எம்.ஆதிகேசவன்
- 264 / ஜெ066
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னை பல்கலைக் கழகத்தில்
டாக்டர் அம்பேத்கர் பற்றி ஆற்றிய சொற்பொழிவே நூல் வடிவம் பெற்று வந்துள்ளது. அம்பேத்கர்
பிறந்து, வாழ்ந்து,
இறந்த பின்பும் இன்றும் அவர் தேவைப்படுகிறார் என்பதே இந்நூல்
நமக்குத் தரும் செய்தி.
மராட்டிய மாநிலத்தில், சாதிக்
கொடுமைக்கு எதிராக, சமூக சீர்திருத்த இயக்கத்தை நடத்திய ஜோதிபா பூலேயின் சமரசமற்ற
போராட்டத்தின்பால் கவரப்பட்ட டாக்டர் அம்பேத்கர், 1924-ம் ஆண்டு, சமூகத்தால்
புறக்கணிக்கப்பட்டோர் நலச்சபை என்ற அமைப்பை உருவாக்கி தலித் மக்களின் மேம்பாட்டிற்காகச்
செயல்படத் தொடங்கினார். திருவிதாங்கூர் பகுதியில் வைக்கம் என்ற இடத்தில் தந்தை பெரியார்
தலைமையில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு இயக்கம் போன்ற பல நிகழ்வுகள் டாக்டர் அம்பேத்கரை
நேரடி நடவடிக்கையில் ஈடுபடத் தூண்டியது.
சவுதார்குளப் போராட்டம், பகிஷ்கார
பாரதம் என்ற பத்திரிகை, சைமன் கமிஷனுக்கு மனு, நாசிக் கோயில் நுழைவுப் போராட்டம்
என பல நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1938ம் ஆண்டு பம்பாய் அரசு தொழிலாளர்களின்
வேலை நிறுத்த உரிமையைப் பறிக்க தொழில் தகராறு மசோதா கொண்டு வந்த போது, கம்யூனிஸ்ட்
கட்சியோடு இணைந்து இந்தச் சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் எதிர்த்தார். டாக்டர் அம்பேத்கர்
தனது இறுதி நாளில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுத்தார். ஒன்று இந்து மதத்தில் இருந்து
வெளியேறி புத்த மதத்தைத் தழுவினார். அடுத்தது, அனைத்துப் பகுதி மக்களையும்
உள்ளடக்கிய ஒரு அரசியல் கட்சியை உருவாக்க வேண்டுமென முடிவெடுத்தார். அவரது மறைவுக்கு
பத்து மாதங்களுக்குப் பிறகே அவர் கருதிய குடியரசுக் கட்சி உருவாகியது.
1956, டிசம்பர்
6ல் டாக்டர் அம்பேத்கர் இயற்கை எய்திய போது, கம்யூனிஸ்ட் கட்சி தனது இரங்கல்
செய்தியில்,
``காலமெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்கு, அரும்பாடு
பட்டார். ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் தீவிர உணர்ச்சிக்கு தனிப் பெரும் பிரதிநிதியாக
விளங்கி, இந்து சமூகத்தில் காணப்பட்ட தீண்டாமையை அகற்ற கலகப் போர்க் கொடியை உயர்த்தினார்.
இந்து சமூகத்தின் கொடுமைப்படுத்தும் கூறுகளை எல்லாம் கூண்டோடு எதிர்த்த புரட்சியின்
சின்னமாக அவர் விளங்கினார்.'' என்று குறிப்பிட்டது.
தீண்டாமைக் கொடுமை என்ற தீயை
அணைக்க யாரெல்லாம் வருகிறார்களோ அவர்களையெல்லாம் இணைத்து ஒரு மகத்தான இயக்கத்தை நடத்துவதே
இன்றைய தேவை. அப்பணியைச் செவ்வனே செய்து வருகிறது தமிழ்நாடு தீண்டாமை முன்னணி. 52 வகையான
தீண்டாமை வடிவங்கள் தமிழ்நாட்டில் உள்ளன என்று ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. இதையெல்லாம்
பார்க்கும் போது டாக்டர் அம்பேத்கரின் இன்றைய தேவையை நாம் உணர முடிகிறது. 32 பக்கங்கள்
கொண்ட, ரூ.10\- விலையுள்ள அற்புதமான இந்த நூல் அனைவரும் படிக்க வேண்டிய நூலாகும். நமது வர்க்க
ஒற்றுமைக்கு அது அவசியமும் கூட!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா