Saturday, 13 October 2012

கிரானைட் ஊழலும் காணாமல் போன பண்பாட்டின் அடையாளமும்



க.ராமையன் - 221\36038

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு பல பெருமைகள் உண்டு. இயற்கை வளங்கள் நிறைந்த மண் மதுரை. மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோயில், முதல் தமிழ் சங்கம், ஆனை மலை, அழகர் மலை, வைகை ஆறு, இராண்டாயிரம் ஆண்டு பழமையான கல்வெட்டுகள், சமணர்களின் அடையாளங்கள் பச்சைப் பசேலென்று காட்சி தரும் வயல்வெளிகள், கண்மாய், குளம் இவைகளே நம் முன் நிழலாடுகிறது.


      அத்தகைய பெருமைக்குரிய மதுரை இன்று கிரானைட் ஊழலால் திக்குமுக்காடுகிறது. இதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம். இதனாலேயே அவர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார்.

      மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியில் உள்ள மூன்று மலைகளும் அரிட்டா பகுதியில் உள்ள ஏழு மலைகளும், திருவாதவூர் மலைகளில் உள்ள சமணர் படுகைகளும், குடவறை கோயில்கள், சமண சிற்பங்கள் ஆகிய இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரிய அடையாளங்கள் கிரானைட் மாபியாக்களால் அச்சுறுத்தப்பட்டன. சமண சின்னங்கள் நிறைந்த இந்தப் பகுதிகளில் கிரானைட் கற்கள் கிடைத்ததால் படிப்படியாக அவற்றை அழித்து, கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இதில் கீழையூர் ரங்கசாமிபுரத்தில் உள்ள சமணர் படுகை மலை, புறாக்கூடு மலை முற்றிலும் சிதைந்தன. சர்க்கரை பீர்மலை எனப்படும் பொக்கிஷ மலையைத் துண்டு துண்டாக வெட்டினர்.

      இயற்கையைச் சிதைக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல், கொள்ளையே கொள்கையாகக் கொண்ட சீமான்கள் இப்போது நீதிமன்ற படிக்கட்டுகளை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். 1966 முதல் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்து அரிட்டாபட்டி மலையை டாமின் நிறுவனம் மூலம் 2008ல் குத்தகைக்கு எடுத்த கிரானைட் கம்பெனியினர், இம்மலையை வெட்ட முயன்ற போது 2011ல் உயர்நீதிமன்றக் கிளையில் இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. 400 ஏக்கர் பரப்பு கொண்ட இம்மலை நீதிமன்றத் தடையால் தப்பித்தது. ஆனாலும் பணம் கொழுத்த கிரானைட் முதலாளிகள் உச்சநீதிமன்றத்தை நாடினர். உச்சநீதிமன்றமும் தடையை உறுதி செய்ததால் மலை தப்பியது.

      கிரானைட் மாபியா கும்பல்களின் கைவரிசையால் மேலூர் கட்டிப் பனைக்குளம் வெள்ளி வீரணன்குளம், பிள்ளையார் ஊருணி, வேப்பன் கண்மாய், கீழையூர் கண்மாய், வேப்பன்குடி குளம், சூறையாடப்பட்டது. 14 கண்மாய்கள் ஆக்ரமிப்பால் பாசன வசதியை தொலைத்துவிட்டன மேலூர் வட்டத்தில் உள்ள கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி, மற்றும் செம்மினிபட்டி ஆகிய கிராமங்களில் அனுமதி பெறாமல் விதிகளை மீறி 39 லட்சத்து 431 மீட்டர் கன அளவு கொண்ட கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 16,338 கோடி ரூபாய் வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என மதுரை ஆட்சியர் உ.சகாயம் கடந்த மே மாதம் தொழிற்துறை அரசு முதன்மை செயலாளருக்கு அனுப்பிவைத்த கடிதம்தான், இன்று கிரானைட் முதலாளிகளை பிணையைத் (ஜாமீனை) தேடி நீதிமன்ற வாசலுக்கு வரவழைத்துள்ளது.

      உலக அளவில் பிரசித்தி பெற்ற கிரானைட் ரகங்களில் இந்தியாவில் கிடைப்பது 40 ரகங்கள். இவற்றில் தமிழகத்தில் மட்டும் 14 ரகங்கள் கிடைக்கின்றன. மதுரை, சிவகாசி, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் குவாரிகள் அதிகம். ஒலம்பஸ் (மு.க.அழகிரி மகன் நிறுவனம்), சிந்து கிரானைட், பிஆர்பி ஆகிய தனியார் குவாரி நிறுவனங்கள் கிரானைட் ஊழலில் பெரும்பங்கு வகிக்கின்றன. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு தெரிந்தே, அவர்களது பின்புலத்தோடு கிரானைட் ஊழல் நடந்திருக்கிறது.

      கிணற்றைக் காணவில்லை என காவல்நிலையத்தில் நடிகர் வடிவேலு சொன்னது போல மதுரையைச் சுற்றியுள்ள கண்மாய்கள், குளங்கள், மலைகள் கிரானைட் மாபியா கும்பல்களின் கைவரிசையால் உண்மையிலே காணாமல் போய்விட்டன. இந்த கிரானைட் கொள்ளையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மதுரையில் நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், முறைகேடாக கிரானைட் முதலாளிகள் சுருட்டிய பணத்தை அரசு கைப்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

      பொழுதெல்லாம் எம் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? நாங்கள் சாகவோ? என்ற முண்டாசுக் கவிஞன் பாரதியின் கோபம் நம்மைப் பற்ற வேண்டும்! ரௌத்திரம் பழக வேண்டும்! பண்பாட்டின் அடையாளங்களைச் சிதைத்தவர்களுக்கு, மக்களின் வாழ்வாதாரங்களை நொறுக்கியவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்! அது மக்களால்தான் முடியும்! மக்களால் மட்டுமே முடியும்!!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா