Sunday, 21 April 2013

தோழர் வி.பி.சிந்தனே உந்தன் நினைவுகள் அழியவில்லை


கவிஞர் வறிவன் (எஸ்.உமாகாந்தன்)

 

மே.8 வி.பி.சி. நினைவு தினம்

 

தோழர் வி.பி.சிந்தனே...

நீங்கள் மறைந்தாலும்

உந்தன் நினைவுகள் அழியவில்லை!

தோழர் என்று நீங்கள்

அன்போடு அழைக்கும் போது

எதையும் சாதிக்கும்

துணிச்சல் பிறக்கும்!

வானமே எங்கள் வசப்படும்!

அன்று...

போராட்டக்களத்தில்

கத்திக்குத்தால்

இரத்தம் இழந்த நிலையில்

எஞ்சிய இரத்தமும்

தொழிலாளிக்குத்தான்

என்று பிரகடனம் செய்த

தோழர் வி.பி.சிந்தனே!

நீங்கள் மறைந்தாலும்

உங்கள் நினைவுகள் அழிவதில்லை!

முதலாளிகளுக்கு

நீங்கள் சிம்ம சொப்பனம்!

தொழிலாளர்களுக்கோ

நீங்கள் அருமை பொக்கிஷம்!

தவறு செய்பவர்களைக் கூட

அன்பால் திருத்தியவர் நீங்கள்!

உங்களைத் தாக்க வருபவர்களைக் கூட

கும்பிட வைத்தவர் நீங்கள்!

அசோக் லேலண்டில்...

போனஸ் சட்டம், செட்ஆப், செட்ஆன்

எல்லாம் அறிய வைத்தது நீங்கள்!

நீங்கள் தலைவரான பிறகுதான்

தொழிற்சங்க ஜனநாயகம் என்றால்

என்னவென்று தெரிந்தது!

தொழிலாளர்களின் பலத்தை

தொழிலாளர்களுக்கே உணர வைத்தவர் நீங்கள்!

உங்களின் பன்முகத் தன்மை

எங்களை பிரமிக்க வைக்கிறது!

இலக்கியவாதியாய்...

இயக்கவாதியாய்...

சித்தாந்தவாதியாய்...

படைப்பாளியாய்...

தொழிற்சங்கத் தலைவராய்...

சட்டமன்ற உறுப்பினராய்...

எத்தனை பணிகள்! எத்தனை பணிகள்!

அத்தனை பணிகளிலும்

முத்திரை பதித்த

சாதனைத் தலைவர் தாங்கள்!

தோழர் வி.பி.சிந்தனே!

நீங்கள் மறைந்தாலும்

உங்கள் நினைவுகள் மறையவில்லை!

நீங்கள் காட்டிய பாதையில்

இலட்சிய தீபம் ஏந்தி நடக்கிறோம்!

சோசலிச உலகம் படைத்துக் காட்டுவோம்!

- கவிஞர் வறியவன்

(எஸ்.உமாகாந்தன்)

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா