B.சதீஷ்குமார்
352 \ 36927
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து மே 16ல் முடிவுகள் வெளிவந்தன. பாஜக மக்களவையில் தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக முன்னேறி
இருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தம், வேலை இல்லாத்
திண்டாட்டம், பொருளாதாரச்சுமை ஆகிய தாக்குதல்களில் இருந்து
நிவாரணம் அளிக்கக் கூடிய விதத்தில் ஒரு அரசாங்கம் முன் வராதா என்று மக்கள் ஏங்கத் துவங்கி
இருக்கின்றனர்.
காங்கிரஸ் அரசாங்கம் மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு
பொருளாதாரச் சுமைகளை ஏற்றியது மட்டுமல்லாமல் நாட்டின் செல்வாதாரங்களை மிகப் பெரும்
ஊழல்கள் செய்து கொள்ளையடித்தார்கள். இதன் காரணமாக காங்கிரஸ் மீது இருந்த மக்களின் அதிருப்தியை
பாஜக தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
பாஜகவை இயக்கி வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது காஷ்மீருக்கான
370வது சட்டத்திருத்தம் ரத்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, பொதுசிவில் சட்டம்
போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள மோடி என்ற முகத்தை முன்னிறுத்தியது. இந்தத் தேர்தலில்
உ.பி., பீகாரை, ஆர்.எஸ்.எஸ். கையில் எடுத்துக் கொண்டு மதக்கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தியது. இதுநாள்
வரையில் சமூகப் புரட்சியின் மூலம் பெற்று வந்த பலன்கள் அழிக்கப்பட்டு, மீண்டும் பழைய பழமைவாத நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளது.
இது மதக்கலவரம் மட்டுமல்ல, பாசிசமும் கூட.
மோடியை பெருநிறுவனங்கள் ஆதரிப்பதற்கு காரணமில்லாமல் இல்லை. ஜெர்மனியில்
ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்குக் காரணமே பெருநிறுவனங்கள்தான். பாசிசம் முதலில் பரந்துபட்ட
மக்கள் தளத்தை உருவாக்கும். ஒரு மதத்தவரை மற்ற மதத்தவருக்கு எதிராகத் திருப்பி விடுவதன்
மூலம் இந்தத் தளம் அமைக்கப்படும். ஜெர்மனியில் நாஜிக்கள் யூதர்களை குறிவைத்து அழித்தனர்.
இத்தகைய பாசிச சக்திகளை எதிர்த்து இடதுசாரிக் கட்சிகள் தான் போராட்டம் நடத்த முடியும்.
இரண்டாவது உலகப் போரில் ஹிட்லரின் பாசிசத்தை வீழ்த்தி சோவியத் யூனியன் முன்னுதாரணமாக
உள்ளது.
பாசிச அரசு மக்கள் மீது மிகவும் பயங்கரமான முறையில் அடக்குமுறையை
கட்டவிழ்த்து விடுவதோடு ஜனநாயக உரிமைகள், தொழிற்சங்கங்கள்
மற்றும் தொழிலாளர் உரிமைகள் போன்றவற்றைப் பறிக்கும் கொடூரத் தன்மை உடையது. எந்தவொரு
அரசியல் கட்சியையோ, தனிநபரையோ பெரு நிறுவனங்கள் மோடியை ஆதரித்தது
போல் சுதந்திர இந்தியா ஒரு போதும் கண்டதில்லை. மக்கள் விரோத தனியார் மயம், தாராளமயம் கொள்கைகளால் உருவான பிரச்சனைகளுக்கு காங்கிரஸ் கட்சி
பலிகடாவாக்கப்பட்டதற்கு ஒரு உள்நோக்கம் உண்டு. ஆனால், இதே பொருளாதாரக் கொள்கையைத் தான் நரேந்திர மோடியும் பின்பற்றுவார். நரேந்திர மோடியும், மன்மோகன் சிங்கும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள். தேர்தல் நடந்து கொண்டிருந்த
போதே இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு, பெருவர்த்தக
அமைப்புகளது கோரிக்கையை உள்ளடக்கி பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. முதலாளிகளின்
ஆலோசனைகள் அப்படியே வாக்குறுதிகளாக மாற்றம் பெற்றன. தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக
பாஜக வெற்றி பெற்றதற்கு முதலாளிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
சுற்றுச்சூழல் போன்ற காரணங்களைக் காட்டி தொழில் திட்டங்களை நிறுத்தக்கூடாது;
பெரு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும். நிலங்களைப்
பெரு நிறுவனங்கள் வளைத்துப் போடுவதற்குத் தோதாக நில விற்பனையை `தொழில்' என்று அறிவிப்பது,
தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலக்கரி, இயற்கை எரிவாயு அனுமதிகளை வழங்குவதில் உள்ள கட்டுப்பாட்டை கைவிடுதல்,
மின் கட்டணம் முதலாளிகளே நிர்ணயிக்கும் உரிமை, மருந்துகளுக்கான விலைக் கட்டுப்பாட்டை விலக்குதல், நாடு முழுவதும் புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகள் திறக்க
அனுமதி, இவை பெருமுதலாளிகளின் எதிர்பார்ப்பு அம்சங்கள்.
இந்த எதிர்பார்ப்புகளை பாஜகவும், மோடியும் நிறைவேற்றும்போது
ஏழை, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகள் கனவாகிப் போகும்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா