Wednesday 13 February 2013

தொழிற்சங்க அரங்கில் நமது கடமைகள் - பாகம் 2

உபரி மதிப்பு
      ஆரம்பகால சமூகத்தில் பண்ட மாற்றுமுறை இருந்து வந்தது. நெற்பயிர் செய்தவன் நெல்லையும், பழங்களைப் பயிர் செய்தவன் பழங்களையும் கொடுத்து பரிமாறிக் கொண்டனர். நாளடைவில் சமூகத்தில் விஞ்ஞானம் வளர்ச்சி பெற்று உற்பத்தி முறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. விலங்குகளையும், உடல் உழைப்பையும் கொண்டு உற்பத்தி செய்தவர்கள் எந்திரங்களின் துணை கொண்டு உற்பத்தியில் ஈடுபட்டனர். பண்டமாற்று முறை ஒழிந்து பணம் எனும் பொதுவான வர்த்தக பரிவர்த்தனை சாதனம் உருவானது. உற்பத்தி சக்திகளில் ஏற்பட்ட மாற்றம், உற்பத்தி உறவுகளிலும் ஏற்பட்டது. ஆண்டான் (அரசன்) அடிமை (வேலை செய்பவர்கள்) முறை விஞ்ஞான வளர்ச்சியால் உருவானது. உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ் மஹால் பல்வேறு அடிமைகளைக் கொண்டு அக்காலகட்டத்தில் கட்டப்பட்டது.
அப்போதைய சமூக உற்பத்தி முறையில் அரசன் அடிமைகளைப் பயன்படுத்தினான். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் மீண்டும் ஒரு தாஜ்மஹாலை கட்ட முதலாளிகள் மட்டுமே முன் வர முடியும். அதைக் கட்டி முடிக்க தொழிலாளர்கள் தேவைப் படுவார்கள். இது இன்றைய சமூக உற்பத்தி முறை ஆகும்.
      மூலப் பொருள்களையும், உற்பத்தி சாதனங்களையும் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்ட முதலாளிகள், அதை உற்பத்தியில் ஈடுபடுத்திப் பொருள்களாக மாற்றம் செய்யத் தொழிலாளர்களைப் பயன்படுத்துகின்றனர். உற்பத்தி - விநியோகம் என்ற இரண்டு முக்கிய நிலைகளே வர்த்தகத்தை தீர்மானிக்கிறது. உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்யும் களம் - சந்தை (மார்கெட்). உலகில் எவ்வளவோ பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அரிசியும் உற்பத்தியின் மூலம் வருகிறது. தங்கமும் வருகிறது. 1 கிலோ அரிசி ரூ.40 \-, 1 கிலோ தங்கம் விலை பல லட்சங்களைத் தாண்டுகிறது. அளவில் சமமாக உள்ள இரண்டு பொருள்களிடையே ஏன் இந்த வித்தியாசமான விலை. ஒரு பொருளுக்கு விலை, மதிப்பு என்று இரண்டு தன்மை உள்ளது. விலை வேறு, மதிப்பு வேறு. விலை சந்தை நிலவரத்தைப் பொறுத்து ஏறும், இறங்கும். மதிப்பு நிலையானது. மதிப்பில் இருந்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. உதாரணத்திற்கு அரிசி எவ்வளவுதான் விலை ஏறினாலும் தங்கத்திற்கு இணையாக ஏறாது. அதேபோல தங்கம் எவ்வளவுதான் விலை குறைந்தாலும் அரிசியின் விலை அளவுக்கு குறையாது. ஏன் இந்த முரண்பாடு? அரிசியும், தங்கமும் உற்பத்தி செய்யப்படும் தன்மையைப் பொருத்து அதன் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. சரி போகட்டும்! ஒரு பொருளுக்கு மதிப்பு எப்படி வருகிறது? முதலாளி மூலதனம் போடுகிறான் (அவருக்கு     மூலதனம் எப்படி வந்தது என்பது தனிக்கதை. அதைப் பின்பு பார்க்கலாம்). மூலதனம் என்பது கச்சா பொருள், இயந்திரம், கருவிகள் ஆகியன. இவை முதலாளிக்கு சொந்தமானது. இதையெல்லாம் முதலாளி எனக்குச் சொந்தமானது என்றும், என் சொத்து என்றும் அப்படியே வைத்திருந்தால் உலகில் எந்த பொருளும் உற்பத்தி ஆகாது. உற்பத்தி செய்ய தொழிலாளர்கள் வேண்டும். தொழிலாளியிடம் அவரைத்தவிர அவரிடம் எந்தப் பொருளும், சொத்தும் இல்லை. முதலாளி கொடுக்கும் கச்சா பொருள், இயந்திரங்கள், கருவிகள் மீது தன் உழைப்பைச் செலுத்துகிறார். அதாவது முதலாளியிடம் தன் உழைப்பையும், நேரத்தையும் தொழிலாளி விற்பனை செய்து அவர் தரும் கூலியைப் பெறுகிறார். இங்குதான் பிரச்சனை துவங்குகிறது. வெறும் கல்லாக இருப்பதின் மேல் தொழிலாளி உளியும், சுத்தியலையும் (இது முதலாளி கொடுத்தது) வைத்து தன் உழைப்பைச் செலுத்துகிற போது, அழகான சிற்பம் உருவாகிறது. ஒரு சாதாரண கல்லுக்கு மதிப்பு எப்போது வருகிறது என்றால் அதன் மேல் உழைப்பு செலுத்தும் போது மட்டுமே. வெறும் கல்லையும் (கச்சாப் பொருள்), உளி, சுத்தி (உற்பத்தி கருவிகள்) இருந்தால் மட்டும் ஒரு பொருளுக்கு மதிப்பு வராது. தொழிலாளி அதன் மேல் உழைப்பைச் செலுத்துகிற போது அதற்கு மதிப்பு உண்டாகிறது.
      அந்த மதிப்பில் ஒரு பகுதியைத் தொழிலாளிக்குக் கொடுத்துவிட்டு ஒரு பகுதியைக் கபளீகரம் செய்கிறார் முதலாளி. அந்தப் பகுதியே உபரி மதிப்பு. அதாவது உழைப்பின் முழு விலையை உழைப்பவனுக்குத் தராமல் ஏய்க்கும் கொடுக்கப்படாத சம்பளமே உபரி மதிப்பு.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா