Thursday, 26 December 2013

பூமி என்ற பூலோக சொர்க்கம்

V.கோவிந்தசாமி
262/K302
Mehanical Maintenance

      சூரியனைச் சுற்றி வரும் கிரகங்களில் பூமி மட்டும்தான் உயிர்கள் வாழும் தகுதி படைத்தது. மற்ற கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா? அதிலும் குறிப்பாக செவ்வாய் கிரகத்தை ஆராய போட்டி. நான்கு நாடுகளை அடுத்து இந்தியாவின் மங்கள்யான் பயணம் தொடர்கிறது. இப்படிப்பட்ட இப்பூவுலகைப் (பூமியை) பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

      பன்னெடுங்காலமாக பூமியைச்சுற்றி சூரியன் வருவதாய் மக்கள் நினைத்தார்கள். விஞ்ஞானி கோபர் நிகஸ் பூமிதான் சூரியனைச் சுற்றிவருகிறது என்று காட்டிய பிறகு அக்கருத்து திருத்திக் கொள்ளப்பட்டது. பூமி சூரியனைச் சுற்றி ஒரு அச்சிலிருந்து ஒரே சுவட்டில் சுழலுகிறது. பூமி சராசரியாக வினாடிக்கு முப்பது கிலோ மீட்டர் வேகத்தில் ஓடி வருவதாகக் கணக்கிட்டுள்ளனர். அது அவ்வாறு ஓடி வரும்போது தன்னைத் தானே சுற்றிக் கொண்டே வருகிறது. அது மேற்கிலிருந்து கிழக்கு திசை நோக்கி சுற்றி வருகிறது. அதனால்தான் சூரியனும் நட்சத்திரங்களும் கிழக்கே உதித்து மேற்கே அஸ்தமனம் ஆவது போல நமக்குத் தோன்றுகிறது.
      பூமியின் சுழற்சி இருசு 23.4' டிகிரி கோணத்தில் அமைந்துள்ளது. அதனால் பூமத்திய ரேகை மண்டலத்தின் தளத்திலிருந்து விலகி இருக்கிறது. இவ்வாறு விலகி இருப்பதால்தான் பருவ காலங்கள் உண்டாகின்றன. வருடத்தில் ஆறுமாதம் பூமியின் சுழற்சி இருசில் ஒரு முனை அதாவது ஒரு துருவம் சூரியனை நோக்கி சாய்ந்தவாறு இருக்கும். அடுத்த ஆறு மாதத்தில் அத்துருவம் சூரியனுக்கு எதிர்ப்புறமாகச் சாய்ந்திருக்கும். இதன் விளவாக பருவக் காலங்கள் நான்கும் ஏற்படுகின்றன.
      பூமியின் மேற்பரப்பு மூன்று படலங்களை கொண்டதாகும். அதன் அடிப்பாகம் நிலமென்னும் மேல் ஓடு ஆகும். அதற்கு மேல் கடல்களைக் கொண்ட நீர்ப்படலம் அமைந்துள்ளது. அதற்கு மேல் பவனம் எனப்படும் காற்று மண்டலம் உள்ளது. இந்தப் பவன மண்டலம் பூமிக்கு ஒரு கூரை போல அமைந்துள்ளது. குளிர்க்காலத்தில் ஒரு கம்பளிப் போர்வை போல நமது பூமியின் வெப்பம் வெளியே செல்லவிடாமல் பவன மண்டலம் தடுத்து நிறுத்துகிறது. பகலில் கூட அது சூரிய வெப்பத்தின் ஒரு பகுதியை மட்டும் நம் மீது விழும்படி செய்கிறது. பவன மண்டலம் இல்லாவிடில் பூமியின் மீது விழும் சூரிய வெப்பத்தால் நாம் பொசுங்கி விடுவோம். வேறு வழிகளிலும் பவன மண்டலம் பூமிக்கு நன்மை செய்கிறது. எரி நட்சத்திரங்கள், எரிகற்கள் பூமியின் மேற்பரப்பில் ஓயாது விழுகிறது. அவற்றால் நமக்குச் சேதமேற்படாமல் பவன மண்டலம் பாதுகாக்கிறது. பவன மண்டலம் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 960 கிலோ மீட்டர் வரை வியாபித்துள்ளது.
(தொடரும்...)

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா