Monday, 24 December 2012

தொழிலாளர் ஒற்றுமைக்கு தடையாய் இருப்பது எது?



இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை
 
சீ.அறிவுடைநம்பி
230\K450
அனல் சிகிச்சைப் பிரிவு

``ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே_நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே
                        _ பாரதியார்
      இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் நம்மை அடிமைபடுத்திய ஆங்கிலேயர்க்கு எதிராக ஓர் அணியில் நின்று ஒற்றுமையுடன் நம் பலத்தைக் காட்டிப் போராடுவதற்கு, இந்தியர்களுக்கு எழுச்சியையும் வீர உணர்வையும் கூட்டிப் புரட்சித் தீயை மூட்டிய பாடல்தான் மேலே சொன்னது. அதில் வெற்றியும் கண்டோம். இன்றைக்கு தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமைக்கு எது தடையாக நிற்கிறது என்ற கேள்வியை ஆராய்ந்து பார்த்தால் என் பார்வைக்கு மதம், ஜாதி, மொழி என மூன்று பிரிவுகளால் பிரிந்துள்ளதே காரணம் என நம்புகிறேன்.

      மதத்தால் தொழிலாளர்களின் நலன், உரிமை, பாதுகாப்புக்கு, குந்தகம் நேரும்போது, அதை வென்றெடுக்கும் துணிவும் ஒற்றுமையில் பிடிப்பும் வேண்டும். அதை விடுத்து கடவுள்களின் பெயரால் பிரிந்து வழிபாடு, சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றால் சகோதர சண்டையிட்டு, மண்டை உடைத்து பிரிந்து நிற்பதால் யாதொரு பயனும் இல்லை. இவை மதத்தின் பெயரால் நடைபெறுவதால் ஒற்றுமையின்றி பிரிந்து கிடக்கின்றனர்.      ஜாதிக்கொரு சங்கம் அல்லது நிறுவனம் அமைத்து, அதில் உயர்ந்தவன், தாழ்ந்தவன், மேட்டுக்குடி, குடிசைவாசி, நடுத்தரத்தான் என பல பிரிவாகி அதற்கு ஒரு தலைமை, அந்தத் தலைமையின் வழிகாட்டுதலால் மனித ஆற்றல்கள் விரையம் ஆகி எல்லோரும் அடையக்கூடிய பொதுவான உரிமைகள் சலுகைகள் பெறமுடியாமல் போய்விடுகிறது. அந்தந்த ஜாதிக்கொரு தொழிலாளர் சங்கம். இவர் கொள்கை வேறு, அவர் கொள்கை வேறு, பொது கொள்கையில் கூடுவது யாரும் இல்லை. இப்படி ஜாதியின் பெயரால் பிரிந்து தனி அமைப்பாய் செயல்படுவதால் மொத்த தொழிலாளர் ஒற்றுமைக்கு தடை ஏற்படுகிறது.
      தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி பேசும் இந்தியர்கள் நாம் என்பதை மறந்து, தனி மொழி உயர்வு, தாழ்வு, கருத்து வேற்றுமை, உட்பூசல், மோதல், `அதனால் தண்ணீர் தரமாட்டேன், மின்சாரம் வழங்கமாட்டேன்', `உணவு தானியம் தந்து உதவ மாட்டேன்' என்று வேற்றுமைகளை விதைத்து அதன் தொடர்ச்சியாக போராட்டம் ஒவ்வொரு மொழிக்காரரிடமும் இவன் இன்ன மொழிக்காரன் என்ற வெறுப்பு உணர்ச்சி, கசப்பான எண்ணம் ஆழப் பதிந்து, உயிர்க்கொலையில் வந்து முடிகிறது. இதனாலும் ஒற்றுமையின்மையால் வேற்றுமையே தலைதூக்குகிறது. தனித்து பிரிந்து நிற்கின்றோம்.
      இறுதியாக, தொழிலாளர்கள் என்ற ஒரே கொள்கையில் ஓர் அணியில் சேர வேண்டும். அப்போது எந்தத் தடையும் இருக்காது. அங்கு ஒற்றுமை என்ற பலம் ஓங்கி நிற்கும். ஒடுக்க நினைக்கும் முதலாளித்துவ முதலைகளை, அரசு கொண்டு வரும் தொழிலாளர் விரோத போக்கு சட்டம் இவைகளை தியாகத்தின் சின்னமாம் சிகப்பு நிறத்தின் கீழ் போராடி வெற்றி பெற இயலும். அவர்கள் தான் உண்மையான உயர் சிந்தனையுடன் உரிமைக்காகப் போராடும் குணமும் கொள்கையும், அதற்கேற்ற தூய்மையான தலைமையும் கொண்டவர்களாக உள்ளனர். தொழிலாளர்கள் என்ற ஓர் அணியில் செங்கொடியின் கீழ் தலைமை தாங்கும் தலைமையுடன் எல்லோரும் இணையும் போது எந்த தடையும் தவிடு பொடியாகிவிடும். அனைத்தையும் வென்றெடுக்க முடியும்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா