Friday 20 June 2014

தனியார் மயமும் குழந்தைகளும்

K.N.சஜீவ்குமார்
217\37918

            குழந்தைகளின் உலகம் ஒரு தனி உலகம்; அதில் உயிரற்ற பொம்மைகள் பேசும், நிலவு சிரிக்கும், மரங்கள் கதை சொல்லும். ஆனால் இன்றைய முதலாளித்துவம் அந்த அழகிய உலகைக் களவாடி விடுகிறது. எப்படி?
            சமீபத்தில் `யூ டியூப்'ல் பார்த்த ஒரு குறும்படத்தில் பெயில் ஆன ஒரு குழந்தை, தனது ரிப்போர்ட் கார்டை பார்த்துக் கொண்டு வருத்தத்துடன் டிரெயினில் பயணம் செய்து கொண்டிருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த இரு பள்ளி ஆசிரியர்கள் ``இப்படி மார்க் எடுப்பதற்கு பதிலாக டிரெயின்ல இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம்'' என்று சொன்னார்கள். உடனே அந்தக் குழந்தை நமது தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தின் அர்த்தத்தைக் கேட்டது. ``இதைத் தெரியாத நீங்கள் உயிரோடு இருக்கும்போது, நான் ஏன் சாக வேண்டும்?'' என்று முகத்தில் அறைந்தாற்போல் கேட்டுவிட்டுச் சென்றது.
            தனியார்மயம் வந்த பிறகு பள்ளிகள் நமது சேசிஸ் லைன் போல ஆகிவிட்டது. கல்விக் கூடங்கள் தொழில் கூடங்களாகி குழந்தைகள் மதிப்பெண் பெறும் பொருட்களாகிவிட்டார்கள். பள்ளிக்கு பேர் வாங்கிக் கொடுக்க பிள்ளைகளைக் கசக்கிப் பிழிகிறார்கள். இந்தப் போட்டியில் சிக்கி சின்னாபின்னமாகும் குழந்தைகள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
            கண் மருத்துவர் ஒருவர் செய்த ஆய்வில் கார்ப்பரேஷன் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் கண்ணாடி அணிவது மிகவும் குறைவு என்று கண்டுபிடித்துள்ளார். ஏனென்றால் அவர்கள் வெயிலில் விளையாடுகிறார்கள். அவர்கள் புத்தகப்புழுக்களாக மாற்றப்படுவதில்லை, மனப்பாடம் செய்யும் கருவிகளாக மாற்றப்படுவதில்லை.
            முதலாளித்துவ சமூகத்தில் கல்வி என்பது மனிதகுல நன்மைக்கு பயன்படாமல், முதலாளிகளுக்கு லாபம் கொடுக்கும் சரக்காகவே மாற்றப்பட்டுவிட்டது. ஆங்கிலேயர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மெக்காலே கல்வி முறை, அவர்களது வர்த்தகத்திற்கு ஏற்ற குமாஸ்தா வேலைக்கு நம்மைத் தயார் செய்ய பயன்பட்டது. 1857-ன் முதல் சுதந்திரப் போரில் இந்தக் கல்வி பெற்ற நம் நாட்டவர் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக நின்றனர்.
            சுதந்திரத்திற்குப் பிறகு அண்ணல் அம்பேத்கர் வகுத்த அரசியல் அமைப்புச் சட்டம், ``கல்வி என்பது ஜனநாயக, சோசலிச, மதச்சார்பற்ற, சமத்துவ, சமதர்ம சமூகத்தைப் படைக்கக் கூடிய குடிமக்களை உருவாக்க வேண்டும்'' என்கிறது. ஆனால் தபஐ அஸ்ரீற் 2009 அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான நவீன தாராளமயத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய, பாகுபாடுகள் உடைய பல அடுக்குக் கல்வி முறையை அமல்படுத்துகிறது.
            நவீனத்துவம் வந்த பிறகு மாணவர்கள் படிக்க மட்டுமே செய்ய வேண்டும்; சமூக அக்கரை கொள்ளக்கூடாது; படித்து முடித்து கல்விச் செலவை ஈடுகட்டும் ஒரு நல்ல வேலையில் அமர வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். சமீபத்தில் நடந்த தேர்தலில் ஓட்டுகூட போடாமல் ஐடி துறை சார்ந்தவர்கள் வேலைக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஓட்டுரிமையை பெறுவதற்காக நடைபெற்ற போராட்டங்கள் பற்றித் தெரியாத ஒரு தலைமுறையை இந்தக் கல்வி நமக்கு தந்துள்ளது. நவீன அடிமைகளாக முதலாளித்துவம் நம்மை மாற்றியிருக்கிறது.
            எனவே குழந்தைகளைத் துன்புறுத்தாத, கல்வி கற்பதை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக மாறும் வகையில் கல்வி அமைய வேண்டும். காசு இருந்தால் கல்வி என்ற முறை மாறி, அரசு எஈட-ல் 6% கல்விக்காக ஒதுக்க வேண்டும். பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் கட்டாயமாக வேண்டும். கழிப்பறைகள் இல்லாததால் வளர்ந்த பெண் குழந்தைகள் படிப்பை கைவிடுவது இந்தியாவில் அதிகம்.

            குழந்தைகளைச் சிந்திக்க வைக்கும், கருத்தைத் தடையின்றி வெளிப்படுத்தும் தாய் மொழி வழிக்கல்வியை அரசு கொண்டு வர வேண்டும். ஆங்கிலம் என்பது ஒரு மொழி, அதுவே அறிவாகாது என்று பெற்றோரும் உணரவேண்டும். மலர்கள் இயற்கையாக மலர்ந்தால் மணமுண்டாகும். அதை பலாத்காரமாக திறந்தால் மொட்டிலேயே கெட்டுவிடும்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா