க.ராமையன்
221\36038
இன்று
நாடு முழுதும் கருப்புப் பணத்தைப் பற்றி கேள்விகளும் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.
கருப்புப் பணம் சம்பந்தமாக கேள்விகள் அதிகம் எழுந்தபின், பிரச்சனை உச்சநீதிமன்றம் வரை
சென்ற பின், நீதிமன்றம் பல கேளிவிகளைத் தொடுத்த பின், மத்திய அரசு பாராளுமன்றத்தில்
ஒரு வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில் 2006-ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளின் கூட்டமைப்பு
கொடுத்த அறிக்கையின்படி 1,456 பில்லியன் டாலர்கள் சுவிஸ் வங்கியில் கருப்புப் பணமாக
இருக்கிறது என்ற தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சுமார் 77 இலட்சம் கோடி பணம்,
கணக்கில் காட்டாத பணம், கருப்புப் பணம் சுவிஸ் வங்கியில் இருக்கிறது. இந்தப் பணம் நமது
பணம். இதைக் கைப்பற்றி நமது நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்.
உழைக்கின்ற
தொழிலாளர்களின் வருமான வரி அவர்களின் சம்பளத்திலேயே பிடிக்கப்படுகிறது. ஆனால், உழைப்பைச்
சுரண்டும் வர்க்கமோ வருமான வரி கட்டாமல் வரி ஏய்ப்பு மோசடி செய்கிறது. அரசும் அவர்களுக்கு
பக்க பலமாக நிற்கிறது. ஏன், அரசே முதலாளிகளுக்கு வரிச்சலுகைகளை அளிக்கிறது. உதாரணம்:
ப.சிதம்பரம் நிதியமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற போது வோடோபோன் நிறுவனம் அரசுக்கு செலுத்த
வேண்டிய ரூ.12,000\- கோடி வரி பாக்கியை வசூலிக்கத் தேவையில்லை என அறிவித்துவிட்டார்.
இன்னும் பல கோடி வரிச்சலுகைகள் முதலாளிகளுக்கு தாராளமாய் அறிவிக்கிறார்கள்.
இப்படி
வரிச்சலுகளைகள் கொடுக்கப்பட்ட பின்பும், முதலாளிகள் வருமானத்தைச் சரியாகக் கணக்கு காட்டாமல்
வரி ஏய்ப்பு செய்து பல வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணமாக பதுக்கி வைத்திருக்கிறார்கள்.
வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் பணம் எல்லாம் கருப்புப் பணம் என்று யார் சொன்னது?
இதெல்லாம் ஏன் தொழில் முதலீடாக இருக்கக் கூடாது என்று வக்காலத்து வாங்குகிறவகள் தான்
அரசு பதவிகளில் அமர்ந்து இருக்கிறார்கள். வெளிநாட்டு வங்கிகளில் சேமிக்கப்படும் பணத்தின்
மூலம்தான் போதை மருந்து வியாபாரம், தீவிரவாதச் செயல்கள் நடைபெறுவதாக பிரணாப் முகர்ஜி
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கருப்புப் பணத்தால்
நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து, விலைவாசி உயர்ந்து சாதாரணப் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்
என்றும் பிரணாப் அறிக்கையில் உள்ளது. கேப்பையில் நெய் வடிகிறது என்ற கதைதான்...
சரி...
இந்தக் கருப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? வெளிநாட்டு
வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை நமது நாட்டுக்குக் கொண்டு வர
ஒரு சட்டமும் இல்லை. அதற்கான சிறிய முயற்சி 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு
கொண்டு வந்த இரட்டை வரி விதிப்புக்கு வழி வகை செய்யும் சட்டம். இந்தச் சட்டமும் விதையில்லாமல்
உருவாக்கப்பட்ட மரபணு கத்திரிக்காய் மாதிரிதான். 2010-ல் கொண்டு வந்த சட்டம் 2012 ஜனவரியில்
தான் களத்தில் இறங்கியிருக்கிறது. முதலாளிகள் மீது முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு
உள்ள அக்கரைதான் இந்தத் தாமதத்திற்குக் காரணம்.
சுவிஸ்
வங்கியும் 782 பேருடைய பட்டியல் மட்டுமே கொடுத்தது. மற்றவர்கள் தப்பித்துக் கொண்டார்கள்.
782 பேர் யார் என்று அரசு பட்டியல் வெளியிடவில்லை. ஏன் அவர்களைப் பாதுகாக்கவா? இந்தப்
பட்டியலில் இருந்து ஹசன் அலி என்கிற ஒருவர் மட்டும் சிக்கியிருக்கிறார். அவர் வைத்திருந்த
கருப்புப் பணம் 36,000 கோடியாம். இவரைத் தான் கைது செய்தார்களே தவிர இவர் பணத்தை தொடக்கூட
முடியவில்லை என்பது வெட்கக்கேடான செய்தி. உழைப்பவன் கையில் இருக்கும் பணம் வெள்ளை,
நமது உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கிறவன் கையில் இருக்கும் பணம் கருப்பு, எது எப்படியோ...
நமது தேசத் தந்தை வெள்ளை நோட்டிலும் சிரிக்கிறார், கருப்பு நோட்டிலும் சிரிக்கிறார்.
இந்தக் கருப்புப் பணத்தைக் கைப்பற்றினால் பல ஆண்டுகளுக்கு மக்கள் மேல் வரி சுமத்தாமல்
பல 5 ஆண்டு திட்டங்கள் போட முடியும். ஆனால் ஆட்சியாளர்கள் இதைச் செய்வார்களா? செய்ய
மாட்டார்கள்.
2012ல்
பிப்ரவரி மாதம் சிபிஐ இயக்குநர் எ.பி.சிங் தலைமையில் ஒரு குழு அமைத்து வெளிநாட்டில்
உள்ள கருப்புப் பணத்தை மீட்க ஆராய்ச்சி என்பது கண்துடைப்பு நடவடிக்கையாகத் தான் உள்ளது.
பிஜேபி, காங்கிரஸ் என எந்த முதலாளித்துவ அரசு வந்தாலும் கருப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை
எடுக்கப் போவதில்லை. இதற்கு வழியே இல்லையா?.... ஏன் இல்லை?
உழைக்கிறவன் கையிலே உலகம் வரும் நாளிலே
உறுதியாய் மாற்றிடுவாம் இந்த நிலைமை பொய்யில்லே...
இதுதான் நிரந்தரத் தீர்வு. அதை நோக்கிய பயணத்தில்
ஒன்றிணைவோம்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா