Saturday 17 August 2013

தோழர் ஜோதிபாசு

எஸ்.சுரேஷ்குமார் 217/36439

ஜோதிபாபு என்று மேற்கு வங்க மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட தோழர் ஜோதிபாசு. 1914_ஆம் ஆண்டு ஜூலை 8_ம் தேதி பிறந்தார். அரசியல் வாடையே வீசாத ஒரு மேல் தட்டு வர்க்க குடும்பத்தில் பிறந்த தோழர் ஜோதிபாசு பிற்காலத்தில் ஒரு மாபெரும் புரட்சியாளனாக, மக்கள் தொண்டனாக தன்னை மாற்றிக் கொண்டார்.
      நாட்டு விடுதலைக்கான போராட்டங்களும், மக்கள் திரளாக கலந்து கொண்ட கூட்டங்களும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய எழுச்சியுரைகளும் ஜோதிபாசுவை அரசியலின் பால் ஈர்த்தன. தன்னுடைய 16 வயதிலேயே, நேதாஜியின் கூட்டத்திற்கு நண்பனுடன் சென்று, போலீசாரிடம் அடி வாங்கியதைத் தன்னுடைய வாழ்க்கைக் குறிப்பில் அவர் எழுதியுள்ளார்.

      1935_ம் ஆண்டு தன்னுடைய பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு, சட்டம் படிப்பதற்காக இங்கிலாந்துக்கு சென்றார். அங்கு சட்டம் படித்துக் கொண்டே கிருஷ்ண மேனன் தலைமையில் இயங்கி வந்த இந்தியன் லீக் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டார். அதன்பிறகு லண்டன் மஜ்லீஸ் என்னும் ஒரு அமைப்பு உருவானது. அதன் முதல் செயலாளராக தோழர் ஜோதிபாசு இருந்தார். இந்த அமைப்பானது, இந்திய விடுதலைக்கு இங்கிலாந்தில் ஆதரவைத் திரட்டியதோடு இந்தியாவிலிருந்து வரும் தேசியத் தலைவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தது. இதன் மூலம் ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் போன்ற பல தலைவர்களோடு ஜோதிபாசுவுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. தோழர் ஜோதிபாசு உட்பட இந்திய மாணவர்கள் பலர் அப்போதே லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஏகாதிபத்ய எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றதோடு, மார்க்சிய சிந்தனையாளர் கூட்டங்களிலும் கலந்து கொண்டனர். தோழர் ஜோதிபாசு லண்டனில் செயல்பட்டுக் கொண்டிருந்த கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
      1940_ம் ஆண்டு தோழர் ஜோதிபாசு சட்டப்படிப்பை முடித்து இந்தியா திரும்பி, கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, ஒரு முழு நேர கட்சி ஊழியனாக செயல்படவும் தொடங்கினார். 1944ல் வங்கம் _ நாக்பூர் ரயில்வே தொழிற்சங்கத்தை உருவாக்கி அதன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946ல் முதன்முதலாக ரயில்வே தொழிலாளர்கள் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றிலிருந்து அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறும்வரை அவர் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடினார்.
      1964_ம் ஆண்டு இந்திய அரசியலில் மிகவும் முக்கியத்துவம் உடையதாகும். ஏனென்றால், அந்த ஆண்டில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. அப்போது அமைக்கப்பட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் ஒன்பது பேரில் ஒருவராக இணைக்கப்பட்டார். அன்றிலிருந்து அவர் இறக்கும் வரையிலும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக இடம் பெற்றிருந்தார்.
      தோழர் ஜோதிபாசு 1946ல் இருந்து போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை துணை முதல்வராகவும், ஐந்து முறை தொடர்ந்து முதல் அமைச்சராகவும் மக்கள் பணியாற்றிய மகத்தான தலைவராக விளங்கினார்.
      அவர் முதலமைச்சராக பதவியேற்ற போது மேற்கு வங்கம் கடும் மின் பற்றாக்குறை மாநிலமாக இருந்தது. தோழர் ஜோதிபாசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு மேற்கு வங்க மக்களின் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ததும் அல்லாமல், உபரி மின்சாரத்தை அண்டை மாநிலங்களுக்கும், வங்கதேசத்திற்கும் விநியோகம் செய்தார். நிலச் சீர்திருத்த சட்டத்தை நிறைவேற்றி இந்தியாவிலேயே அதிகமான நிலத்தை அதிக எண்ணிக்கையிலான விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும், குத்தகைதாரர்களுக்கும் பகிர்ந்தளித்து நாட்டிற்கே வழிகாட்டியாய்த் திகழ்ந்தார். பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி பஞ்சாயத்து தேர்தல்களை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சரியாக நடத்தியவர். மதவாத சக்திகளை பின்னுக்குத் தள்ளி மத நல்லிணக்கத்தை நிலைநாட்டியவர். இப்படி வாழ்நாள் முழுதும் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியவர் ஜோதிபாசு. கூர்காலேண்ட் தனி நாடு கேட்டுப் போராட்டம் வெடித்தபோது, பேச்சுவார்த்தை மூலம் மாகாண கவுன்சில் சுயாட்சி அதிகாரம் தந்து அப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டவர்.
      நமது நாட்டிற்கு அப்பாலும் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ, பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத், தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மண்டேலா, வெனிசுலா அதிபர் சாவேஸ் என ஏகாதிபத்ய எதிர்ப்பு உடைய தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர் தோழர் ஜோதிபாசு.
      பாபர் மசூதி இடிப்பின் போது நாடு முழுதும் கலவரங்கள் மதவாத சக்திகளால் நடத்தப்பட்டபோது, ஒரு பத்திரிகை நிருபர் அன்னை தெரசாவிடம் ``சிறுபான்மை மக்களை நோக்கி கலவரங்கள் ஏவப்படுகிறதே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்ட போது, அந்தத் தாய் சொன்ன பதில்: ``நானும் எனது குழந்தைகளும் தோழர் ஜோதிபாசுவின் பாதுகாப்பில் மிகவும் நிம்மதியாய் இருக்கிறோம்.!''. அதுமட்டுமல்ல அன்னை தெரசா அவர்களால் ஙஹ் ஊழ்ண்ங்ய்க் என்று அன்போடு அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் தோழர் ஜோதிபாசு. அப்பேற்பட்ட தோழர் ஜோதிபாசு 2010 ஜனவரி 17_ந்தேதி அன்று இந்த உலகத்தை விட்டுப் பிரிந்தார்.
      தன் வாழ்நாள் முழுதும் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும், பாடுபட்ட தோழர் ஜோதிபாசு தான் இறந்தபிறகு, தன் உடலை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக அளித்து இறந்த பிறகும் உயிர் வாழ்கிறார். இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றில் இடம்பிடித்த அன்புத் தோழர் ஜோதிபாசுவின் புகழ் நீடூழி வாழ்க!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா