Wednesday, 20 August 2014

மனிதன் மகத்தானவன்

J.ஜேசுதாஸ்,
மாநிலச் செயற்குழு
தமுஎகச

தாயிற்சிறந்ததொரு கோவிலுமில்லை. ஆம்! பெண் எப்படித் தெய்வமாக இருக்க முடியும் என்ற கேள்விக்கு பதில் மிக எளிமையானது. பிறப்பின் ரகசியத்தை விளங்கிக் கொள்ள முடியாத ஆதி சமூகம் பெண்ணையே தன் சமூக விருத்திக்கான துவக்கமாகக் கண்டது. அவளில் இருந்தே ஒட்டுமொத்த சமூகமும் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கிற உண்மை அவர்களுக்குப் பளிச்சென்று தெரிந்தது. தாய்வழிச் சமூகத்தில் வாழ்ந்தவர்களுக்கு தன் தந்தை யாரென்று தெரியாது. ஆனால் தன் தாயை அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இன்றைய நவீன சமூகத்திற்கு இதைப் புரிந்து கொள்வது சற்றுக் கடினமாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுவே!

கொடிய மிருகங்களால் அழியும் சக மனிதர்கள், கட்டுப்படுத்த இயலாத இயற்கையின் பேரழிவுகளில் மாண்டு போகும் தனது சமூக உறுப்பினர்கள், மிருக வாழ்வில் இருந்து இன்னும் விலகாத மனிதர்களாக இருந்த அவர்களுக்கு, தான் ஒரு சமூகமாக இருந்தால் ஒழிய வாழவே இயலாது எனப் புரிந்து கொண்ட அவர்களுக்கு, சமூகத்தின் மறு உற்பத்திக்கு பெண் மிகவும் தேவைப்பட்டாள். விளைவு அவளையே தங்களின் தலைவியாகவும், சமூகத்தை வழி நடத்துபவளாகவும், உயர்ந்த இடத்தில் வைத்தனர். மரணம் குறித்தான பயம் சதா தன்னைத் துரத்திக் கொண்டிருந்த அக்காலக் கடின வாழ்வில் தாயே தனக்கு ஆறுதலாக இருக்க முடியும்.



தாயின் இருண்ட கருவறையில் கண்கள் மூடிக் கிடக்க வெறும் உணர்வுகளால் வாழ்ந்து வந்த சிசு பிறந்ததும், அது பார்க்கும் முதல் உலகமும் அந்தத் தாயே! சமூகத்தின் முழு உரிமை பெற்ற மனிதனாக்கும் பொறுப்பையும் அக்குழந்தைக்கு கற்றுத் தருபவளும் அதன் தாயே! சிங்கமும், புலியும் மற்ற மிருகங்களும் கூட தன் குட்டிகளுக்கு இதையேதான் செய்கின்றன. இரையை வேட்டையாடுவதற்கும், எதிரிகளிடம் இருந்து காத்துக் கொள்வதற்கான பயிற்சியை பெண் மிருகங்களே தன் குட்டிகளுக்குக் கற்றுத் தருகின்றன. ஆதி கால மனிதர்களும் அவ்வாறே! இயற்கையோடு இணைந்த வாழ்வில் அனுபவங்களே அறிவையும் போதித்து விடுகிறது. பெண்ணில் இருந்தே சமூகம் என்றால் அது பிறப்புறுப்பு குறித்த ரகசியமாகி விடுகிறது. அதுவே வணக்கத்திற்குரியதாய் மாறிவிடுகிறது. அக்கால சமூகம் பெண்களின் மாதாந்திர உதிரப் போக்கையும், அது நின்றால் கருத்தரித்து குழந்தை பிறக்கும் என்ற உண்மையையும் தெரிந்து கொண்டனர். ஆனால், குழந்தையின் ஜனன ரகசியதை அவர்களால் புரிந்து கொள்ள இயலாததால் அவளை தெய்வ நிலைக்கு கொண்டு சென்றனர். மாதாந்திர ரத்தப் போக்கிற்கான பருவத்தை தன் பெண் எட்டிவிட்டாள் என்ற மகிழ்ச்சியை இன்றும் கூட சமூகம் ஒரு விழாவாக நடத்தி வருவதை நாமறிவோம்.

உலகில் அன்று தோன்றி வளர்ந்து வந்த பல மதங்களிலும் பெண் முதன்மை படுத்தப்பட்டுள்ளதை கிருத்துவ வேத நூலில் ஆதியாகமம் என்னும் பிரிவில் உள்ள ஆதாம் ஏவாள் கதையில் காணலாம். பாம்பு _ கனி _ நிர்வாணம் என்னும் சொற்கள் பூடகமாக பாலுறவு குறித்த விஷயமாக இருக்கிறது என்று கிருத்துவ ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இக்கதை பாபிலோனிய பழங்குடிகளின் கதை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பின்பு பைபிளில் எடுத்தாளப்பட்டுள்ளது. இங்கும் பெண்ணே முதன்மைப் படுத்தப்படுகின்றாள். இந்து மதத்தின் ஒரு பிரிவான தாந்திரீகம் என்பதிலும் பெண்ணே முதல் தெய்வமாகக் கருதப்படுகிறாள். வட கர்நாடக மக்களிடம் இன்னும் இம்மதம் வணங்கப்படுகிறது. மகா ஞானிகள், சந்நியாசிகள் போன்றோர் அணியும் ஆடையின் நிறமும், அணியும் முறையும் கூட பெண்களைப் போன்றே இருக்கக் காரணம் பெண்ணே  ஆதிக் கடவுள்! ``மகா சக்தி'' அவளே!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா