சு.சக்கீர் - 240\J030
உலக நாயகனே...
உங்களுக்கு இப்படி ஒரு சோதனையா என்று பரிதாபப்படும் அளவுக்கு,
விஸ்வரூபம் திரைப்படச் சிக்கல் உருவாகியுள்ளது. மருதநாயகம்,
மர்மயோகி என ஒரு சில திரைப்படங்கள்,
தயாரிப்பு நிலையிலேயே நிறுத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது
கூட நீங்கள் இந்த அளவு வருத்தப்பட்டிருக்க மாட்டீர்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
ஆட்சிகாலத்தில், கருத்துச்
சுதந்திரம், பத்திரிகைச்
சுதந்திரம் பாதுகாக்க தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் போன்ற அமைப்புகள்
நடத்திய போராட்டங்களில் முன்னணியில் அணிவகுத்து நின்றவர் நீங்கள்.
உங்கள் பெயரில் உள்ள இஸ்லாமிய அடையாளத்தைப் பார்த்து,
சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்ததை நீங்கள் மறந்திருக்க
மாட்டீர்கள். உலக அரசியலை, ஆழமாக
அறிந்தவர் என்ற முறையில், மதத்
தீவிரவாதத்தின் பேராபத்துகளைப் புரிந்தவர் நீங்கள். மனித நேயம்,
மத நல்லிணக்கம், சமூக அமைதி போன்ற விஷயங்களில் ஒரு பொறுப்புள்ள கலைஞனாகத் தான் உங்களால் செயல்பட
முடியும். அப்படிப்பட்ட கமலிடமிருந்து, மத நல்லுறவை பாதிக்கின்ற ஒரு திரைப்படம் வெளிவர வாய்ப்பே இல்லை. பிறகு ஏன் இவ்வளவு
பிரச்சனைகள்.
தீவிரவாதத்திற்கு ஏதாவது ஒரு மத அடையாளம் கொடுப்பது,
இருட்டினால் ஓட்டையை அடைக்கும் முயற்சியாக மட்டுமே ஆகிவிடும்.
மத அடிப்படையில் உருவான அமைப்புகளுக்கு இடையே ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. ஒரே மதக்
கொள்கைகள் உள்ளவர்கள்கூட அமைப்பு ரீதியாகத் திரளும்போது பிரிவுகள் உண்டாகிவிடுகிறது.
இந்தப் பிரிவுகள் ஒன்றுக்கு ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு தங்களைப் பிரபலப்படுத்த
முயல்வார்கள். ஒரே இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு இடையே,
இத்தனை அமைப்புகள் தேவையா என்று நாம் கேள்வி எழுப்பினால்,
அது மதத்தை இழிவுபடுத்துவதாக சித்தரித்துவிடுவார்கள். இந்துத்துவாவை
பிரபலப்படுத்த, மாலேகான்
குண்டுவெடிப்பு, சம்சௌதா
எக்ஸ்பிரஸ் தீ வைப்பு போன்ற சம்பவங்களை உருவாக்கி, பழியைச் சிறுபான்மையினர் மீது போட்டுவிட்டார்கள் என்பது இன்று நிரூபணமாகியுள்ளது.
இதுதான், தீவிரவாதத்தின்
பொதுவான குணாம்சம்.
இதற்கு ஒரு மறுபுறம் இருப்பதையும் நாம் மறுக்க முடியாது. ஏகாதிபத்தியப் பெருமை
பேச ஜேம்ஸ்பாண்டு படங்களை உருவாக்கியது போல, சோசலிச முகாமை இழிவுபடுத்த ஏழாம் அறிவையும், மாற்றான்களையும்,
தயார் செய்ததைப் போல, சிறுபான்மையினரை சிறுமைப்படுத்த வட்டிக்கடை சேட்டையும்,
பாகிஸ்தான் தீவிரவாதியையும் இஸ்லாமியப் பெயர்ச்சூட்டி கதாப்பாத்திரங்களாகத்
திணிக்கும் போக்கு இந்திய திரைப்படத்துறையில், பல்லாண்டுகளாக இருந்து வருகிறது.
ராஜபார்வை, அன்பே
சிவம், மகாநதி,
குருதிப்புனல், இந்தியன் போன்ற கருத்துமிக்க திரைப்படங்களில் பணியாற்றிய நீங்கள் இத்தகைய போக்குகளை
ஆதரிக்கமாட்டீர்கள் என்பதை உலகமறியும்.
``விஸ்வரூபம்'' மத நல்லிணக்கத்தை
போற்றும் நல்ல படமாக அமையும் என்று நீங்கள் உங்கள் பேட்டியில் சொல்லியிருக்கிறீர்கள்.
ஆனாலும், சிறுபான்மை
மக்களிடம் அச்சம் தீர்ந்தபாடில்லை. மத அடிப்படைவாதக் குழுக்களிடமுள்ள முரண்பாடுகள்,
பிரச்சனைகளை சுமுகமாகத் தீர்த்துவிட வேண்டும் என்று ஒரு போதும்
விரும்பாது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், பொறுமையாகவும், திறந்த
மனதுடனும் கருத்தொற்றுமைக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.
சமூக மாற்றத்தை
ஏற்படுத்த விரும்பும் நல்லவர்கள் உங்கள் பக்கம் நிச்சயமாக நிற்பார்கள்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா