240\J030
இந்திய நாடு சுதந்திரம் அடைந்த முதல் பத்து ஆண்டுகளில் நம் நாடு எந்தப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதில் நமது முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு சோசலிச ஆதரவு கருத்தைக் கொண்டிருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் யூனியன் அடைந்த மாபெரும் பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த சோசலிசப் பாதையே நமக்குத் தேவை என்பதில் அவர் அக்கறை காட்டினார். இந்தியாவின் முன்னேற்றத்தில் அதீதமான அக்கறை கொண்டிருந்த சோவியத் யூனியன் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களை இந்தியாவில் உருவாக்க பல்வேறு உதவிகளைச் செய்ய முன் வந்தது.
பக்ராநங்கல் அணை, பிலாய் உருக்காலை, ராணுவத் தளவாடங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் என அடிப்படையான தொழில்கள் அனைத்தையும் துவங்க நிதியுதவியும், தொழில்நுட்ப உதவியும் வழங்கியது சோவியத் யூனியன். ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலமாக நாடு முழுவதும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சோசலிச சிந்தனை மேலோங்கியதன் விளைவாக தொழிலாளி வர்க்கம் அடைந்த நன்மைகள் ஏராளம்.
வைப்பு நிதி, பஞ்சப்படி, பணிக்கொடை (P.F., D.A., Gratuity), ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்பு திட்டங்களும் நமக்குக் கிடைத்தன. ஏனென்றால், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை முதலாளித்துவ அமைப்புகளிடமிருந்து நாம் எதிர்பார்க்க முடியாது. வங்கி, காப்பீட்டுத் துறை நிறுவனங்களை திருமதி.இந்திராகாந்தி அம்மையார் தேசியமயமாக்கியது இந்தக் காலகட்டத்தின் ஓர் முக்கிய நிகழ்வாகும். இன்றும் தேசப் பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கும் பெரும் தூண்களாக இந்த அமைப்புகள் திகழ்கின்றன.
இந்தக் காலகட்டத்தில் ஜனசங்கம் போன்ற அரசியல் இயக்கங்கள் நமது நாட்டை தீவிர வலது சாரிப் பாதையில் கொண்டு செல்லப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. ராம் மனோகர் லோகியா, ஜெய பிரகாஷ் நாராயணன், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா போன்றவர்கள் இந்தியாவுக்கான மாற்றுப் பாதையை முன்வைக்க முயன்றார்கள். காந்தியவாதிகள் கிராம சுயராஜ் என்ற தத்துவத்தின் மீது பற்றுள்ளவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். தீன்தயாள் உபாத்யாயா 1968_ம் ஆண்டு நடைபெற்ற ஜனசங்கத்தின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் ஏகாதமகமானவீய வாதம் எனும் சோசலிச பொருளாதாரத் திட்டத்தை முன்மொழிந்தார். அவரது கொள்கைகள் கம்யூனிசத்திற்குத் துணை போகின்றன எனக் கூறி ஜனசங்கம் அத்திட்டத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்தது.
சோவியத் பின்னடைவுக்குப் பிறகு ஏற்பட்ட அண்மைக் கால நிகழ்வுகள் சமத்துவ சிந்தனையை மழுங்கடிக்கச் செய்துள்ளன. வேலைப் பாதுகாப்பு, தொழிலாளர் நலச் சட்டங்கள், ஓய்வூதியப் பயன்கள் அனைத்தும் கேள்விக் குறியாகிவிட்டன. முதலாளிகளின் கொள்ளை லாப வெறிக்காக, காண்டிராக்ட் மயம் நாடு முழுவதும் அமல்படுத்தப் பட்டு வருகிறது. நிரந்தர வேலைகளில் நிரந்தரத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவது எட்டாக்கனியாக உள்ளது. நம் சிந்தனைகளில் சமத்துவக் கோட்பாடுகளுக்கு இடமளிக்காமல் பார்த்துக் கொள்ளும் முதலாளித்துவ ஆட்சிகளின் நோக்கத்தை முறியடித்து சமத்துவச் சிந்தனையை வளர்ப்பதே இதற்கானத் தீர்வாகும்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா