சிறுகதை
S.சுகுமார்
266/C858
``அய்யப்புதூர் ஆலமரக் கோயிலின் வினாயகர் சிலையைத்
திருடியதாகவும், அதே கோயிலில் இருந்து உண்டியலையும் கொள்ளையடித்ததாகவும் உங்கள் மீது
சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கு நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?''
குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ரங்கனைப் பார்த்து கேட்டார் நீதிபதி.
``வினாயகர் சிலையை நானாகத் திருடலைங்க. என் அத்தைதான்
திருடச் சொன்னாங்க'' என்றான் ரங்கன்! ``என்னது, அத்தை திருடச் சொன்னாங்களா? அத்தை சொன்னால்
எல்லாம் சரியாக இருக்கும் என்று அர்த்தமா?'' என்றார் நீதிபதி கோபமாக.
``என் நிலைமையில, அந்தச் சூழ்நிலைல எங்க அத்தை
வேதவள்ளி வாக்குதான் எனக்கு வேதவாக்காகப் பட்டுச்சுங்க, எனக்கும் எங்க தேடியும் வேலை
கிடைக்கல. அவங்க பொண்ணுக்கும் எங்கயும் மாப்பிள்ளை கிடைக்கல. இப்படியே இருந்தா எப்படிடா?
ஏதாவது ஒரு வேலைக்குப் போய் சம்பாதிச்சியின்னா எம்பொண்ணை உனக்கு கல்யாணம் செஞ்சி வெச்சிடுறேன்னு
சொன்னாங்க. ஒரு நாள் அவங்களே வந்து இதப்பாரு உன் வீடு முட்டுச் சந்துலே இருக்குது.
அதனாலதான் உனக்கு வேல கிடைக்கல. நீயும் விளங்காம இருக்கே, நீ என்ன பண்ற, உன் வீட்டுக்கு
முன்னாடி சின்னதா வினாயகர் கோவிலை வைச்சிடு. எல்லாம் நல்லபடியா நடக்கும்னு சொன்னாங்க.
வினாயகர் சிலையை ஏதாவது கோயில்ல இருந்து திருடிக் கொண்டு வந்து வெச்சா ரொம்ப நல்லதுன்னும்
அவங்கதான் சொன்னாங்க சார்.'' என்று நடந்ததை அப்படியே சொல்லி முடித்தான் ரங்கன்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த
நீதிபதி ``இது தப்பு என்றும், இப்படிச் செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும்
உங்களுக்குத் தோன்றவில்லையா?'' என்று ரங்கனைப் பார்த்துக் கேட்டார். ``தோணிச்சுங்க.
நான் முடியாதுன்னுதான் சொன்னேன். எங்க அத்தைதான் சொன்னாங்க `டேய் மடையா! இது காலகாலமா
நடக்கிறதுதான் எல்லோரும் வழி வழியா செஞ்சிகிட்டே வர்றதுதான். அதுதான் ஐதீகம். அதுவுமில்லாமே
அப்படித் திருடிக் கொண்டு வந்து வைக்கிற சாமிக்குத்தான் பவர் ஜாஸ்தினு அவங்கதான் சொன்னாங்க
சார்.'' என்றான் ரங்கன்.
கடுப்பாகிப் போன நீதிபதி ``சாமி சிலையைத் திருடிய
நீங்கள் அங்கிருந்த உண்டியலைக் கொள்ளையடித்தது ஏன்?`` என்று கேட்டார்.
``சார் சாமி சிலையைத் தூக்கி ஒரு கோணியில் சுற்றி
அக்குளில் வைத்துக் கொண்டு இருட்டில் தட்டுத் தடுமாறி நான் வெளியில் வந்தப்ப பின்னாலிருந்து
யாரோ கோணியைப் பிடித்து இழுப்பது போல இருந்துச்சி, மெதுவா திரும்பிப் பார்த்தேன். கோணிப்பை
அங்கிருந்த உண்டியல்ல மாட்டிக்கிட்டிருந்துச்சி. சரி, அதை எடுத்து விட்டுட்டு நான்
பாட்டுக்கு வெறும் சிலையோடு வந்துடலாம்னுதான் நினைச்சேன்... ``டேய் முட்டாளே சிலையை
எடுத்துக்கிட்ட மத்த செலவுக்கெல்லாம் என்ன செய்வேன்னு சாமியே கேட்ட மாதிரி இருந்துச்சிங்க.
இதையும் எடுத்துகிட்டுப் போன்னு சாமியே சொல்வதைப் போல எனக்குப் பட்டுச்சுங்க. அத நல்ல
சகுனமா நினைச்சு அதயும் எடுத்துகிட்டு வந்துட்டேன்'' என்றான் ரங்கன்.
நீதிபதிக்கு கண்கள் இருண்டு மயக்கம் வந்து தலைசுற்ற
ஆரம்பித்துவிட்டது. இன்று இதோடு கோர்ட் கலைகிறது. இந்த வழக்கு வேறொரு நாளைக்கு ஒத்திவைக்கப்படுவதாகக்
கூறி அங்கிருந்து ஓட்டம் எடுத்தார் நீதிபதி.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா