Sunday, 21 April 2013

சங்கத் தேர்தல் ஒரு கண்ணோட்டம்


தலையங்கம்

 

      மிகவும் பரபரப்பான ஒரு சூழலில் லேலண்டு தொழிற்சங்கத் தேர்தல் மார்ச் 27ம் தேதி அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது. வெற்றிபெற்ற அனைவருக்கும் உரிமைக்குரலின் நல்வாழ்த்துக்கள். ஒரு தொழிலுக்கு ஒரு தொழிற்சங்கம் என்ற இயக்கம் சென்னையில் வேரூன்றிய 1970-75 காலகட்டத்தில் இருந்த போராட்டச் சூழல் இன்று இல்லை என்றாலும், ஏராளமான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. அதில் மிக முக்கியமானது, தொழிற்சங்க ஜனநாயகம் குறித்த ஆழமான விவாதங்கள்தான். கடந்த பதினைந்து மாதங்களில், லேலண்டு தொழிலாளர்களுக்கு கிடைத்த பணப்பயன்களாக இருந்தாலும், வேலை வாய்ப்புக்கான களத்தை அமைக்கும் பணியாக இருந்தாலும், தொழிலாளர்களின் அன்றாட பிரச்சனைகளாக இருந்தாலும், சங்கத் தலைவர் நம்பிராஜன் அவர்களின் சீரிய வழிகாட்டுதலோடு, சங்க நிர்வாகிகள் சுதந்திரமாகச் சிந்தித்து, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, முடிவுகளை மேற்கொள்ளும் ஆரோக்கியமான ஒரு பண்பாடு நிலவியது. பிரச்சனைகளை நிர்வாகத்துடன் நேரடியாக விவாதிக்க சங்கப் பொதுச்செயலாளர் சற்குணன் உட்பட அனைத்து சங்க நிர்வாகிகளுக்கும் தோழர் வி.பி.சிந்தன் போல் சங்கத் தலைவர் தோழர் ப.ச.ச. வாய்ப்பளித்தார் என்பது, அவரது ஜனநாயக ரீதியான அணுகுமுறைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

      தேர்தலின் போது பிரச்சார மேடையிலும், துண்டறிக்கையிலும், இரு அணியினரும் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் வரும் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையாக மாற வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை மிக விரைவாக நிறைவேற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

      சங்கத்தின் கூட்டுபேர சக்தியை வலுப்படுத்திடவும், சங்கத்தின் சாதனைகளை தொழிலாளர்களின் ஒற்றுமையின் பயனாகத் தான் உருவாக்க முடியும் என்ற உயரிய பண்பினை வளர்த்தெடுக்கவும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவரும், சங்க நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் மனப்பூர்வமாக முயல வேண்டும்.

      வெற்றி பெற்ற அனைவருக்கும் உரிமைக்குரலின் வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா