Saturday, 13 October 2012

இணைதளம்... ஆனால் பல தளங்களில் பிரச்சனைகள்



V.கோவிந்தசாமி 352/K302 Mechanical Maintenance

      இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் பிரதான பங்கு வகிப்பது தகவல் தொழில்நுட்பம். உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்டது. நோய் தீர கொடுக்கப்படும் மருந்தில் எப்படி பக்க விளைவுகள் உண்டோ அது போல்தான் இணைய தளமும், செல் போன்களும். உலக அளவில் இணைய தளத்தைப் பயன்படுத்தும் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. அனுப்புனர், முகவரி கையெழுத்து இல்லாமல் வரும் கடிதத்தை அனாமதேய கடிதம் என்போம்.
கொஞ்சம் வட்டார மொழியில் மொட்டை கடிதாசி என்போம். அதேபோல் இணைய தளத்தில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

      இணைய தளத்தில் நாம் ஹேக்கர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வங்கிகளின் இணையதளத்துக்குள் புகுந்து பணத்தை கொள்ளை அடிப்பவர்கள். கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடி கொள்ளையடிப்பவர்கள்தான் ஹேக்கர்கள். தேவையில்லாத மின் அஞ்சல்களுக்கு பதில் அளிப்பதன் மூலம், இணைய தளத்தின் வழியாக அறிமுகமில்லாத நிறுவனங்களில் பொருட்கள் வாங்கும் போது, தங்கள் ரகசியக் குறியீடுகளை வெளிப்படுத்திக் கொள்வதாலும் ஹேக்கர்களால் பல இழப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது.

      குறிப்பாக வலைத்தளங்களில் எதைப் பகிர்ந்து கொள்வது என்ற கட்டுப்பாடே இல்லாத நிலை உள்ளது. சமீபத்தில் இந்த வலைத்தளங்களில் ஏற்பட்ட வதந்தியால் கலவரம், உயிரிழப்பு என வட கிழக்கு மாநில மக்கள் கடுமையாகப் பாதித்தனர். அரசு எஸ்.எம்.எஸ். கட்டுபாடு கொண்டு வந்து நிலைமை சீரான பின் தளர்த்தும் நிலை ஏற்பட்டது. தேசிய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக வளர்ந்து வரும் ``சைபர் கிரைம்'' என்ற பேரால் பொருளாதார இழப்புகளை மட்டுமின்றி பெரும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்த முடியும் என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம்.

      இதற்கு முன் ஈரானின் அணுசக்தி மையத்தை முடக்க, அமெரிக்கா ஏவிவிட்ட ``ஸ்டக்ஸ் நெட்'' வைரஸ், மத்திய கிழக்கு நாடுகளை உளவு பார்க்க அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாகத் தயாரித்து பரவவிட்ட ``ஃபிளாம்'' வைரஸ் ஆகியவை இண்டர்நெட்டில் பரவியதால் இந்தியா உட்பட பல நாடுகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. சுமார் 5 ஆண்டுகளுக்கு பின்னரே இந்த வைரஸ்கள் குறித்த தகவல்கள் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளன. ஃபிளேம் வைரசை முற்றிலுமாக ஒழிக்க இப்போதுவரை வழியில்லாமல் திண்டாடும் நிலை உள்ளதாம்.

      எதிர்காலத்தில் தாக்குதல்களை நடத்த ஆயுதங்களோ, அணு குண்டுகளோ அவசியமில்லை. வேண்டாத நாடுகளைத் தாக்க வல்லரசு நாடுகளுக்கு போர் விமானங்களோ அணுகுண்டுகளோ தேவைப்படாது. நமது அருகில் இருக்கும் கம்ப்யூட்டர்களே போதும். தாக்குதல் நடத்தி விடும். இண்டர்நெட்டில் புகுந்து விடும் பயங்கரவாதிகளால், கம்ப்யூட்டர் வைரஸ்களை உருவாக்குவதில் கை தேர்ந்த சிலரது உதவியுடன், நாட்டின் மின் இணைப்பை ஒரே நேரத்தில் முற்றிலுமாகத் துண்டிக்க முடியும். அரசு நிர்வாகம், பங்குச் சந்தை போன்றவற்றில் சில நொடிகளில் சீரழிவை ஏற்படுத்த முடியும். வானில் பறந்து செல்லும் விமானங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நினைத்த இடத்தில் மோதச் செய்ய முடியும். எரிபொருள் பைப் லைன்களில் கூடுதல் வெப்பத்தை உண்டாக்கி வெடித்து சிதறடிக்க முடியும். இவற்றுக்கும் மேலாக அணுமின் நிலைய கம்ப்யூட்டர்களுக்குள் புகுந்து நாட்டையே சுடுகாடாக மாற்றிவிட முடியும். இவற்றில் எதுவுமே மிகையான காரணமல்ல. எதிர்காலத்தில் நிச்சயம் நடக்க சாத்தியமுள்ளவை.

      ஆகவே, சைபர் பயங்கரவாதிகள் எந்த வகையான தாக்குதல்களை நடத்த முடியும் என்று உறுதியாகிவிட்ட நிலையில், நாமும் இணையதள விசயத்தில் சைபராக இல்லாமல், வைரமாக மிகவும் விழிப்புடன் செயல்பட்டு நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா