Wednesday 21 January 2015

இசையே மருந்து!

T.விநாயகம்

262/L657 Unit Assy.
98407 15545

மகத்துவமான சங்கீதத்தைக் கேட்கும் அரிய தருணத்தில் இருந்து மனிதனின் மகத்துவம் உருவாகிறது என்கிறார் இசை அறிஞர் ஆரோன் கோப்லேண்ட்.

செவிக்கு இன்பத்தைத் தரும் ஸ்வரக் கூட்டங்களின் ஒப்பற்றக் கலவையே சங்கீதம். இசைக்கு ஆதாரம் ஒலி. ஆனால், எல்லா ஒலியும் இசையாகி விட முடியாது. மனிதன் தன் அறிவாலும், சக்தியாலும், புத்திக்கூர்மையாலும் வளர்த்த கலையே சங்கீதம்.

இசை என்கிற கலையானது, நமது மனதோடு மிக நெருக்கமான தொடர்பு கொண்டது. இசைக்கு அடிப்படையான லயமும், நாதமும் நமது உடலோடும், மனதோடும் இயற்கையாகவே நீக்கமற நிறைந்து இருக்கிறது.

ஒரு நிமிடத்திற்கு 60 தட்டுகள் அல்லது 60 சிட்டிகை கொண்ட தாளத்துடன் பாடப்படும் சங்கீதம் உடலின் நாடி, சுவாசம், இரத்த ஓட்டம், இரத்த அழுத்தம், மன அழுத்தம் யாவற்றையும் சீராக வைக்க உதவுகிறது. பலமாகப் பாடப்படும் பாடல்கள் உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இசை என்பது கேட்பவரின் மனதைத் தொட்டு அவரிடம் ஐக்கியப்படுகிற கலை. அதற்கு தொடக்க உரையோ அறிமுகமோ அவசியம் இல்லை. ஒரு பாடலாசிரியர் தன் கருத்தை, மனதில் படுகிற பொருளை எழிலோடு எழுத்து மூலமாக வெளிப்படுத்தும்போது பாடலாகிறது. அதற்கு இசை வடிவம் கொடுக்கும்போது பாடலாசிரியரின் மன உணர்வும் ஆர்வமும் ரசிகனுக்குப் புரிகிறது. இதுவே இசையின் மகத்துவமாகும்.

நரம்பியல் மருத்துவர்கள் மூளை அலைகளை அவற்றின் வேகத்தைப் பொறுத்து 4 வகையாக பிரித்திருக்கிறார்கள். நாம் சுறுசுப்பாக வேலை செய்கிற நிலை _ பீட்டா அலைகள்; உயர்ந்த அறிவு நிலை அமைதியைக் காக்கும் நிலை _ ஆல்ஃபா அலைகள்; தியான நிலை, சிருஷ்டி, படைப்பாற்றல், உறக்கத்தைத் தூண்டும் நிலை _ தீட்டா அலைகள்; ஆழ்ந்த தியான நிலை, ஆழ்ந்த உறக்கம் அல்லது சமாதி நிலையைக் கொடுக்கும் நிலை _ டெல்டா அலைகள் என வழங்கப்படுகின்றன. 

மூளை அலைகளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாற்றும் சக்தி இசைக்கு உண்டு. அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத மென்மையான, நிதானமான மெல்லிசை பீட்டா அலையை ஆல்ஃபா, தீட்டா அலைகளாக மாற்றுகிறது என்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

சில இசை வடிவங்கள் உடல் நோய்களுக்கு அதிக அளவில் நிவாரணம் அளிக்கின்றன. இதில் மொசார்டின் இசை பிரதான அங்கம் வகிக்கிறது. இப்படி இசையின் மகத்துவத்தைக் குறித்தும், இசையை மருந்தாக்கி நிவாரணம் அளிப்பதைக் குறித்தும் இன்னும் விரிவாக அடுத்த இதழில் பார்ப்போம்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா