மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா...
ஒன்னைப் போல அவனைப் போல
எட்டு சாணு ஒசரமுள்ள மனுஷங்கடா...
டேய் மனுஷங்கடா...
நாங்க மனுஷங்கடா...
ஒங்க தலைவர் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
ஒங்க ஊர்வலத்துல தரும் அடிய வாங்கிக் கட்டவும்
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும்
நாங்க இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்
டேய் மனுஷங்கடா...
நாங்க மனுஷங்கடா...
எங்களோடு மானம் என்ன தெருவுல கெடக்கா
ஒங்க இழுப்புக்கெல்லாம் பணியறதே எங்களின்
கணக்கா?
ஒங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா?
நாங்க வீடு புகுந்தா ஒங்க மானம் கிழிஞ்சி
போகாதா
டேய் மனுஷங்கடா... நாங்க மனுஷங்கடா...
குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாச் சுட்டது - இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது
டேய் மனுஷங்கடா... நாங்க மனுஷங்கடா...
சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது
ஒங்க சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க
நாங்க எரியும் போது எவன் மசுர புடுங்கப் போனீங்க
டேய் மனுஷங்கடா... நாங்க மனுஷங்கடா...
- மக்கள் பாவலர்
தோழர் ``இன்குலாப்''
(1\2 படி நெல் கூலி உயர்வு
கேட்டதற்காக 44 பேரை உயிரோடு
எரித்த தஞ்சை கீழ்வெண்மணி
தியாகிகளின் நினைவாக
எழுதப்பட்ட கவிதை)
டிசம்பர் 25
வெண்மணி தியாகிகள் நினைவு தினம்
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா