Thursday, 21 February 2013

கண்ணீரின் அர்த்தம்

எஸ்.கெஜராஜ் 375/கே 700

      சென்னையில் பிரதான திரையரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதற்காக முக்கிய விநியோகஸ்தர்கள், முன்னணி இயக்குனர்கள், மூத்த இசை அமைப்பாளர்கள் மற்றும் பிரபல நடிகர், நடிகையர்கள் அனைவரும் அந்தப் படத்தின் ப்ரிவியூவைக் காண வந்திருந்தனர். மேலும் திரையிடப்போகும் படத்தில் இருப்பவர் அனைவருமே புதியவர்கள். தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், நடிகர், நடிகையர் மற்றும் பின்னணிப் பாடகர்கள் எல்லோரும் புதியவர்கள்.

      நான்தான் சுவேதா. இப்படத்தில் நான் பாடிய பாடல் எப்போது வரும் என்று அச்சம் கலந்த முகத்துடன் இருந்தேன். திரையில் படம் ஓடிக்கொண்டிருந்தது. படம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் பாடல் காட்சி தோன்றியது. எனது முகம் வெளிறத் தொடங்கியது.
      `இந்தப் பாடலை நான் தான் பாடினேன்...! எப்படி சுஜிதாவின் குரல் ஒலிக்கிறது..! சுஜிதா இவளும் அந்தப் படத்திற்கான பாடகிதான்...! ஆனால் எப்படி இவள் குரலில் பாடல் காட்சி அமைந்தது...? எனக்குக் கொடுத்த பாடல் வரிகளை இவள் எப்படி பாடினாள்?'
      எனக்குள் சந்தேகம் துளிர்க்க, காட்சிகள் ஒவ்வொன்றாய் என் மனக்கண் முன் தோன்றின. இதோ அரங்கில் சுஜிதா இயக்குனருடன் சிரித்துப் பேசுவது என் கண் முன்னால் தெரிகிறது.
      `இயக்குனர் சுஜிதாவைப் பரிந்துரைத்திருப்பாரா...? அப்ப வெறும் டம்மி வாய்சாகத்தான் என் பாடலைப் பதிவு செய்தார்களா...? இது வெறும் கண்துடைப்பு நாடகமா...? ஒன்றும் புரியவில்லையே. எங்கும், எதிலுமே ஒரு நல்ல ஆள் நமக்கு பரிந்துரைக்கணுமா...? சுஜிதாவுக்கு எவ்வளவு சாமர்த்தியம்; இசையமைப்பாளருடன் நெருக்கமா...?' என்னை நானே கேள்விக்கணைகளால் துளைத்துக் கொண்டேன்.
      இந்தளவுக்கு நான் ஒரு ஸ்டூடியோவில் பாடுவதற்கு சிறு குழந்தை முதல் நான் என்ன பாடு பட்டிருப்பேன்...? எல்லாம் வீணாகிவிட்டதா...? எனக்குள் ஒரு உஷ்ணம் உருவாகி, மேலும் அது என்னை வதைத்தது.
      மீண்டும் சிறிய இடைவெளிக்குப் பிறகு திரைப்படம் தொடங்கியது. படத்தில் இறுதிக்கட்ட காட்சிகள் வரும் நேரத்தில் ஒரு பாடல் காட்சி தோன்றியது.
      என்ன ஆச்சரியம்! இப்போது வரும் பாடல் காட்சியில் எனது குரல் வருகிறதே. பாடலின் ஒலிப்பதிவு மிகவும் சிறந்த முறையில்
மும்பையில் பதிவு செய்ததாக இசையமைப்பாளர் கூறிக் கொண்டிருந்தது எனது காதில் விழுந்தது. மேலும் அந்தப் பாடல், சிறப்பான கருவிகள் மூலம் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, படத்தில் ஓடிய காட்சிகளும் அருமையாகப் பதிவு செய்யப்பட்டு, பாடல் வரிகளும் அற்புதமாக வந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
      இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். வந்திருந்த அனைத்து முக்கிய திரையுலக பிரம்மாக்களால் நான் பாராட்டப்பட்டேன். `இந்தப் பாடல்காட்சிதான் இந்தப் படத்திற்கே ஹைலைட்...!' என்று கூறி என்னைப் பாராட்டினார் அந்தப் படத்தின் இயக்குனர்.
      புகழ் மாலை ஒருபக்கம் விழுந்து கொண்டிருக்கும்போதே, ஒரு நொடிப் பொழுதில் ஏற்பட்ட சந்தேகத்தினால் என் தோழி சுஜிதாவையும், இசையமைப்பாளரையும் இணைத்து கேவலமாக நினைத்துவிட்டேனே. என் மனச்சாட்சி என்னை உறுத்தியது. என் கண்கள் குளமாகின, நற்சிந்தையுடைய நான் இவ்வளவு கீழ்த்தரமாய் போய்விட்டேனே!
      சுஜிதா உட்பட எல்லோரும் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று பாராட்டி வாழ்த்தினார்கள்.
      ஆம்! எனக்கும் உண்டு எதிர்காலம்... என்னுடைய மாச்சரியத்தை மாற்றினால்....
      எல்லோரும் என் தோள் பற்றி வாழ்த்தியபோது, எனது கண்ணீரை ஆனந்தக் கண்ணீர் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் எனக்குத்தான் தெரியும் அந்தக் கண்ணீரின் அர்த்தம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா