப பசிக்குதும்மா'' என்று சமையல் செய்வதற்கான ஏற்பாடு இருக்கிறதா இல்லையா என்று சமையல்கட்டை நோட்டம் விட்டுக் கொண்டே கேட்டாள்!
      மெல்ல தன் அருகில் வந்த குழந்தையை வாரியணைத்து ஆறுதல் சொல்லக்கூடத் தெம்பில்லாமல் ``அப்பா வரட்டும் கண்ணு, வந்தவுடன உனக்கு சோறு செஞ்சி கொடுக்குறேன். போய் விளையாடு'' என்று கூறி பெருமூச்சு விட்டாள் கோமதி.

      ஒரு வாரமாக உடல்நலமில்லாமல் வீட்டு வேலைக்குக் கூட போக முடியாமல் கையில் இருந்த கொஞ்சம் பணமும் டாக்டருக்கும், மருந்துக்கும் செலவு செய்துவிட்டு படுத்துக் கிடந்தாள் அவள்.
      வறுமையின் மொத்த உருவமாகவும், வறுமைக்கோடு என்றால் அவளது மேனியில் தெரியும் எலும்புகள்தானோ என்று நினைக்கும் அளவுக்கு உடல்மெலிந்து, பலமிழந்து, எழுந்து நடமாடக்கூட சக்தியில்லாதவளாகக் காட்சியளித்தாள்.
      சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தையின் பசிக்கு இவளது நிலையைப் புரிய வைக்க முடியுமா? மகளுக்கு எதுவும் சமைத்துக் கொடுக்க முடியாததையும், தனது உடல் நிலையையும், இயலாமையையும் நினைத்து மனம் வெதும்பினாள் அந்த ஏழைத்தாய்.
      மெல்ல எழுந்து கணவன் வருகிறானா என்று ஆவலாக காத்துக் கொண்டிருந்தாள். பொறுமையிழந்த அவள் பக்கத்துத் தெருவில் உள்ள தனக்குப் பழக்கமான கௌரியிடம் ``அக்கா எனக்கு ரெண்டு டம்ளர் அரிசி குடுக்கா, அவர் வந்ததும் வாங்கிக் குடுத்துடறேன்'' என்றாள்.
      ``உன் வீட்டுக்காரர் இன்னும் வரலையா கோமதி? ரேஷன் கடையில பொங்கல் பொருளும் நூறு ரூபாவும், நான் வாங்கினப்ப அவரும் வாங்கினாரே! சரி பரவாயில்ல. நீ வாங்கிட்டு போ'' என்று கூறி அரிசியுடன் கூடவே ஐம்பது ரூபாயையும் நேசத்துடன் கொடுத்தாள் வறுமையின் கொடுமையை உணர்ந்த கௌரி.
      வீட்டுக்குள் நுழைந்த ஜெயச்சந்திரன், தனது மனைவி எப்படி இருக்கிறாள்? தனது மனைவிக்கும், மகளுக்கும் சாப்பாட்டுக்கு என்ன வழி? என்பதைப் பற்றியெல்லாம் கொஞ்சம்கூட கவலைப்படாமல் ``சாப்பாடு ரெடியா?'' என்று தள்ளாடிக் கொண்டே, ``இவ்வளவு நேரம் என்னடி பண்ணிக்கிட்டு இருந்தே? புருசன் வந்தா சாப்பாடு போடணும்னுகூட தெரியாதா?'' என்று மிருகம் போலக் கத்தினான்.
      ரேசனில் வாங்கிய நூறு ரூபாய் டாஸ்மாக்கிற்குப் போய்விட்டது என்பது கோமதிக்குப் புரிந்துவிட்டது. `உஷாராக இருக்க வேண்டும்.' என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, ``கொஞ்சம் இருங்க, ரெடியாயிடுச்சி'' என்றாள். அவசர அவசரமாக சமைத்த உணவைப் பறிமாறினாள். சத்தம் கேட்டு ஆர்வமாக ஓடிவந்த குழந்தைக்குக் கூட உணவு கொடுக்காமல் கணவனுக்கு முதலில் உணவு பரிமாறினாள்.
      ``இது சோறாடி? மனுசன் சாப்புடுவானா இத? மீனு கறினு ஏதாவது வறுத்து வைக்கக் கூடாது?'' என்று தட்டை எட்டி உதைத்தான் வெறித்தனமாக.
      ``குடிக்கத்தான் உனக்கு நூறு ரூபா கொடுத்தாங்களா?'' என்றாள் கோமதி பொறுமையிழந்தவளாக.
      ``ஏய்! நிறுத்துடி... இப்ப என்னடி பார்த்த... இனிமே ரேசன்லாம் கிடையாது. கவர்மெண்டே உங்க பணம் உங்க கையிலேனு பேங்க்ல பணம் போடப்போறான். அப்ப வச்சுக்கிறேண்டி உன்னை. என்கிட்ட வச்சுக்காத ஜாக்கிரதையா இருந்துக்கோ'' என்றான் ஜெயச்சந்திரன் வெறியோடு.
      ``ரேசனைக் காலி செஞ்சிட்டு, ஏழைங்க வாழ்க்கைக்கு ஒல வைக்கிறாய்ங்களே. இவனுக உருப்படுவானுகளா?'' என்று கோமதி தன் தலையில் அடித்துக் கொண்டு விம்மி அழுதாள்.
      பசியால் துடித்த குழந்தை வித்யா தன் பசியைக்கூட மறந்து, அம்மாவைப் பரிவோடு அணைத்துக் கொண்டாள்.

4 comments:

  1. Anonymous9:00 pm

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. Anonymous9:24 pm

    Nice Story.its really touchable.

    ReplyDelete
  3. பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  4. //இனிமே ரேசன்லாம் கிடையாது. கவர்மெண்டே உங்க பணம் உங்க கையிலேனு பேங்க்ல பணம் போடப்போறான். அப்ப வச்சுக்கிறேண்டி உன்னை.//

    கதையின் நீதி : உங்க பணம் உங்க கையிலேனு கொடுத்தா இப்படியெல்லாம் நடக்கும். குடிகாரன் அவன் குடும்பத்த மிரட்டுவான். கொடுக்கலைனு தலைய சுற்றி மூக்கைத்தொடும் வழியைப் பின்பற்றுனா வழியில அந்த ஏழைத்தாயின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறதே அதைத் தடுக்க என்ன வழி? கொடுத்தா, ஒரு முறையாவது அந்த மானியப் பணம் அவளுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறதே.

    குடிகாரன் திருந்தவே மாட்டானா? அவன் குடிக்கிறத நிறுத்த அறிவுரை மட்டும் போதுமா? அந்த ஏழைத்தாய் அவன் குடிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவே மாட்டாளா? அந்தக் கொடுமையைப் பார்க்கும் நீங்களாவது முயற்சி எடுப்பீர்களே. அப்போதாவது அவளுக்கு அந்த மானியப்பணம் நேரடியாகக் கிடைக்கும் அல்லவா?

    இப்போது நடைமுறையில் இருக்கும் தலையைச் சுற்றி மூக்கைப் பிடிக்கும் முறையால், நமக்கு (குடிகாரன் மற்றும் அந்த ஏழைத்தாய் உட்பட) கிடைக்க வேண்டிய அரசாங்கத்தின் மானியங்கள். வழியிலேயே கொள்ளையடிக்கப் படுகின்றனவே. அதற்கான தீர்வுதான் என்ன?

    நல்ல சிந்தனையைத் தூண்டும் கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். அற்புதமான கதை. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் உங்கள் அரசியலையும் ஏற்றியிருக்கிறீர்கள். அருமை. கதையும் தொய்வில்லாமல் செல்கிறது. ஒரு பக்க கதையில் இப்படியும் அரசியலைப் புரியவைக்கலாம் என்பதை நிறுவியிருக்கீறீர்கள். மேற்கண்ட தீர்வு சம்பந்தமாகவும் கதைவடிவிலாக சொன்னீர்கள் என்றால், மிகவும் மகிழ்ச்சியடைவேன். நன்றி

    ReplyDelete

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா