Thursday 26 December 2013

ஜி.சுகுமாறன் - வாழ்த்துச்செய்தி

ஜி.சுகுமாறன்
பொதுச்செயலாளர்
இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)
தமிழ்நாடு

அன்பான தோழர்களே வணக்கம்!
      தனது 9 வயதைப் பூர்த்தி செய்து, 10வது வயதில் நடைபோடும் உழைப்போர் உரிமைக்குரலை மனதார வாழ்த்துகிறேன். பத்திரிக்கை என்பது ஒரு ஆசானாக, பிரச்சாரகனாக, வழிகாட்டியாக செயல்படுகிறது என்பதை உணர்ந்து, இரு மாதத்திற்கு ஒன்று என்கிற அளவில் தொடர்ந்து, அசோக் லேலண்ட் தொழிலாளர்களின் பிரச்சனைகளை மட்டுமல்லாமல் தொழிலாளர்கள் சந்திக்கக் கூடிய சமூகப் பிரச்சனைகளை, அரசியல் தாக்குதல்களை, தனது ஆலையில் நிலவும் அவலங்களை என அனைத்திற்கும் ஒரு சிந்தனை விளக்காக உரிமைக்குரல் விளங்குகிறது. அதுவும் கூட திகட்டாமல் அளவிற்கேற்ப வழங்கி வருகிறது என்பது வரவேற்கத்தக்கது.


      அரசுகளின் தவறான கொள்கைகள் காரணமாக அனைத்தும் வியாபாரமாகியுள்ள இச்சூழலில் ஒரு பத்திரிக்கை நடத்துவதில் உள்ள சிரமங்களை எல்லாம் தாங்கி, இப்பணியைத் தொடர்ந்து நடத்தும் பொறுப்பாளர்களையும், அசோக் லேலண்ட் தொழிலாளர்களையும் மீண்டும் மனதாரப் பாராட்டுகிறேன். இப்பணியை இன்னும் வேகமாக, சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகிறேன்!

      எதிர்காலம் இன்னும் கடுமையாக இருக்கும். அரசுகள் தொழிலாளர்களை நசுக்க, தொழிற்சங்க உரிமைகளை முடக்க, அனைத்தும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்கிற முடிவுக்கு தள்ள, அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களின் உணர்வுகளையும் புறம் தள்ள முயற்சிக்கிறது. இதை முறியடிக்கத்தான் நாம் அனைவரும் ஒன்றுபட்டு கடந்த பிப்ரவரி 20, 21 தேதியில் தேசம் தழுவிய போராட்டத்தை நடத்தினோம். இந்த ஒற்றுமையை இன்னும் வலுவாக்க நாம் முயற்சிக்க வேண்டும். அரசுகள் பெரும் நிறுவனங்களுக்கும், பணக்கார முதலைகளுக்கும் சேவகம் செய்யக்கூடிய அரசுகளாக மாறிக்கொண்டிருக்கின்றன.

      இந்த உண்மைகளைப் புரிந்து கொண்டு உழைப்போர் உரிமைகளை பாதுகாக்க, உழைப்பவருக்கான அரசை உருவாக்க, ஒன்றுபட்ட போராட்டங்களை மேலும் சக்திமிக்கதாக எடுத்துச் செல்ல உழைப்போர் உரிமைக்குரலின் பயணம் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்!

      அனைத்து வாசகர்களுக்கும் நல்வாழ்த்துகள்!

தோழமையுடன்
ஜி.சுகுமாறன்

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா