Thursday 22 January 2015

மனிதன் மகத்தானவன் - 4

J.ஜேசுதாஸ், மாநிலச் செயற்குழு
தமுஎகச


சேலம் மாவட்டம் ஏற்காடு மலை அடிவாரத்தில் பதிமூன்று குடிசைகளில் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். அங்குள்ள வீடுகளில் ஒரு வீடு மட்டும் சற்று பெரிதாக இருந்தது. அது ஒரு விடியற்காலம். அந்த வீட்டில் உள்ளவர்கள் சற்று பரபரப்புடன் இருந்ததை நான் பார்க்க நேர்ந்தது. அனேகமாக அது ஒரு கூட்டுக் குடும்பம் போலத் தெரிந்தது. சில வயதான பெண்கள் அடுப்பு மூட்டி சமையல் செய்வதும், இளம்பெண்கள் வாசலில் வண்ணக் கோலங்கள் போட்டுக் கொண்டும், குடும்பத்தின் ஆண்கள் யாரையோ எதிர்பார்த்து மலைப்பாதையை வந்து பார்ப்பதும், பின் வீட்டிற்குச் செல்வதும், அந்த வீட்டில் ஏதோ ஒரு பெரிய விழாவை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது.

நான் அங்குள்ள ஆரம்பப் பள்ளியில் கல்லூரி மாணவர்களுக்காக ஒரு நாடகப் பயிற்சி முகாம் நடத்த அழைக்கப்பட்டிருந்தேன். இன்னும் 2 நாட்கள் அங்கு தங்க வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் தான் அந்த வீடு என் கவனத்தை ஈர்த்தது. எனக்குள் கிளர்ந்தெழுந்த ஆவலை அடக்க முடியாதவனாக ஒன்றிரண்டு சிறுமிகளிடம் உங்கள் வீட்டில் என்ன விசேஷம் என்று கேட்டேன். எங்கள் வீட்டிற்கு பட்டணத்தில் இருந்து புகைப்படக்காரர் வரப் போகிறார் என்று மட்டுமே அவர்களால் பதில் சொல்ல முடிந்தது. எனக்கோ அதுமட்டுமே காரணமாக இருக்க முடியாது என்று தோன்றியது. அந்தச் சமயத்தில் ஒரு வயதான கிழவி அந்த வீட்டினுள் இருந்து பள்ளிக்கு அருகில் வந்தாள். நான் அந்தக் கிழவியிடமே ``உங்க வீட்டுக்கு யாரோ ஃபோட்டோ எடுக்க வர்றாங்களாமே, என்ன விசேஷம்?'' என்று கேட்டேன். அதற்கு அந்தக் கிழவி சொன்ன பதிலை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை. ``நான் இன்னும் கொஞ்ச நாள்ல செத்திடுவேன், அதுக்கு முன்னாடி எங்க குடும்பமே என்கூட போட்டோ எடுத்துக்கிறதுக்குத்தான் இன்னிக்கு போட்டோக்காரர் வர்றாரு, என்னை தனியா போட்டோ எடுத்து வீட்ல வச்சி கும்பிடுவாங்க, ஏன்னா செத்ததுக்கப்புறம் நான் தான் அவங்களுக்கு சாமி'' என்றாள்.

கடந்த கால மனிதர்கள், நிகழ்கால தெய்வங்களாக மாறி வருகிற ரசவாதம் நேற்று தொடங்கியதல்ல, மனிதச் சமூகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து கொண்டே வந்திருக்கிறது. ஒரு விதத்தில் பார்த்தால் மனிதர்களின் செயல்களும், அதற்காக அவர்கள் அடைய நினைக்கும் பயன்களும் கூட தங்களின் முன்னோர்களின் காலத்தில் நடந்து முடிந்த ஒரு அனுபவப் பகிர்வாகப் பார்க்கப்படுகிறது. இன்றைக்கும் வயதான மனிதர்களிடம் நாம் பேச ஆரம்பித்தால், ``அந்தப் பஞ்ச காலத்துல எங்கப்பா எங்கள எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு காப்பாத்துனாரு தெரியுமா?'' என்றே துவங்குவார்கள். வரலாற்று கால மனிதர்கள் அநேகர் பல தேசங்களில் கடவுளராக மாற்றமடைந்து, இந்த நவீன காலத்திலும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். அப்படி அவர்களை உயர்த்துகிற போது, சில அமானுஷ்ய விஷயங்களைக் கோர்த்தே கற்பித்து, சக மனிதனை விட அவர் மேலானவர் என்று நிரூபிக்க முயல்கிறார்கள். அப்படியானால் வாழ்ந்து மடிந்த நம் முன்னோர்கள் தான் இன்றைய தெய்வங்களா? மறைந்த முன்னோர்களின் இன்றைய வாரிசுகள் புலம் பெயர்ந்து சென்றிருந்தாலும் அவர்களின் முன்னோரின் நினைவு நாளில் தங்களின் புராதன வாழ்விடத்திற்கு வந்து அவரின் நினைவுகளைக் கொண்டாடுகிறார்கள்.

இந்த முன்னோர் வழிபாடு இன்றைய உலகின் பழங்குடிகளிடம் மட்டும் அல்லாமல், மெத்தப்படித்த மேல் வர்ண மக்களிடம் இன்னும் ஆழமாக இருப்பது எதைக் குறிக்கிறது என்றால், பிணக் குழிகளில் இருந்துதான் நம்மை ஆளுகிற கடவுளர்கள் உருவானார்கள் என்பதை அல்லவா? தென் தமிழக வட்டார தெய்வங்களை நீங்கள் ஒரு முறை கண்டு வந்தால், மேலே சுட்டிக்காட்டப்பட்ட உண்மை பளிச்செனப் புரியும்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா