Thursday, 26 December 2013

நெருக்கடியின் படிப்பினைகள்

சு.சக்கீர் 240/J030

      தேசத்தில் பொருளாதார தேக்க நிலை ஏற்படும்போதெல்லாம் உடனடியாக பாதிக்கப்படுவது  ஆலைத் தொழிலாளர்களும் கூலித் தொழிலாளர்களும் தான். குறிப்பாக கனரக வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நம் போன்ற தொழிலாளர்களுக்கு நெருக்கடிகள் அதிகமாகவே இருக்கும். தாராளமயக் கொள்கையின் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த பன்னாட்டு மூலதனம், சாதாரண மக்களின் வாங்கும் சக்தியை மேம்படுத்துவதற்கும், கிராமப்புறங்களில் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் குறிப்பிடத்தக்க எந்தப் பங்களிப்பையும் செலுத்தவில்லை என்பது நிரூபணமாகிவிட்டது. இரண்டு - மூன்று கனரக வாகன தயாரிப்பாளர்கள் இருந்த இடத்தில், பதினைந்து நிறுவனங்கள் வந்துவிட்டன. ஆனாலும், சந்தைத் தேவை என்பது குறிப்பிட்ட அளவுக்கு மேல் உயர்வதாக இல்லை.

      1977ம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள், இந்திய பொருளாதாரத்தில் ஒரு மாற்று சிந்தனையைப் பரவச் செய்தன. பின்தங்கிய பகுதிகளில், தொழில் வளர்ச்சியை விரிவு படுத்த வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் அத்தகைய பகுதிகளில் தொழிற்பேட்டைகள் பரவலாக உருவாக்கப்பட்டன்ன. சென்னையை மையமாகக் கொண்டிருந்த தொழிற்சாலைகள் ராணிப்பேட்டை, ஓசூர், நெய்வேலி போன்ற பகுதிகளுக்கும் சென்றன. ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளில் பொருளாதாரத்தேக்கம் என்பது விசுவரூபம் பூண்டது. தொழிலாளர்கள் தங்கள் பாதுகாப்பற்ற நிலைமைகளை உணர்ந்து, வி.பி.சிந்தன், அரிபட், கஜபதி போன்ற மார்க்சியவாதிகளின் சீரிய வழிகாட்டுதல்களை நாடிச் சென்றனர்.
      ``தொழிலாளர்களின் உரிமைகளை கூட்டு பேர சக்தியின் மூலமே காக்க முடியுமே தவிர, குறிப்பிட்ட ஒரு தலைவரின் சாதுரியத்தால் சாத்தியமில்லை'' என்ற உண்மை நிரூபணமானது. வேலையில்லாதோரும், ஒப்பந்த முறை தொழிலாளர்களும் முதலாளிகளின் கருவியாகப் பயன்படுத்தப்படும் சூழல் இருக்கும் வரை பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை முழுமையாக வென்றெடுக்க இயலாது என்பதையும் அன்றைய நெருக்கடி நமக்கு ஓர் படிப்பினையை அளித்துள்ளது.
      சுமார் ஏழு லட்சம் கனரக வாகனங்களைத் தயாரிப்பதற்கான வசதி வாய்ப்புகள் இன்று இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சந்தையின் தேவை என்பது மூன்று லட்சத்தைத் தாண்டவில்லை. தயாரிப்பு செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைப்பதிலேயே குறியாக இருக்கும் நிர்வாகம், சந்தையில் தனது பங்கை கணிசமாக உயர்த்த உருப்படியான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. பந்த் நகரில் நிலவும் சாதகமான சூழ்நிலைகளைத் தனது இலாப வெறிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது மட்டுமே அவர்களின் செயல்திட்டமாக உள்ளது. இது தாய் நிறுவனத்தின் முக்கியத்துவத்தை இழக்கச் செய்யும் என்பது குறித்து கவலைப்பட வேண்டிய நிலைமையில் தொழிலாளர்கள் உள்ளனர்.
      கடந்த கால நெருக்கடிகள் நம்மை சாதி, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்த வர்க்க ஒற்றுமையின்பால் அழைத்துச் சென்றதைப் போல, அண்மைக்கால நிகழ்வுகளும் புதியதோர் தொழிற்சங்கக் கலாச்சாரத்தின் பக்கம் வழிநடத்தி உதவிபுரியும் என நம்புகிறோம்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா