Wednesday 21 January 2015

கண்ணாடி

S.சுகுமார்
266\C858

``இன்னைக்கு என்னாச்சி, இவ்ளோ நேரமாகியும் முரளியைக் காணோமே! எங்க போயிருப்பான்? கொஞ்ச நாளாவே அடிக்கடி லேட்டா வர்றானே இவரு வேற இன்னிக்குப் பார்த்து சீக்கிரமா வந்துட்டாரே! ஏற்கனவே இவன் மேலே கடு கடுன்னு இருக்கார். வெறும் வாய்க்கு அவல் கிடைச்சாப் போல இவன வசைபாட வாய்ப்பு கெடச்சிடுச்சே'' என்று மனதில் உண்டான கலக்கத்தோடு மகனை எதிர்நோக்கி காத்திருந்தாள் முரளியின் தாய் பார்வதி.

வீட்டுக்குள் நுழைந்த முரளியிடம், ``அப்பா வந்துட்டார். கோபமா இருக்கார். ஏன் லேட்டுன்னு கேட்டா, கூட கூட பேசாதே!'' என்று மகனை எச்சரிக்கை செய்தாள் மெல்லிய குரலில். பார்வதி இப்படிக் கூறியதுதான் தாமதம் இவனுக்குச் சர்ரென்று கோபம் தலைக்கு ஏறிவிட்டது! ஒரு வேளை அவள் அப்படிச் சொல்லாதிருந்தால் வீட்டில் இந்தக் களேபரம் ஆகாமல் கூட இருந்திருக்கலாம். ``ஏன்டா இவ்ளோ லேட்டு! படிக்கத்தான் போறியா? இல்ல வேற எங்காவது போய்ட்டு வர்றீயா?'' இராமநாதனின் குரல் கேட்டு பதிலுக்கு ஏதோ கூறிவிட்டு, பையை ஒரு மூலையில் விட்டெறிந்துவிட்டு விருட்டென மாடிப்படி ஏறினான் முரளி.

``டேய் நான் கேட்டுக்கிட்டே இருக்கேன், தெனாவுட்டா போய்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்?'' என்று கத்தினார் இராமநாதன். ``இது என்ன வீடா? இல்ல ஹாஸ்டலா? டைமுக்கு வர்றதுக்கும், டைமுக்குப் போறதுக்கும் என் வீட்ல எப்ப வேணும்னாலும் வர்றதுக்குக்கூட எனக்கு உரிமையில்லையா?'' என்ற முரளியிடம், ``நானும் அதத்தான்டா கேட்கறேன். இது வீடா? இல்ல சத்திரமா? எப்ப வேணும்னாலும் போறதுக்கும் வர்றதுக்கும்... மணி என்ன ஆச்சி பாரு! அது இருக்கட்டும், இப்ப யார் கூட போய்ட்டு வர்ற?'', ``என் பிரண்ட் நாகலிங்கம் வீட்டுக்குப் போயிட்டு வந்தேன்.'' ``அவன் ஒரு தறுதலை, நீ ஒரு தறுதலை, அவன் கூட சேர வேண்டாம்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன் உனக்கு?'' என்றார் இராமநாதன். ``ஏன் அவன் கூட சேர்ந்தால் என்ன ஆயிடுச்சி? நான் லேட்டா வந்தது கூட உங்களுக்குப் பிரச்சனை இல்லை. அவன் கூட போனதுதான் உங்களுக்குப் பிரச்சனை?''

``ஆமாடா, அவன் கீழ் ஜாதிக்காரன், அவன் சரியா படிக்கமாட்டான். அவன்கூட சேர்றதால நீயும் சரியா படிக்க மாட்டேன்ற. இதான் பிரச்சனை!''. ``ஏம்பா, இந்த காலத்துல கூட ஜாதி ஜாதின்னு பேசறீங்க! உலகமே மாறினா கூட நீங்க மாறவே மாட்டீங்களா? பாடத்துக்கு வேண்டியதை, அவன்தான் எனக்குச் சொல்லிக் குடுத்தான். சில உதவிகள் செஞ்சான். அதுக்குத்தான் அவன் வீட்டுக்குப் போய்ட்டு வர்றேன்.'' என்றான் முரளி. ``அதை ரமேஷ், நாராயணன் கிட்ட கேட்டா செய்ய மாட்டாங்களா? அவனை விட்டா வேற யாருமே இல்லையா?'' என்றார் இராமநாதன். இடைமறித்த பார்வதி ``ஏங்க கொஞ்சம் மெதுவா பேசுங்க. அக்கம், பக்கம் யாராவது கேட்கப்போறாங்க...'' ``அம்மா இரும்மா பேசட்டும்மா, போன மாசம் எங்க கிளாஸ்ல டூர் போன போது ஆத்துல நான் மூழ்கினப்ப இவர் சொல்ற ரமேஷ், நாராயணன் என்ன பண்றதுனு தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்தப்ப, உயிரைப் பணயம் வச்சி இந்த நாகலிங்கம்தான் காப்பாத்தினான்! அதெல்லாம் மறந்து போச்சா?''

ஹைஸ்கூல் வரைக்கும் நாங்க படிக்கும்போது யார் எந்த ஜாதி, மதம்னு பார்க்குறது இல்ல. எல்லாரும் நட்பாத்தான் இருக்கோம். அப்புறம்தான் இந்த ஜாதியெல்லாம் வருது. நீங்கதானப்பா நல்ல பழக்க வழக்கங்கள் எல்லாம் சின்ன வயசுல இருந்தே வரணும்னு சொல்வீங்க. ஜாதி வித்தியாசம் பார்க்காம பழகறது நல்ல பழக்கம்தானே? ஸ்கூல்லயும் இதத்தானே சொல்லி குடுக்குறாங்க. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் எல்லாம் இதத்தானே சொன்னாங்க! ஏன் நீங்க அடிக்கடி சொல்ற புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் கூட பிறப்பில் உயர்வு, தாழ்வு பேசும் சமூகம் தன்னில் சிறக்குமோன்னு கேட்டு, என் சாதிக்கிவர் சாதி இழிவென்று சண்டையிட்டு பஞ்சாகிப் போனாரடின்னும் சொல்றார்!

தலைவர்கள் கிட்டயும், கட்சிகள் கிட்டயும் மாற்றம் வர்றதைவிட உங்களைப் போன்றவர்கள் கிட்டதாம்பா மாற்றம் வரணும்; அப்பதான் ஜாதி, மத, பேதமில்லாத, எல்லா மக்களும் ஒத்துமையா, சந்தோஷமா வாழற நல்ல சமுதாயம் உருவாகும்பா'' என்று கூறி முடித்தான்.

இடி, மழை பெய்து ஓய்ந்தது போலானது வீடு!

இராமநாதன் சிலை போலானார்! தூசு படிந்த கண்ணாடியைக் கழற்றித் துடைத்து மாட்டினார் இராமநாதன்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா